
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
பத்துமலை, ஆக.19:
கோம்பாக் செத்தியா வட்டாரத்தைச் சேர்ந்த மு.சுப்பிரமணியன் என்ற நோயாளி, கடந்த ஒரு வாரமாக கண் வலியால் அவதிப்பட்டுவந்த நிலையில் இன்று காலை பதினோரு மணி அளவில் அருகில் உள்ள சுகாதார கிளினிக்கிற்கு சென்றுள்ளார்.
கோம்பாக் செத்தியா சுகாதார கிளினிக் முகப்பிட சேவையில் இருந்த இரு தாதியர் என்ன சிக்கல் என்று கேட்ட நிலையில, கண் வலிப்பதாக சம்பந்தப்பட்ட நோயாளி தெரிவித்திருக்கிறார்.
ஏன் கண் வலிக்கிறது என்று அவ்விரு தாதியரில் ஒருவர் அதட்டல் தோணியில் வினவிய நிலையில், கடந்த ஒரு வாரமாக கண் வலிப்பதாக சுப்பிரமணியம் சொன்னதும், இப்பொழுது முடியாது; பிற்பகல் 2:00 மணியளவில்தான் மருத்துவரைச் சந்திக்க் முடியும்; தற்பொழுது நோயாளிகள் அதிகமாக உள்ளதால், வீட்டுக்குத் திரும்பி பகல் ஒன்றரை மணி அளவில் வந்தால் போதும் என்று நல்ல விதமாக தெரிவித்துள்ளனர்.
அதை ஏற்றுக்கொண்ட சுப்பிரமணியன், வீட்டிற்குத் திரும்ப ஆயத்தமான நிலையில், சம்பந்தப்பட்ட தாதி, இனிமேல் ‘My Sejatara’ செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
கண் வலிப்பதாலும் கூசுவதாலும் தன்னால் கைப்பேசித் திரையைப் பார்ப்பதில் சிரமம் இருப்பதாக சம்பந்தப்பட்ட நோயாளி தெரிவித்த நிலையில், அத்தாதியரில் ஒருவர், சுப்பிரமணியனின் தொலைபேசியை வாங்கி ‘My Sejatara’ செயலி மூலம் பதிவுசெய்ய முயன்றுள்ளார்.
அடுத்து, இன்று மருத்துவரைப் பார்க்க முடியாது; 21-ஆம் நாள் காலை 9:00 மணிக்கு வந்தால் மருத்துவரைப் பார்க்கலாம் என்று கூறி, அதற்கான சிட்டையை அளித்துள்ளார்.
“இன்று பிற்பகலில் வரலாம் என்று சற்றுமுன் கூறினீர்களே” என்று சுப்பிரமணியன் வினவியதும் உடனே ஒரு தாதி மேசையில் படுத்துக் கொண்டார்; இன்னொரு தாதி தன்னைப் பார்த்து காதலனுடன் உறவாடுவதைப் போல கண்ணடித்து, என்னவென்று விழியாலேயே வினவி இருக்கிறார்.
அவமானப்பட்டு சிறுமைக்குள்ளான சுப்பிரமணியன், அந்தமட்டில் திரும்பி, Gombak Setia, Klinik Kesikatan-இல் இன்று தனக்கு நேர்ந்ததைப் பற்றி ஏஎஸ்டி செய்திதளத்துடன் பகிர்ந்து கொண்டார்.
60-வயதைக் கடந்த தன்னை, முதலில் பிற்பகலில் வரும்படி கேட்டுக் கொண்ட தாதியர், பின்னர் ஏன் இரு நாட்களுக்குப் பின் வரும் கேட்டுக் கொண்டனர் என்பது தெரியவில்லை.

அதுகூடப் பரவாயில்லை; இதுகுறித்து விளக்கம் கேட்டதும் இரு தாதியரில் ஒருவர் உடனே தலையைக் கவிழ்த்து மேசையில் படுத்துக் கொண்டார். மற்றொரு தாதி முகக்கவசம் அணிந்த நிலையில், என்ன? என்ன? என்பதைப் போல விழியாலேயே கேட்டதும் தான் அங்கிருந்து திரும்பி விட்டதாக சுப்பிரமணியன் மேலும் விவரித்தார் ஏஎஸ்டி-யிடம்.
ஆசிரியத் தொழிலுக்கு அடுத்து, மருத்துவ சேவையையும் புனிதமானது என்பார்கள், பொதுவாக; சில மருத்துவ மையங்களில், தாதியரின் கனிவான அணுகுமுறையால் பாதி நோய் தீர்ந்துவிடும். மருத்துவர் சோதிக்கும்பொழுது, அவர் ஐயப்படும் அளவுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் நல்லவிதமாக இருப்பர்.
ஆனால், இந்த அரசாங்க பொது மருத்துவ சேவை நிலையத்தில் இந்த அளவுக்கு காலாடித்தனமாக தாதியர் நடந்து கொள்கின்றனர் என்றால், அதற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி சுகாதார அமைச்சு கவனத்தில் கொள்வது நலம்.
ஏற்கெனவே, மதானி அரசாங்கத்தின்மீது பொதுமக்கள் பலவகையாலும் அதிருப்தியில் உள்ளனர். பள்ளிசெல்லும் பிள்ளைகள் இரண்டு-மூன்று பேர் இருந்தால், அந்தக் குடும்பங்களின் தாய்மார் படும் அவதி சொல்லி மாளாது.
சமையலறை அடிப்படைப் பண்டங்களின் விலையேற்றம் மட்டுமல்ல; முட்டைத்தட்டுப்பாடு, அரிசி விலை உயர்வு என இந்த ஒற்றுமை அரசாங்கத்தில் குடும்ப மாதர் எதிர்கொள்ளும் சங்கடம் சொல்லி மாளாது; ஒரு பேரங்காடியில், ஒரு பயனீட்டாளர் ‘ஒரு பூண்டு-இரு வெங்காயம்-மூன்று தக்காளி’ என மூன்று நெகிழிப் பைகளுடன் பணம் செலுத்த முகப்பிட வரிசையில் நின்றதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
இப்பொழுது, மருத்துவை சேவையும் தரம் தாழ்ந்தால், மக்கள் உய்யும் வழிதான் என்ன?
நாட்டின் நல்லோரே, நடுநிலையாளரே, ஆட்சியாளரே சிந்திப்பீர் ஒருகணம்!
– 013-244 36 24