
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
பெட்டாலிங் ஜெயா, பிப்.29:
மலேசிய அருள்மிகு திருமுருக திருவாக்கு திருபீடத்தின் தோற்றுநரும் சிவனிய அடிகளுமாகிய தவத்திரு பாலயோகி சுவாமிகளின் அருளாசியுடன் இந்து சமய கருத்தரங்கமும் இந்து கலை களஞ்சியத் தொகுப்பு கையளிப்பும் நடைபெற திருவருள் கூடியுள்ளதாக ‘சமய செல்வர்’ கண்ணா தெரிவித்துள்ளார்.
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் உள்ளடக்கிய இந்து சமயம் குறித்த மொத்த தகவலையும் உள்ளடக்கி, சமயப் பேழையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இந்து கலை களஞ்சியம் 12 தொகுப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் நெடுங்கணக்கு அகர வரிசைப்படி அக்கமா தேவியில் தொடங்கி வைரவர் என்னும் சொல்லுக்கான விளக்கத்துடன் நிறைவுபெறும் இந்த கலை-களஞ்சியம், மீண்டும் கிரந்த எழுத்துக்களான ஜ-வரிசையில் ஜடா வர்மன் சுந்தர பாண்டியன் என்னும் சொல்லுடன் தொடர்கிறது. ஹொய்சலர் கலைப்பாணி என்னும் சொல்லுக்கான விளக்கத்துடன் முழுமைபெறும் இந்த கலை களஞ்சியத் தொகுப்பு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப் பெற்றது.
டான்ஸ்ரீ குமரன், டத்தோஸ்ரீ தெய்வீகன், துணை அமைச்சர் சரசுவதி உள்ளிட்டோர் பங்குபெற்ற அந்நிகழ்வில், அன்பர்கள் பலரும் நன்கொடை வழங்கி இந்து கலை களஞ்சியத் தொகுப்பை மகிழ்வோடுப் பெற்றுக் கொண்டனர்.
பன்னாட்டுத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இந்துக் கலைக் களஞ்சியத்தின் முதல் தொகுப்பு, 405 பக்கங்களைக் கொண்டுள்ளது; இதில், ‘அ’ முதல் ‘ஈ’ வரையிலான சொற்கள் இடம்பெற்றுள்ளன; 188 பக்கங்களைக் கொண்ட 2-ஆம் தொகுப்பில் ‘உ’ முதல் ‘ஔ’ வரையிலான சொற்கள் இடம்பெற்றுள்ளன. 275 பக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள 3-ஆவது தொகுப்பு, ‘க’கர வரிசைக்கானது; ‘கா’ முதல் ‘கௌ’ வரையிலான சொற்களைக் கொண்ட நான்காவது தொகுப்பு 280 பக்கங்களைக் கொண்டுள்ளது; ‘ச-சா’ ஆகிய இரு எழுத்துக்களுக்கான 5-ஆம் தொகுப்பு 216 பக்கங்களை உள்ளடக்கியது; ‘சி’ முதல் ‘சௌ’ வரையிலான சொற்களுக்கான 6-ஆம் தொகுப்பு 356 பக்கங்களைக் கொண்டுள்ளது.
7-ஆம் தொகுப்பில் 379 பக்கங்கள் உள்ளன; ‘ஞா’ முதல் ‘தி’வரையிலான சொற்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 387 பக்கங்களைக் கொண்டுள்ள 8-ஆம் தொகுப்பில் ‘தி’ முதல் ‘தோ’ வரையிலான சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன; அதைப்போல, 359 பக்கங்களுடனான 9-ஆவது தொகுப்பு ‘ந’ முதல் ‘நௌ’ வரையிலான சொற்களுக்குரியது; 10-ஆம் தொகுப்பில் உள்ள 374 பக்கங்கள் ‘ப’ முதல் ‘பௌ’ வரையிலான சொற்களை அடக்கியுள்ளது. 328 பக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள 11-ஆம் தொகுதி ‘ம’ முதல் ‘மௌ’ வரையிலான சொற்களுக்குரியது. நிறைவுத் தொகுதியான 12-ஆம் தொகுப்பில் ‘ய’ முதல் ‘ஷ’ வரையிலான சொற்கள் 534 பக்கங்களை ஆக்கிரமித்துள்ளன.
இந்து சமயம் குறித்த முழு விளக்கத்தை அளிப்பதுடன், அனைத்து ஐயத்தையும் தீர்க்கவல்ல இந்த இந்து சமய கலை-களஞ்சியத்தை.., அதில் பொதிந்துள்ள விளக்கம்-கருத்தை அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் அரிய முயற்சியில் தவத்திரு பாலயோகி சுவாமிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக சமய-வர்த்தக செல்வர் கண்ணா தெரிவித்துள்ளார்.
கண்ணைக் கவரும் படங்கள், உள்ளத்தை அள்ளும் கருத்துடன் ஏறக்குறைய 4,200 வண்ணப் பக்கங்களைக் கொண்டுள்ள இந்தக் கலை-களஞ்சியத் தொகுப்பை, தமிழ்ப் பள்ளிகள் மற்றும் ஆலயங்களின் நூலகங்களுக்கு விலையில்லாமல் உபயமாக வழங்கும் நிகழ்வு, வரும் சனிக்கிழமை-02.03.2024 காலை 9:45 மணி அளவில் பெட்டாலிங் ஜெயா, ஜலான் சிலாங்கூர், அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற உள்ளது.
தவத்திரு பாலயோகி சுவாமிகளின் ஆலோசனையின் வண்ணம், கல்வித் தளம் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு பெருஞ்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த சமயக் களஞ்சியத் தொகுப்பான ஞானப் பேழைகளை வழங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் இருந்து வந்த விண்ணப்பங்கள் ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டன.
கச்சிதமான நேர வரையறையுடன் பகல் 1:00 மணி அளவில் நிறைவுபெறும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உன்னத நிகழ்ச்சியில், இந்து சமய கருத்தரங்கமும் இடம்பெற உள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வழக்கறிஞரும் இலக்கியச் சான்றோருமான முனைவர் திருமதி சந்திரிகா சுப்பிரமணியம், மலேசியாவின் சமய-இலக்கிய தகைமையாளர்களான பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ். இராஜேந்திரன், டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன், டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன், பேராசிரியர் திலகவதி அம்மையார், டத்தோ டாக்டர் கதிரேசன், முனைவர் பாலகிருஷ்ணன் கந்தசாமி ஆகியோர் பங்குபற்றும் இந்து சமய கருத்தரங்கம், ஒரு சமய ஞானமன்றமாக அமையும்.
மலேசிய பன்னிரு திருமுறை மையத்தின் சிவத்திரு ஆதிமூல ஓதுவாரும் அவர்தம் மாணவர்களும் வழங்கும் திருமுறைப் பாராயணமும் இடம்பெறும்.
நாடு முழுவதிலும் இருந்து பள்ளிகள் மற்றும் திருக்கோவில்களின் பொறுப்பாளர்களும் சமய-சமுதாயப் பிரமுகர்களும் கலந்துகொள்ள இருக்கும் இப்பெருவிழாவில் டான்ஸ்ரீ க. குமரன் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.
இத்தகைய நல்ல நிகழ்வில் இந்து சமய இயக்கங்களை சார்ந்த அன்பர்கள், திருபீடத்தின் அங்கத்தினர்கள், மற்றும் சமயச் செல்வர்கள் அதிக அளவில் கலந்துகொள்ள உள்ளனர். அதனால், இந்தப் பெருவிழாவில் கலந்துக்கொள்ள விரும்பும் அன்பர்களும் ஆதரவாளர்களும் 016-6890615 என்ற எண் மூலம்(புலனம்) பதிந்துக்கொண்டு அழைப்பினை உறுதிசெய்து கொள்ளும்படி திருபீடத்தின் கௌரவப் பொதுச் செயலாளர் கண்ணா கேட்டுக்கொள்கிறார்.