
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசிய இந்தியர் காங்கிரஸ் பேரியக்கத்தில் தமிழை அரியணை அமர்த்திய துன் வீ. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு ஜூன் 16, 105-ஆவது பிறந்த நாள்.
இந்த இனிய நாளை, மலேசிய இந்தியர் காங்கிரஸ் வாஞ்சையுடன் நினைவுகூர்கிறது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
செல்வந்தராக அரசியலில் ஈடுபட்டு, இந்திய சமுதாய மேம்பாடு-கல்வி வளர்ச்சி-தமிழ்ப் பள்ளிகள்-ஆன்மிக தலங்கள் என்றெல்லாம் கைவசம் இருந்த பொருட்களை இழந்து, அரசியல் அரங்கிலிருந்து ஒதுங்கிய ஒரே மலேசிய இந்தியத் தலைவர் துன் வீ.தி.சம்பந்தனார்தான்.

இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் ஏறக்குறைய உலகம் முழுமை-யிலும் அரசியல் மறுமலர்ச்சியும் ஜனநாயக எழுச்சியும் ஏற்பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் அரசியல் என்பது, மக்களுக்கு தொண்டாற்றுவதற்குரிய ஒரு தளமாக.. ஒரு பாட்டையாகக் கருதப்பட்டது. இப்பொழுதெல்லாம் நிலைமை அடியோடு மாறிவிட்டது. நாடு விடுதலை அடைந்த காலத்தில் மலேசிய இந்திய சமூகத்தில் ஒப்பாரும் மிக்காரும் இலாத் தலைவராக அரசியல் வானில் பளிச்சிட்டவர் வீராசாமி திருஞான சம்பந்தன்தான்; ‘துன்’ பட்டம் பெற்ற முதல் மலையகத் தலைவரும் இவர்தான்.
கடல் கடந்து பட்டம் பெற்றாலும் பண்பாட்டைக் கடன் பெறாத இந்தத் தலைவர், வெள்ளை வேட்டியுடன் இலண்டன் மாநகரில் நடைப் பயின்றவர். இன நல அடிப்படையில் நோக்குங்கால், மலேசியத் தமிழர்களுக்கு கிட்ட தன் அரசியல் பயணத்தில் எவருக்கும் தீங்கிழைக்காத, சுயநலம் பாராத அப்பழுக்கற்ற பாதையைக் கொண்டிருந்த தலைவர் துன் சம்பந்தனார்.

மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையினராக தமிழ் மக்கள் இருந்தாலும் அவர்களுக்குரிய ஒரே அரசியல் இயக்கமான மலேசிய இந்தியர் காங்கிரசில் (மஇகா) ஒரு தமிழர் தலைவராக முடியவில்லையே என்ற அந்நாளைய ஏக்கத்தைத் தணித்தவர் துன்; அதைப்போல, மஇகா-வில் தமிழ் மொழியை மஇகா நிர்வாக மொழியாக முதன்முதலில் மாற்றியவ்ரும் இவர்தான்
.
சுதந்திர மலேசியாவின் ஆட்சித் தலைமை இருக்கையிலும் அமர்ந்து பெருமை சேர்த்த சம்பந்தன், வெள்ளி மாநிலத்தின் சுங்கை சிப்புட் நகரில் வீராசாமி-செங்கம்மாள் இணையரின் இரண்டாவது மகனாகத் தோன்றியவர்.
இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன்வழி தன் அரசியல் பயணத்தைத் தொடங்கிய சம்பந்தன், சுங்கை சிப்புட் நகரில் சொந்த செலவில் தமிழ்ப் பள்ளியை நிறுவியவராவார். மஇகா வரலாற்றில், சொந்தமாக தமிழ்ப் பள்ளியைக் கட்டியத் தலைவர் துன் சம்பந்தனார்.
நாட்டின் விடுதலைக்கான ஒப்பந்தத்தில் மலேசிய இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதித்து பிரிட்டனுக்கு வேட்டி-சட்டையுடன் சென்று கையொப்பமிட்ட துன் சம்பந்தன், தன் வாழ்க்கையில் அரசியல் உச்சத்தைத் தொட்டபோதும்-கூட எளிமையின் சின்னமாக விளங்கினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, துன் சம்பந்தன் ஒரு நல்ல பத்திரிகையாளர் என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது.

‘மலைநாடு’ என்ற தமிழ் நாளேட்டையும் ‘மலாயன் டைம்ஸ்’ என்ற ஆங்கில தினசரியையும் நடத்தியப் பெருமைக்குரியவர் துன். இதனால், பெரு நட்டத்தைக் கண்டபோதும், அதைக் கருதாது பத்திரிகைத் தாகத்தில் அவர் திளைத்திருந்தார்.
எழுபது ஆண்டுகளை எட்டுகிற சுதந்திர மலேசியாவில் இன்று தமிழனின் தன்மானச் சின்னமாகத் திகழும் அடையாளங்களுள் ‘துன் சம்பந்தன் மாளிகை’யும் ஒன்று. நாடு விடுதலைப் பெற்ற பின்னர், தோட்டத் துண்டாடலால் வேலை வாய்ப்பு பிரச்னையை எதிர்கொண்ட மலையகத் தமிழர்களுக்கு உதவும் பொருட்டு தோட்டங்களை வாங்க முனைந்த துன் சம்பந்தன், மலேசிய இந்திய சமுதாயத்தின் உதவியுடன் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். அவரது அந்த முயற்சியின் வடிவம்தான் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம். அச்சங்கத்தின் தலைமையகக் கட்டடம்தான் துன் சம்பந்தன் மாளிகை.
மலேசியாவில் துன் சம்பந்தனின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
வாழ்க மஇகா! வளர்க துன் சம்பந்தனின் புகழ்!