
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூன் 07:
இந்தியா என்னும் நாடு கட்டமைக்கப்படுவதற்கு பல ஆயிர ஆண்டுகளுக்கு முன்னமே பெயரோடும் புகழோடும் படை வலிமையோடும் திகழ்ந்த நாடு, தமிழ் நாடு; அத்தகைய பாரம்பரியத்தைக் கொண்ட தமிழர் ஒருவருக்கூட தன்னுடைய தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 10 ஆண்டுகளாக இடமளிக்காதவர் நரேந்திர தாஸ் தாமோதர மோடி; அதைப்போல டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் தன்னுடைய அமைச்சரவையில் பாரம்பரிய தொல்குடியினரான தமிழருக்கு இடம் அளிக்கவில்லை.
தமிழரைக் கவருவதற்காக திருக்குறளைப் பயன்படுத்துபவர் மோடி; அன்வாரும் அப்படித்தான்.
திருக்குறளின் மேன்மையை உணர்ந்துள்ள மோடி, திருக்குறள் வளர்ச்சிக்காக சிறிதளவும் நிதி வழங்கியதில்லை; அன்வாரும் அவ்வாறே. மொத்தத்தில், தமிழ்ச் சமுதாயத்தில் திருக்குறளை தூண்டிலைப் போல பயன்படுத்துவதில் இரு பிரதமர்களும் வல்லவர்கள்.
இந்தியாவில் செம்மொழிகளாக இரு மொழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தமிழ். அப்படிப்பட்ட தமிழுக்கு அரசப் பல்கலைக்கழகங்களில் அங்கீகாரம் அளிக்காதவர் மோடி; மலேசியாவிலும் இரு மொழிகள் செம்மொழிகளாக உள்ளன; அவற்றுள் ஒன்று தமிழ். இந்த நிலையில் மலேசிய அரச பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கு கொஞ்சமும் சிறப்பு செய்யாதவர் அன்வார்.
தமிழர்க் கூட்டத்தில் பேசினாலோ கலந்துகொண்டாலோ வேட்டியணிந்து போக்கு காட்டுபவர் மோடி; அன்வாரும் அப்படித்தான். தேர்தல் பிரச்சாரக் கூட்டம், தமிழாராய்ச்சி மாநாடு போன்றவற்றுக்கு ஜிப்பா அணிந்து வருவார் அன்வார்.
தமிழர்க் கூட்டத்தில் எம்ஜிஆர் புகழ்பாடுவார் மோடி; அன்வாரும் அட்டியின்றி அப்படியே செய்வார்; இன்னும் ஓருபடி மேலாக எம்ஜிஆர் பாட்டுக்கு ஆடி அபிநயம் புரிபவர் அன்வார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சொந்தக்கட்சியைச் சேர்ந்த தமிழ எம்பி-க்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்காமல் புறக்கணிப்பவர் மோடி; அவர் வழியில் தப்பாமல் நடப்பவர் அன்வாரும்;
தனக்கு துதிபாடும் தமிழரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக்கி துணை அமைச்சர் பொறுப்பை ஒப்புக்காகக் கொடுப்பவர் மோடி; அடடே என்ன வியப்பு! இந்த விடயத்தில் மோடியின் அச்சு அசலாக ஒழுகுபவர் அட்டியின்றி அதே அன்வார்தான்.
தமிழ்ச் சமுதாயத்திற்காக எந்தத் திட்டத்தையும் அறிவிக்காதவர் மோடி; அன்வார் மட்டும் என்னவாம்? இதிலும் அவரைப் போலவேத்தான் இவரும்.
இரு நாடுகளிலும் சுதந்திர போராட்டமாகட்டும்; பொருளாதார மேம்பாட்டுக்காக பாடுபடுவதாகட்டும் இன்னும் எல்லா வகையாலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட்டவர்கள் தமிழர்கள். அப்படிப்பட்ட தமிழனத்தின் சமூக மேம்பாடு-பொருளாதார வளர்ச்சி-கல்வி மறுமலர்ச்சி உள்ளிட்ட எதிலும் அக்கறைக் கொள்ளாதவர் தாடிக்காரத் தலைவர் மோடி என்றால், இதிலும் சளைக்காத தலைவர் அன்வார்தான்.
மெர்டேக்கா காலத்தில், இந்த மலாயா மண்ணில் சுதந்திர வேட்கையை விதைத்தவர்களே தமிழர்கள்தான்; அந்த உந்துதலில் உருவானதுதான் மஇகா.
நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய இராணுவப் படையில் மலாயாத் தமிழர்கள் கொத்து கொத்தாக இணைந்தது எதற்காக? மலாயாவில் சுதந்திரக் காற்று வீச வேண்டும் என்பதற்காகத்தான்; ஆண்களுக்கு இணையாக பெண்களும் ஜான்சி ராணி படையில் இணைந்ததை இக்காலத் தலைமுறைக்குத் தெரிவிக்கிறதா இன்றைய கல்வி முறை?
எங்கும் எதிலும் திரைபோட்டு மறைக்கும் வேலைதான் தொடர்கிறது.
ஜான்சி ராணிப் படை என்று பெண்கள் இராணுவப் பிரிவிற்கு பெயர் வைத்ததில்கூட நேதாஜி ஏமாந்துதான் போனார். உண்மையில் அந்தப் பிரிவுக்கு வீரமங்கை வேலு நாச்சியார் படை என்று பெயர் வைத்திருக்க வேண்டும்.
ஜான்சி ராணி குடும்பப் பிரச்சனைக்காக ஆங்கிலேயரை எதிர்த்தார். வேலு நாச்சியார்தான் நாட்டு விடுதலைக்காக மைசூர் மன்னர் ஹைதர் அலியுடன் கூட்டுசேர்ந்து ஆங்கிலப் படையை எதிர்த்து களமாடினார். போர்முனையில் மனித வெடிகுண்டு என்னும் நுட்பத்தை உலகுக்குக் காட்டியவர் வேலு நாச்சியார்தான். இந்த வகையில் மேதகு வேலு பிரபாகரனின் முன்னோடி வேலு நாச்சியார்.

இவற்றை யெல்லாம் இப்போது சொல்லி என்ன பயன்?
இங்கும் சரி, அங்கும் சரி, தமிழர் அடையாளம்-பெருமை உள்ளிட்ட அனைத்தும் மறைக்க-மறுக்கப்படும் நிலைதான் நிலைபெற்றுள்ளது!
போகட்டும்!!
மோடி, அன்வார் விடயத்துக்கு மீண்டும் வருவோம்!
மதத்தை அரசியலில் கலக்க இருவருமே தயங்கியதில்லை;
மத வெறுப்பென்னும் நஞ்சை அப்பட்டமாக கக்குபவர் மோடி; அன்வாரோ மதமற்ற சடங்கையே நடத்தி முடிப்பவர். இப்படிப்பட்ட பிரதமராக இந்த உலகிலேயே அன்வார் ஒருவராகத்தான் இருக்கக்கூடும். எல்லாம் எதற்காக? வாக்கு வேட்டைக்காகத்தான்.
இவை மட்டுமல்ல; இந்தியாவின் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் புகழ்பாடுவதில் மோடியும் அன்வாரும் சரிநிகர் சமமானவர்கள்.
உண்மையில், மோடிக்கு ஆகாதவர் அம்பேத்கார். காரணம், ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்று, சானாதனப் பித்து கொண்டவர் மோடி. பிரதமர் ஆனபின் அடித்தட்டு மக்களைக் கவருவதற்காக இப்படி கபடத்தன்மையுடன் அம்பேத்கர் புகழ்பாடுகிறார். ஆனால், அன்வார் எதற்காக அம்பேத்கர் பெருமை பேசுகிறார் என்பதுதான் விள்ங்கவில்லை. எது எவ்வாறாயினும், ஒரு முரட்டு தராசின் இரு தட்டுகளில் மோடியையும் அன்வாரையும் அமர வைத்தால், அம்பேத்கர் புகழ்பாடுவதில் இருவரும் சமமானவர்கள் என்பது தெரியும்.
பிரதமர் பதவி கிடைக்கும்வரை பேசுவது ஒன்று; கிடைத்தபின் செயல்படுவது வேறுவிதமாக என்பது மோடிக்கு மட்டும் கைவந்த கலை அல்ல; அன்வாரும் அதில் கைதேர்ந்தவர்தான்.
நாடு முழுவதும் விவேக நகரங்களை உருவாக்குவேன் என்றார் மோடி; ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு நகரத்தைக்கூட(Smart City) உருவாக்கவில்லை. ஒர் ஆண்டில் இரு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்றார். கடந்த பத்து ஆண்டுகளில் 20 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவது ஒருபுறம் இருக்கட்டும். உள்ளதையும் அல்லவா இழக்கச் செய்தார்.
உலகெங்கும் உள்ள வேலையில்லாதோரில் 74%பேர் இன்று இந்தியாவில் மட்டும் உள்ளனர். இதைப்பற்றி மோடி வாய்த் திறப்பதேயில்லை.
அவருக்குத் தெரிந்ததெல்லாம் மத-சிறுபான்மை வெறுப்புதான்;

2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நேரத்தில் மதுரையில் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார் மோடி; அதற்காக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அப்படியே தேர்தல் பிரச்சாரமும் மேற்கொண்டார். 2ஆவது முறை பிரதமர் ஆனபின், நாடு முழுக்க ஒன்பது எய்ம்ஸ்ட் பல்கலைக்ககங்களை கட்டிமுடித்த மோடி, தமிழ் நாட்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கைகழுவி விட்டார்.
அடுத்தத் தேர்தலும் இப்போது முடிந்துவிட்டது; அதைப்பற்றி மூச்சுவிட வில்லை. அப்படி யென்றால், தமிழர்களை அவர் எந்த அளவுக்கு இளப்பமாக எண்ணி இருக்கிறார் பாருங்கள். இந்த நிலையிலும் மோடிக்கு துதிபாடும் தமிழர்க் கூட்டம் இருக்கிறதென்றால், இதைவிட அவமானம் வேறென்னவாக இருக்கும்?
வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை யெல்லாம் மீட்டுவந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாயைச் சேர்ப்பேன் என்றார். இது மட்டுமல்ல: மோடி பிரகடனம் செய்து காற்றோடு கலந்தவை ஏராளம்; சொல்லி மாளாது.
மோடியைத் தாங்கிப் பிடிக்கும் ஊடகத் தூண்களாக மாறிவிட்ட பிபிசி தமிழோசை, மலேசிய அரச செய்தி ஊடகமான ஆர்டிஎம் டிவி-2 தமிழ்ச் செய்திப் பிரிவு, தமிழ் அச்சு ஊடகத்தின் ஒரு சிலர் உள்ளிட்டவர்கள் இதைப்பற்றி யெல்லாம் பேசுவதில்லை.
போகட்டும்!
அன்வார்கூட, பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு முன்புவரை பலவித சீர்திருத்தங்களைப் பேசிவந்தார். மலாயர்-சீனர்-தமிழர் என்னும் பாகுபாடு எல்லாம் கிடையாது; எல்லோரும் மலேசியர்தான் என்றார். அவர் தலைமை வகிக்கும் மக்கள் நீதிக் கட்சி(பி.கே.ஆர்.)யின் மேடைகளில் முழங்கப்பட்ட முக்கிய கருத்து இதுதான்; ஆனால், இப்பொழுது அப்படியா பேசுகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகள் கட்சி தாவுவதை முற்றாக எதிர்த்தவர் அன்வார்; இப்பொழுது, பெர்சத்து கட்சியில் இருந்து கொல்லைப்புர ஆதரவளிக்கும் ஆறு எம்பி-க்களின் ஆதரவை நமட்டுச் சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் அன்வார், அதுபற்றி தெரியாததைப் போல இருக்கிறார்.
ஆனால், இதைப்பற்றி பெரிதாக கொக்கரிக்கும் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், தேர்ந்தெடுக்கப்பட்ட தவளைகளின் அணிதாவலையே முதலீடாகக் கொண்டு பிரதமர் ஆனவர்; ஆட்சி நடத்தியவர்; நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காதவர்; இதை யெல்லாம் சமாளிக்க அவசரகால சட்டத்தையும் நாடியவர்.
இப்பொழுது, செய்த வினை திரும்ப அடிக்கிறது.
இதைத்தான் சமணத் துறவியும் பெரும்பாவலருமான இளங்கோ அடிகள் தான் இயற்றிய மக்கள் காவியமான சிலப்பதிகாரத்தில் “ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்” என்றார்.
இத்துடன் நிறுத்திக்கொள்ள நினைக்கிறேன். சங்கதி பெரிதாகிறது. படிப்பவர்கள் ஓருவேளை சளிப்படையவும் ஏசவும் கூடும்.
சந்திப்போம் மீண்டும்!