30.2 C
Kuala Lumpur
Thursday, July 10, 2025

Vetri

அதிகார வேட்கையால் தடுமாறும் திருமாவளவன் குறுக்குசால் ஓட்டுகிறார்; 2016 தேர்தல் பரிசு 2026-இலும் கிடைக்கலாம்!

-நக்கீரன்

கோலாலம்பூர், செப்.15:
பேரறிஞப் பெருந்தகை அண்ணா, ஜெய்ஹிந்த் செண்பகராமன் ஆகிய இரு வரலாற்று நாயகர்களுக்கும் இன்று பிறந்த நாள்; அதைப்போல தனித் தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள், மலேசிய இந்திய சமுதாயத்தை, குறிப்பாக தமிழர்களை ஒரு தலைமுறைக் காலத்திற்கு வழிநடத்திய துன். ச.சாமிவேலனார் ஆகிய இரு பெருமகனார்க்கும் இன்று நினைவு நாள்.

இத்தகைய பெருமக்களை நினைவுகூரும் இந்த நேரத்தில் தமிழினத்தில் சாதிய அரசியலை பேரளவில் முன்னெடுக்கும் தொல்.திருமாவளவனை விமர்சனக் கண்ணோட்டத்தில் எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது.

மலேசிய மலாய் அரசியல்வாதிகளில் முற்போக்கானவர் என்று கருதப்படும் கைரி ஜமாலுடின், அடிக்கடி தான் பிற்போக்கானவன் என்று நிரூபித்து வருகிறார். ஒருமுறை செய்தியாளர்களிடம் பேசியபொழுது, “பறையரைப் போல பேச வேண்டாம்” என்று மிக அநாகரிகமாக கருத்துத் தெரிவித்தார்.

உத்திர பிரதேச தலைவர்களில் ஒருவரான கன்சிராம் இறந்தபொழுது, மலேசிய பிரபல ஆங்கில நாளேடான ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ வட இந்திய தலித் தலைவர் இறந்துவிட்டார் என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டது.

மலேசியவாழ் இந்தியர்களில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் தமிழர் என்பதும் அவர்கள் தனித்த இனத்தினர் என்பதும் அவர்களுக்கென்று தனியாக தாய் மொழி இருக்கிறது; தமிழென்னும் அம்மொழி, உலகச் செம்மொழிகளுள் ஒன்று என்பதும் அப்படிப்பட்ட ஆறு செம்மொழிகளுள்ளும் முதன்மையானது தமிழ் என்பதும் இந்த கைரி ஜமாலுடினுக்கும் தெரியவில்லை; என்.எஸ்.டி. ஆங்கில நாளேட்டுக்கும் புரியவில்லை; சீக்கியர் உள்ளிட்ட அனைவரையும் இந்தியர் என்றே அழைக்கின்றனர்; குறிப்பிடுகின்றனர்.

ஆனால், தமிழ் இனத்தில் உள்ள சாதிக் கட்டமைப்பு மட்டும் நன்றாகத் தெரிந்திருக்கிறது. இதற்குக் காரணம் டான்ஸ்ரீ பண்டிதன் என்னும் தலைவர். அவர்தான்20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலித் முழக்கத்தை பேரளவில் மலேசிய இந்தியர்தம் அரசியலில் முன்னெடுத்தார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலக்கப்பட்டதும், தன் அரசியல் பயணத்திற்காக சாதி அரசியல் கையில் எடுத்தார். போதாக் குறைக்கு ஜப்பான் நாட்டில்கூட தலித் மாநாட்டை நடத்த அவர் முனைந்தார்.

நான்மறை என்று சொல்லப்படும் ஆரிய பிராமணர்களின் நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில், 153-ஆவது பாடலில், தமிழர்கள் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, வைப்பாட்டி மக்கள் என்று நேரடிப் பொருள்தரக்கூடியது அச்சொல்;
சூத்திரர்களில் தாழ்த்தப்பட்ட மக்களை ‘அரிஜன்’ என்று குறிப்பிட்டார் காந்தி.
பின்னர், ஆதி திராவிடர் என்று திராவிட இயக்கத்தால் குறிப்பிடப்பட்டனர்; தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மக்கள் என்று அழைக்கப்பட்டனர். இப்பொழுது, சீர்மரபினர்-பட்டியல் இன மக்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர்.

தமிழினத்தின் தலைநிலமான தமிழ் நாட்டில் நிகழும் மாற்றம்-மறுமலர்ச்சி எதுவாக இருந்தாலும், அது, உலகத் தமிழர்களிடம் எளிதில் பரவும்.

சாதிய அடையாளம் என்பதை, கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்பு இட ஒதுக்கீட்டிற்காகவும் பயன்படுத்தினால் போதும்; மற்ற தளங்களில் சாதி அடையாளத்தைத் தவிர்த்துவிட்டு பொது அரசியலை முன்னெடுத்தால் காலப் போக்கில் தமிழர் என்ற ஒற்றை அடையாளத்துடன் தமிழர்கள் உருமாறக்கூடும்.

ஆனால், சாதி அரசியலையும் அடையாளத்தையும் முன்னெடுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இருக்கும்வரை தமிழர் என்ற ஒற்றை அடையாளத்துடன் தமிழினம் ஒன்றுசேர வாய்ப்பே இல்லை.

2006, ஜூலை 20-22ஆம் நாட்களில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோலாலம்பூருக்கு வருகைதந்த தொல்.திருமாவளவனை, மலேசிய நண்பன் நாளிதழ் அலுவலகத்தில் செவ்விகண்டபொழுது, தமிழ்நாட்டு மக்கள் தொகையில் ஏறக்குறைய 18 விழுக்காட்டினராக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள், நவீன அரசியலில் எந்த வகையில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று கேட்டேன்.

தேர்தலுக்குத் தேர்தல் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை சூரையாடும் அரசியல் கட்சிகள், அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதில்லை; தலித் மக்கள் அப்பட்டமாகப் புறக்கணிக்கப்படுகின்றனர் என்றார்.

ஆட்சி அதிகாரத்தில் இடம்பெறுவது ஒன்றுதான் தொல்.திருமாவளவனுக்கு பெருவிருப்பாக இருக்கிறதே அல்லாமல், அந்த மக்கள் கல்வி-பொருளாதார-சமூக மறுமலர்ச்சியை இன்னும் பாரிய அளவில் எட்ட வேண்டும் என்பது குறிக்கோளாக இல்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனி அரசியல் ஏதும் தமிழ் நாட்டில் இல்லை. எல்லாக் கட்சிகளிலும் அவர்கள் பரவி-விரவி இருக்கின்றனர். காவிரி டெல்டா மண்டலமான தஞ்சை-திருவாரூர்-மயிலாடுதுறை-நாகை மாவட்டங்களில் பொதுவுடைமை இயக்கங்களான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் பெருவாரியான பட்டியலின மக்கள் இடம்பெற்றுள்ளனர்.

எந்தக் கட்சியில் இருந்தாலும் மற்ற சாதியரைப் போலவே, பட்டியலின மக்களும் தேர்தல் காலங்களில் லஞ்ச-லாவண்ய அரசியலில் பச்சையாக ஈடுபடுகின்றனர். அரசியல் கட்சிகள் கொடுக்கும் லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, தாங்கள் விரும்பும் வேட்பாளர் அல்லது கட்சிக்கு வாக்களிக்கின்றனர்.

அவர்களை யார் அல்லது எந்த இயக்கம் அல்லது கட்சி புறக்கணிக்கிறது?. தமிழக அதிகார மட்டத்தில் எந்த சாதிக்கு தனி இடம் அல்லது முத்திரை இருக்கிறது? இந்த நிலையில் தலித் மக்களுக்கு மட்டும் தனி இடம் அல்லது சிறப்பு முத்திரை அதிகார மட்டத்தில் வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கேட்பது எந்த வகையில் நியாயம்? அது எப்படி சாத்தியம் ஆகும்?

சில மாதங்களுக்கு முன், ஒரு தலித், முதல்வராக முடியுமா என்று கேட்டார். தமிழ் நாட்டில், சாதி பார்த்தா முதல்வர் பதவி அளிக்கப்படுகிறது.

தமிழ் நாட்டில், செட்டியார் சாதிக்காரர் முதல்வர் ஆகிவிட்டாரா? கவுண்டர், படையாச்சி, மூப்பனார், மீனவர், பிள்ளைமார் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட சாதியினரும் தமிழ் நாட்டில் முதல்வர் ஆகிவிட்டார்களா என்ன?

தனிப்பட்ட தொல். திருமாவளவன் நாட்டம் கொண்டுள்ள அரசியல் பதவியை தான் சார்ந்துள்ள சாதியின் பெயரால் அடைய நினைப்பது பேரிழுக்கு. இவரின் முன்னாள் தளபதி, செல்வப் பெருந்தகை இப்பொழுது இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தமிழ் நாட்டுக் கிளைக்குத் தலைவராக இருக்கிறார். இந்தப் பதவியை அவர் எப்படி எட்டினார். சாதி பார்த்தா அவருக்கு இந்தப் பதவி அளிக்கப்பட்டது?.

வட தமிழகம்-தென் தமிழகம் என தமிழ் நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கேட்ட பாமாக நிறுவனரும் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவருமான இராமதாசுக்கும் திருமாவளவனைப் போல, பதவி வேட்டை(கை) இருந்தது; இருக்கிறது.

வட தமிழகத்தில் வன்னிய சமூகம் அதிகமாக இருப்பதால், இதைப் பயன்படுத்தி தாம் வட தமிழகத்தில் முதல்வராக வந்துவிடலாம் என்ற குறுக்குக் கணக்கு இருந்தது; அது இன்னமும் தணிந்துவிட வில்லை இராமதாசுக்கும் அவர்தம் வாரிசுக்கும்;

இராமதாஸ்-அன்புமணி ஆகியோரிடம் மாறுபட்டக் கோணத்தில், குயுக்தித்தனத்தில் இருக்கும் கணக்கு, திருமாவளவனிடத்தில் பச்சையாக இருக்கிறது; அவ்வளவுதான்.

2016 பொதுத் தேர்தலின்போது ஆட்சியதிகாரத்தில் பங்கு வேண்டும்; தமிழ் நாட்டில் கூட்டாட்சி அமைய வேண்டும் என்று குரலெழுப்பிய திருமாவளவன், இதேப் பதவி வேட்கையினால்தான் வைகோ முன்னெடுத்த மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார்.

வைகோவிற்கு கலைஞர் மு.கருணாநிதி மீண்டும் முதல்வராகக் கூடாது என்ற காழ்ப்புணர்வும் வஞ்சகமும் தொடர்ந்து இருந்தது. தன்னுடைய மாதிமுக கட்சி வளர வேண்டும் என்பதைவிட, தேர்தலுக்குத் தேர்தல் திமுக தோற்க வேண்டும் என்பதற்காகவே அவர் அரசியல் நடத்தினார்.

வளர்ச்சி அரசியலுக்குப் பதிலாக சூழ்ச்சி அரசியலை கையிலெடுத்ததால்தான், வைகோ தன் அரசியல் பயணத்தில் பாதாளத்தில் விழுந்தார். இன்று, அதே திமுக தயவால்தான், நான்காவது தவணையாக நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருக்கிறார்.

அதிகாரத்தில் இருக்கும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவேண்டும். குறிப்பாக திமுக பக்கம் சென்றுவிடக் கூடாதென்று கருதிய ஜெயலலிதா, வைகோவைக் கொண்டு கச்சிதமாக காய்நகர்த்தினார்.

திமுக எதிர்ப்பை உயிர்மூச்செனக் கொண்டிருந்த ஜி.இராமகிருஷ்ணனும் தன் தலைமையிலான இடது கம்யூனிஸ்ட் கட்சியை வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியில் இணைத்தார். திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, வலது கம்யூனிஸ்ட் கட்சி, ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வைகோ தலைமையில் அணிவகுத்தன.

ஒரே ஒரு கட்சியின் முடிவால், கலைஞரும் ஜெயலலிதாவும் நிம்மதி இழந்து காணப்பட்டனர்.

‘மாற்றம்-முன்னேற்றம்-அன்புமணி’ என்ற முழக்கத்துடன் இராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி தனியாகப் போட்டியிட்டது. ஜெயலலிதாவின் அதிமுகாவும் தனியாகக் களம் இறங்கியது; ஆனாலும், விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக, திமுக பக்கம் போகிறதா, அல்லது தான் விரித்த வலையான மக்கள் கூட்டணிக்கு வருகிறதா என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார், ஜெயலலிதா.

ஏறக்குறைய கலைஞரும் அதே மனநிலையில்தான் இருந்தார்; ‘பழம் நழுவி பாலில் விழும்’ என்று தேமுதிக-வின் வருகைக்காக நம்பிக்கையுடன் காத்திருந்த கலைஞர், தன் எண்ணத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

விஜயகாந்த நல்ல நாயக நடிகர்; கொடை மனமும் இரக்க சிந்தனையும் கொண்டவர்தான்; ஆனால் அரசியலில் அவர் முழு சொத்தை; தேர்தலுக்குத் தேர்தல், மாட்டு சந்தை வியாபாரியினும் கீழாக கேவலமாக பேரம் பேசினார். எவ்வித கொள்கை முன்னெடுப்போ, மக்கள் நல சிந்தனையோ, மாநில வளர்ச்சி குறித்தப் பார்வையோ என எதுவும் இன்றி, எந்தக் கட்சி அதிகமாக பணமும் தொகுதிகளும் ஒதுக்குகிறதோ அந்தக் கட்சி தலைமையிலான கூட்டணியில் சேர்வது என்ற எண்ணத்தில் அலைபாய்ந்த தேமுதிக, கடைசியில் 109 தொகுதிகள்-முதல்வர் வேட்பாளர் என்ற பேரத்திற்கு படிந்து வைகோ-திருமா கூட்டணியில் சங்கமமானார்.

அந்த நேரத்தில் வகோ-திருமாவளவன் இருவரும் சிரித்த சிரிப்பு, அத்துணை எக்காளமானது; தேர்தலில் வென்று ஆட்சியையே கைப்பற்றியதைப் போன்ற எண்ண வெளிப்பாடு அது. அதாவது, திமுக பக்கம் போகாமல் விஜயகாந்த் தங்கள் பக்கம் வந்துவிட்டதால் இத்தகைய ஆனந்தக் கூத்து.

கடைசியில், மக்கள் கூட்டணியின் ஐந்து கட்சிகளும் மொத்தமாக பலியாயின. 2016 சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஒருவர்கூட வெல்லவில்லை. விஜயகாந்த் வைப்புத் தொகையை இழந்தார். தொல்.திருமாவளவனும் தான் போட்டியிட்ட காட்டு மன்னார்கோயில் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

89 தொகுதிகளுடன் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரானார்.

பின்னர், ஜெயலலிதாவும் கலைஞரும் அடுத்தடுத்து மறைந்த நிலையில், அரசியல் களமும் மாறியது. வைகோவும் திருமாவளவனும் மக்கள் நலக் கூட்டணியை மட்டுமல்ல; ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்னும் சிந்தனையையும் குமரிக் கடலில் கரைத்துவிட்டு, மீண்டும் திமுக பக்கம் வந்தனர்.
ஒன்றும் இல்லாமல் இருந்த திருமாவளவனுக்கு, சட்டமன்றத்தில் இடம் கிடைத்ததுடன் அல்லாமல், இரண்டாவது முறையாக இரண்டு எம்பி-க்களுடன் நாடாளுமன்றத் தேர்தலிலும் வென்றதால், பழைய பதவி ஆசை மீண்டும் துளிர்விட்டு, திணவெண்ணத்துடன் குறுக்குசால் ஓட்டுகிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைசெய்யப்பட்டபொழுது, அவர் தலித் என்பதால்தான் கொலைசெய்யப்பட்டார் என்ற கருத்தை வெளிப்படுத்திய திருமாவளவனுக்கு, தமிழ் நாட்டிற்கு ஒரு நல்ல பொதுத் தலைவராக விளங்கும் தகுதி இல்லையென்பது உறுதியானது;

அடுத்து, ஜூலை மாதத் தொடக்கத்தில் கள்ளக்குறிச்சியில் 60-க்கும் மேற்பட்டோர் கள்ளச் சாராயம் அருந்தி மரணமடைந்தபொழுது, அவர்கள் தலித் மக்கள் என்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்பதைப் போல கருத்து சொன்னது இன்னொரு இழிக்கருத்து.

தொடர்ந்து, ஒரு தலித் முதல்வராக முடியுமா என்று கேட்டது, இன்னொரு சாதி அரசியல் முன்னெடுப்பு. இந்தக் கேள்விக்கு ஒருகாலும் திருமாவளவனுக்கு பதில் கிடைக்காது; தலித் மக்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து அமைச்சராகத்தானே இருக்கின்றனர். முதல் அமைச்சர் பதவிதான் வேண்டுமென்றால், அதற்கான கட்சி வலிமை இவரிடம் இருக்கிறதா?

இப்பொழுது, உளுத்துப்போன மதுவிலக்கு என்பதை கையில் எடுத்து, அதுவும் காந்தி பிறந்த அக்டோபர் 2-இல் மாநாடு நடத்த இருக்கிறாராம்.

காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தை விடுங்கள்; அவர் பிறந்த போர்பந்தர் என்னும் ஊரில் ஒருவர்கூட மது அருந்துவதில்லை என்பதை திருமாவளவனால் உறுதி செய்ய முடியுமா?

மது விலக்குக் கொள்கையால் வஞ்சனைக்கு ஆளான கட்சி திமுக. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபொழுது, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் உடனே மது விலக்குக் கொள்கையை நடைமுறைப் படுத்த வேண்டும். இதனால் நிதி இழப்பிற்கு ஆளாகும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சார்பில் நிதி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

அப்பொழுது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி, தமிழ் நாட்டில் ஏற்கெனவே மதுவிலக்குக் கொள்கை நடைமுறையில் இருக்கிறது. இதனால் நிதி இழப்பிற்கு ஆளாகி இருக்கும் தமிழ் நாட்டு அரசுக்கும் நிதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதை நிராகரித்த இந்திரா காந்தி, புதிதாக அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தான் நிதி வழங்கப்படும் என்று வஞ்சனை புரிந்தார். இதனால் கலைஞர் சினம் கொண்டு, கள்ளுக் கடைகளைத் திறந்தார். தவிர, நாடார் சமூக மக்களை மகிழ்வித்து, ஒரேக் கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார் கலைஞர்.

மது அருந்தப் பழகும் புதிய தலைமுறையை உருவாக்குகிறார் கலைஞர் என்ற விமர்சனம் எழுந்ததும் மீண்டும் மதுவிலக்குக் கொள்கையை அறிமுகம் செய்து கள்ளுக்கடைகளை மூடினார் கலைஞர்.

பின்னர் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர்தான் தமிழ்க வணிகத் துறை மூலம் ‘டாஸ்மாக்-TASMAC’ என்னும் பிரிவை உருவாக்கி, மது விற்பனையை நிறுவனமயமாக்கினார்; ஜெயலலிதா குடிப்பக(BAR) வசதியையும் ஏற்படுத்தி, அதை இன்னும் மேம்படுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எவரும் குடிக்கக்கூடாது என்று அறிவிக்க திருமாவளவனுக்கோ, அல்லது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் குடிக்கக்கூடாது என்று அறிவிக்க அன்புமணிக்கோ துப்பில்லை.

ஆனால், மதுவிலக்கு பற்றி மேடையில் மட்டும் முழங்கும் இவர்களின் செயல், பொல்லாங்குத்தனமானது.

கூட்டணியில் கலகம் அல்லது திமுக அரசுக்கு நெருக்கடி என்பதை உள்ளீடான கருத்தாகக் கொண்டு, மதுவிலக்கு மாநாடு என்று கதைக்கு உதவாக வெறும் பேச்சு-வெட்டிக் கூத்துடன் உலாவரும் திருமாவளவனுக்கு, அடுத்த ஆட்சியில் எங்கள் கட்சிக்கு ஓர் அமைச்சர் பதவி வேண்டும் என்று நேரில் கேட்கத் துணிவில்லை.

ஏதேதோப் பேசி குறுக்குசால் ஓட்டி அம்பலப்பட்டு நிற்கிறார் திருமாவளவன்.

திமுக-விற்கு கொஞ்சம் துணிவும் கொஞ்சம் மானமும் இருந்தால், வரும் பொதுத் தேர்தலில் திருமாவளவனை துணிந்து வெளியேற்ற வேண்டும்.

மலேசியாவிற்கு வரும்பொழுதெல்லாம், பொது நிகழ்ச்சி முடிந்த பின், ஒருசில தரப்பினருடன் தனியாகக் கூட்டம் நடைபெறும். செய்தியாளர்கள் உள்ளிட்ட எவருக்கும் அங்கு அனுமதி மறுக்கப்பட்டு, திருமாவளவன் உறவினர்களைத் தனியாக சந்திக்கிறார் என்று தெரிவிக்கப்படும்.

நிலம் கடந்து, நீர் கடந்து, வான் கடந்து, அனைத்துத் தமிழரும் திருமாவளவனின் உறவினராக இருக்கும் நிலையில், மலேசியாவிற்கு வரும்பொழுதெல்லாம் ஒரு சில தரப்பினருடன் மட்டும் ‘உறவினர் சந்திப்பு’ என்றால், அதன் பொருள் என்ன என்பதைப் பற்றி உலகத் தமிழர்களே முடிவெடுத்துக் கொள்ளட்டும்.

உண்மை எந்நாளும் வெல்லட்டும்!!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles