
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 05:
ஆலயங்களில் பூசை முடிந்தபின், பக்தர்களுக்கு திருநீறு, குங்குமம் போன்றவற்றை வழங்கும் அர்ச்சகர்கள், அவற்றை பக்தர்களின் கைகளில் வழங்குவது எல்லா வகையாலும் நல்லதென்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘ஸ்ரீகாசி-சங்கபூசன்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
சமய எல்லையில், ஆன்மிகப் பயணத்தின் நெடும்போக்கில் எந்த நேரத்தில் எது குறித்த சர்ச்சை எழும் என்று தெரியவில்லை.
இப்பொழுது, ஏதோவோர் வழிபாட்டு தலத்தில் யாரோ ஒரு குருக்கள், பூசை முடிந்தபின் யாரோ ஒரு பெண்ணின் நெற்றியில் திலகம் இட்டுவிட்டார் என்று சற்று சலசலப்புடன் பேசும் காணொளி சமூக ஊடகத்தில் பரப்பப்படுகிறது.
அப்படியே, இந்து சங்கத்தின்மீதும் கேள்விக் கணை பாய்ச்சப்படுகிறது.

உண்மையில், இந்தச் சம்பவம் தவிர்த்திருக்கப்பட வேண்டும். பக்தர்களோ, அர்ச்சகர்களோ எந்தத் தரப்பினராக இருந்தாலும் அவரவரும் தத்தம் நிலையில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
பூசை முடிந்தபின், சம்பந்தப்பட்ட பெண், குங்குமத்தை கையில் பெற்றிருக்கலாம்; அவர் உணராதபட்சத்தில் குருக்களாவது ஒரு பெண்ணுக்கு குங்கும பிரசாதத்தை நெற்றியில் இடாமல் கைகளில் வழங்கி இருக்கலாம். மாறாக, ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் இட்டதை தற்காத்துப் பேசும் அர்ச்சகரின் போக்கும் பொருத்தமாக இல்லையென்று இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் குறிப்பிட்டுள்ளார்.