
-நக்கீரன்
கோலாலம்பூர், அக்.17:
மலேசியத் தமிழ்ச் சமுதாய வீதியில் உலாவரும் நல்லோரே, வல்லோரே, மேடைகாணும் நாவலரே, தாளையும் கோலையும் ஏந்திய காலம் மாறி கையடக்கக் கருவிவழி ஊடகவினையாற்றும் இதழாளரே, மாந்தநேய திராவிடர்க் கழகத்தின் பெயரில் பொய்ச் செய்தி பரப்பி கலகம் விளைவித்து குளிர்காயும் மதவாத-சமூகவிரோத சண்டாளர்களே, உண்மையெது பொய்யெது என அறியாமல் மதத் தலைவர்களாக உருமாறிய அரசியல் தலைவர்களே, நடுநிலை மாந்தர்களே, அன்புகூர்ந்து சிந்திப்பீர் ஒரு கணம்.
இருபதாம் நூற்றாண்டில் தமிழினத்திற்கு வாய்த்தான் ஒரு பெருங்கவி. இனம்-மொழி-சமயம்-விடுதலை என நான்கனுக்கும் ஒருசேர பாடாற்றினான் தன் பாவழி, அந்த மாகவி.
ஓம் என்னும் ஓங்கார ஓசையுடன் சக்தியை வணங்கிய பாரதியார், தமிழர்களின் ஆன்மிகப் பயணம் கொற்றவை வழிபாட்டில் தொடங்கியது என்பதை நன்கு அறிந்தவன்; தெளிந்தவன்.
ஆதித் தமிழன் உருவாக்கிய குமரியைத்தான் சக்தி தேவி என அழைத்தான் பாரதி; ஆண்கள் வீட்டைப் பராமரிக்க வேட்டைக்குச் செல்லும் பெண்தான் ஆற்றல்மிக்கவள் என்று கருதியதுடன், தங்களை காக்கும் தெய்வமாகவும் கருதி, வாலைக்குமரியை உருவகப்படுத்தி வணங்கிவந்தான் முன்னைத் தமிழன். தமிழர்தம் நெடிய வாழ்வில், வழிவழிவந்த சக்தியை நினைத்த பொழுதெல்லாம் பாரதியின் கண்கள் அகலவிரியும். தீதையும் தீயரையும் எண்ணிய பொழுதெல்லாம் சக்தி தேவியை நினைத்து வெகுண்டெழும் பாரதியின் முகத்தில் கோபம் கொப்பளிக்கும்; விழியோ அகல விரிந்து கனலைக் கக்கினான் புதுமைப் பாவலன் பாரதிகும்.

ஒரேயொருபொழுது மட்டும், அந்த உமையவளிடம் சாந்தமாக அண்டி நின்றான், அப்பாமகன்.
காணி நிலம் வேண்டும்; எனக்கு காணி நிலம் வேண்டும் என்று தனக்காக கோரிக்கை வைத்த அந்த நேரத்தில் மட்டும் பராசக்தியை உள்ளத்தே ஏந்தி, தன்னடக்கதுடன் கம்பீரம் தாழாது நின்றான் பாரதி;
அப்படிப்பட்ட பாரதி, இப்படியும் சொன்னான்.
ஆயிரக் கணக்கானோருக்கு அன்னதானம் இடுவதைக் காட்டிலும் பல்லாயிரக் கணக்கில் ஆலயங்களை உருவாக்குவதைக் காட்டிலும் ஒரேவோர் ஏழைக்கு எழுத்தறிவிப்பது கோடி புண்ணியம் என்றான்.

அப்படியானால், பாரதியார் என்ன, இறை மறுப்பாளரா? இல்லவே இல்லை. அந்த வேளையில் பாரதியின் நோக்கம் கல்வி மீது குவிந்திருந்தது; ஏறக்குறைய அதையேத்தான் இந்த மண்ணில் சற்று மாற்றிச் சொன்னார் நாக பஞ்சு.
ஆனாலும் பாரதி அறிந்திருந்தான் சமயம் வேறு; கல்வி வேறு; அரசியல் வேறு என்பதை; அதனால்தான் அவன் மாகவி. ஆனால், இன்று பொறுப்பிலுள்ள பலரின் சறுக்கலைச் சுட்டிக் காட்டினால், சிந்திப்பதற்குப் பதிலாக தனிமனித சினம் கொண்டு நிந்திக்கப் பார்க்கின்றனர்.
அரசியல்வாதியாக இருக்கட்டும்; ஆன்மிகவாதியாக இருக்கட்டும்; எவராயினும் பாரதியாரின் இக்கூற்றை, ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்றால், இற்றைக்காலத்தில், பெரும்பாலான தலைவர்கள் மதவாதியராக உருமாறி இருக்கின்றனர்.
மலேசிய இந்து சங்கமும் அதன் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசனும் பாரதியின் கருத்தை ஓரளவேணும் உணர்ந்ததாலோ அல்லது மாந்தநேய திராவிடர்க் கழகத்திற்கு எதிரான பொய்ப்பிரச்சாரம்பற்றி அறிந்ததாலோ என்னவோ, தமிழ்ப் பள்ளிகளில் சரசுவதி வழிபாடு குறித்து, அண்மை நாட்களாக நிகழும் தேவையற்ற இந்த சர்ச்சையில் இருந்து விலகி நிற்கின்றனர் போலும்

இந்த விவகாரத்தில் உண்மையில் களத்தில் இறங்கியிருக்க வேண்டிய இந்து சங்கம் அமைதி காக்கிறது; ஆனால், போவோர் வருவோரெல்லாம் ஆளாளுக்கு கையில் திறன்பேசி இருக்கிறது என்பதற்காகவும் ஒலிவாங்கியை முன்னால் நீட்டுகின்றனர் என்பதற்காகவும் ஏதேதோ சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.
விழிப்புணர்வு என்றால் என்னவென்றே அறியாத சில அசடரும் கசடரும் விழிப்புணர்வு இயக்கம் என்னும் பெயரில் கூட்டுசேர்ந்து மாந்த நேய திராவிடர்க் கழகத்தைத் தடைசெய்யக் கேட்டு சங்கப் பதிவகத்தில் வேண்டுகோள் வைத்துள்ளனராம்;
உண்மையை உணராத இதேத் தற்குறிக்கூட்டம், இரு நாட்களுக்குமுன், காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு ஊடகத்திற்கு காட்சியும் கொடுத்தது. அதேவேளை, அரசியல் தலைவர்களில் சிலர் இந்த விவகாரத்தில் அடித்தாடும் விதமாக அறிக்கை வெளியிட்டதும், முரண்பாடான கருத்தைப் பதிவிட்டதும் மிகவும் வருத்தத்திற்குரியது.
அரச அதிகாரத்தில் இருப்போரும் இருந்தோரும் ஏன் இப்படி ஆத்திரமும் அவசரமும் அடைந்தார்கள் என்பதை உற்றுநோக்கினால், ஓர் உண்மை வெளிப்படும். மலேசிய தேசிய அரசியல் மட்டுமல்ல; உலக அரசியலின் போக்கே இன்று இனவாதமும் மதவாதமும் இயைந்ததாக வலச்சாரித்தன்மையுடன் உருமாறி வருகிறது.
சரசுவதி வழிபாடு பற்றிய இந்தச் சர்ச்சை, பொய்யான வானூடகச் செய்தியால் நேர்ந்துள்ளது; மாந்த நேய திராவிடர்க் கழகம் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளியிட்டு வரும் அறிக்கையில், தமிழ்ப் பள்ளியில் சரஸ்வதி வழிபாட்டிற்கு தடை விதிக்கும்படி அவர்கள் கேட்கவேயில்லை; கோரிக்கை வைக்கவும் இல்லை;
ஆனாலும், அப்படி கேட்டுக்கொண்டதாக திருட்டு மதவெறிக் கும்பல் பொய்முகம் காட்டி வெளியிட்ட இச்செய்தி, பொய்ச் செய்தி என்பதை ஏதோவொரு வகையில் உணர்ந்த மலேசிய இந்து சங்கம், உடனே அறிக்கை வெளியிட்டிருந்தால், கிணற்றுத் தவளைப் போல தத்திக் குதித்தவர்களும் கத்தித் தீர்த்தவர்களும் உண்மையை உணர வாய்ப்பேற்பட்டிருக்கும்.
நாட்டின் இந்தப் பாரம்பரிய சமய அமைப்பு ஏனோ மௌனம் காத்துவருகிறது.
ஒரு மாநில மந்திரியோ திராவிட இயக்கத்தை தடைசெய்ய வேண்டும் என்று கேட்கிறது; திராவிட இயக்கத்தை ‘கஞ்சா பார்ட்டி’ என்கின்றன சில கஞ்சித் தொட்டி இழிபிறவிகள்; மூன்று தினங்களுக்குப் பின், மீண்டும் ஒரு காட்சி ஊடகத்தில் கொக்கரித்துள்ள அதேப்பெண், தமிழ் நாட்டில் ஜெயலலிதா மறைந்ததால்தான் திமுக என்னும் ‘கஞ்சா பார்ட்டி’ ஆட்சிக்கு வந்துள்ளதாக கூவி இருக்கிறது. வாயைத் திறந்தாலே ‘கஞ்சா பார்ட்டி’, ‘கஞ்சா பார்ட்டி’ என்று ஓலமிடும் இது, தமிழ்ப் பாத்தியில் முளைத்திருக்கும் களையைப் போலத் தெரிகிறது; ஒருவேளை கஞ்சா செடிக்கேப் பிறந்திருக்குமோ இந்தக் கசடி?
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக மாணவர்கள் வியந்து போற்றிய அண்ணா, நாடாளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரையைக் கண்டு நேருவே மிரண்ட அண்ணா, வாட்டிகன் நகரில் போப்பாண்டவர் வாழ்த்திய அண்ணா,
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் திருமூலர் வாக்கை முன்மொழிந்து உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை ‘கஞ்சா பார்ட்டி’ என விமர்சிக்கும் ‘இது’க்கு, அரசியல் ஞானமும் இல்லை; ஆன்மிகத் தெளிவும் இல்லை; தமிழியப் பாங்கும் பண்பாடும்கூட கிஞ்சிற்றும் இல்லை இல்லை;
நெல் மணியுடன் கலந்திருக்கும் இந்தப் பதர், தூற்றப்படும் நாள், அமையும் ஒரு நாள்!
இன்னும் சிலதுகள், சரஸ்வதி வணக்க முறைதான் தமிழ்ப் பள்ளியின் அடையாளம் என்கின்றன. அது இல்லாவிட்டால், தமிழ்ப் பள்ளியின் சுவடே அற்றுவிடும் எனவும் பிதற்றுகின்றன.
சங்க இலக்கியத்தில் சரசுவதி வணக்க முறை பற்றி எங்குமே குறிப்பு இல்லை; பக்தி இலக்கியத்தில்கூட அன்னை உமையவள் வழிபாட்டைப் பற்றித்தான் சொல்லப்பட்டுள்ளது.
உண்மையில் பரமனொரு பாகியும் சக்தி வடிவானவளுமான பார்வதியை வணங்குவது, ஆதித் தமிழன் உருவாக்கிய கொற்றவை வழிபாடு என்னும் தாய் வணக்க முறையின் நீட்சிதான்.
யாமறிந்த புலவரிலே, வள்ளுவர் போல, இளங்கோவைப் போல, கம்பரைப் போல பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை என்று சொன்னானே பாரதி, அந்தப் பாரதி குறிப்பிட்ட முவரில் முதலாமவரும் உலக இலக்கிய மேடையில் தமிழுக்கு இருக்கை ஏற்படுத்திக் கொடுத்தவருமான திருவள்ளுவர் சரசுவதியை வணங்கியதில்லை; தமிழினத்திற்கு துரோகம் இழைத்தாலும் தமிழ் மொழிக்காக வரப்பு எழுப்பிய கம்பனும் சரசுவதியை வணங்கியதில்லை; இந்த இருவருக்கும் காலத்தால் இடைப்பட்டவரும் மாந்தரை நாயகராகக் கொண்டு, சிலப்பதிகாரம் என்னும் பேரிலக்கியத்தை மக்கள் காவியமாகப் படைத்த இளங்கோ அடிகள்கூட சரசுவதியை வணங்கியதில்லை.

இம்மூவரையும் உயர்த்திப் பாபுனைந்த மாகவி பாரதியும் பராசக்தியை வணங்கினானேத் தவிர, சரசுவதியை வணங்கி, அந்தக் கல்விக் கடவுளின் அருள்பெற்று பெரும்பாவலராகத் திகழவில்லை.
தமிழ் மண்ணையும் மக்களையும் மாற்றார் ஆண்ட கி.பி. 6,7,8,9ஆம் நூற்றாண்டுகளில் பல்லாயிரக்கணக்கான சிவநேசப் பாடல்களை இலக்கணம் தப்பாமல், நற்கவிதை மொழியில் இயற்றினார்களே நால்வர் உள்ளிட்ட நாயன்-மார் பெருமக்கள், அவரனைவரும் நல்ல புலவர்கள்; அப்படிப்பட்டவர்களும் சரசுவதியை வணங்கவில்லை;

மாதொருபாகனாகிய பரமனையும் பரமனொருபாகியான அன்னை உமையவளையும் மட்டுமே வணங்கினர்; தொண்டறத்தையும் பேணிய அந்த நாயன்மார் திருக்கூட்டத்தினர், அம்மையே-அப்பா என்று இவ்விரு இறைத்திருமக்களை மட்டுமே வணங்கினர்,
உண்மைநிலை இவ்வாறிருக்க, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இந்து சமயம் தமிழ் வளர்த்ததாக, சரசுவதி சர்ச்சையின் ஊடாக சிலர் கூறுவது அறியாத்தனம்.
உண்மையில், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பௌத்தம், சமணம், சைவம், சூரிய வணக்கமுறையான சௌரம், கொற்றவை வணக்கமுறையான சாக்தம், தமிழ்க் கடவுள் திருமுருக வழிபாடான கௌமாரம், கணபதியம், சீக்கியம், ஜைனம் உள்ளிட்ட அனைத்து மதக் கொள்கைகளையும் இணைத்து இந்து சமயம் கட்டமைக்கப்பட்டது.
இந்த ஏற்பாடு, பிரிட்டீஷ் ராணியைப் பொருத்தமட்டில், இந்தியாவில் யாரெல்லாம் கிறித்துவர்கள் அல்லரோ, எவரெல்லாம் முஸ்லிம் அல்லரோ, யார்யார் பார்சிக்கள் இல்லையோ மற்ற அனைவரும் இந்துக்கள் என மக்கள் தொகைக் கணக்கை முடிக்க வசதியாகப் போயிற்று;
மராட்டிய சித்பவன பிராமணரான பாலகங்காதர திலகர் தலைமையிலான ஆரியர்களைப் பொருத்தவரை, கிறித்துவர்களைவிட, இஸ்லாமியர்களவிட இந்துக்களாகிய தாங்கள்தான்(அதாவது, பிராமணர்கள்) அதிக எண்ணிக்கை-யில் இருக்கிறோம் என்றுகூறி, அதிக வேலை வாய்ப்பு கேட்டு ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை வைக்க வசதியாகப் போயிற்று;
அதாவது, இருதரப்பு நலன் என்னும் அடிப்படையில் இந்திய பிராமணர்களுக்கும் இங்கிலாந்து அரண்மனைக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட நிருவாக ஒப்பந்தம்தான் இந்து சமயம் எனபதை, ஆன்மிக சான்றோர் பெருமக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
காலமெல்லாம் பொய்பேசும் சங்கராச்சாரிகூட, தான் வெளியிட்ட தெய்வத்தின் குரல் என்னும் இதழில், “நமக்கெல்லாம் இந்து என்று வெள்ளைக்காரன் பெயர்வைத்தது நல்லதாகப் போயிற்று; இல்லாவிட்டால், நாம் அனைவரும் சைவர்கள் என்றும் வைணவர்கள் என்றும் சண்டை போட்டுக் கொண்டிருப்போம்; சிவனை வழிபடுபவகள் திருமாலை வணங்குவதில்லை; அதைப்போல கிருஷ்ணரைக் கும்பிடுபவர்கள் சிவனாலயத்திற்கு செல்லவேமாட்டார்கள்; இதில் வைணவர்களுக்குள்ளேயும் வடகலை உயர்ந்ததா தென்கலை சிறந்ததா என்ற சண்டைவேறு மறுபக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும். இதற்கெல்லாம் இடமில்லாமல் செய்த வெள்ளைக்காரனுக்கு நாம் சொல்ல வேண்டும்” என்று எழுதி உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதை எவராவது மறுக்கமுடியுமா?
இத்தகைய சமய வரலாற்று உண்மையை உணராத சிலர், கி.பி.6-ஆம் நூற்றாண்டில் இந்து சமயம் தமிழ் வளர்த்ததாகக் கூறுகின்றனர். இதற்கெல்லாம் காலமென்னும் நல்லாசிரியன்தான் கட்டியம்கூற வேண்டும்.
இந்தக் காலக் கட்டத்தில் தமிழை வளர்த்து, தானும் வளர்ந்தது சைவம்தான். இந்து சமயம் உருவானபின் தமிழுக்கும் சைவத்திற்கும் பெருந்திரை போடப்பட்டுவிட்டது. இறைவனை நினைத்துப் பாட வேண்டிய தேவார-திருமுறைப் பாடல்கள் இப்போது இறப்பு வீட்டிற்கானவை என்றாகிவிட்டது.
இந்த நிலையில், திருமுறைக்கும் சைவத்திற்கும் மேன்மேலும் இரும்புத்திரை போடும் விதமாக, தமிழும் சமயமும் பிரிக்க முடியாதவை என்று சிலர் பேசி வருகின்றனர்.
அண்மைக்காலம்வரை, தமிழும் சைவமும் பிரிக்கமுடியாதவை; காரணம் இவை இரண்டும் தமிழருக்கு இரு கண்களைப் போன்றவை என்றுதான் சொல்லப்பட்டுவந்தன; ஆறுமுக நாவலர், தன் வாழ்நாள் முழுக்க இதையே சொல்லி வந்தார். அருட்திரு வள்ளலார் சுவாமிகளை வழக்காடுமன்றத்தில் சந்தித்தபோதும் ஆங்கிலேயே நீதிபதிக்குமுன் ‘தமிழும் சைவமும்’ பிரிக்க முடியாதவை என்றுதான் ஆறுமுக நாவலர் குறிப்பிட்டார். ஏனைய சைவப் பெருமக்களும் இதேயே சொல்லிவந்தனர்.
இப்பொழுது, திருமுறையையும் சைவத்தையும் இருட்டடிப்பு செய்யும் விதமாக சிலர் பேசிவருவது, அரசல்புரசலாக ஒட்டிக்கொண்டிருக்கும் திருமுறைசார் சைவத்தை அடியோடு அழிப்பதற்கு சமம்.
இவர்கள் குறிப்பிடுகின்ற தமிழும் சமயமும் பிரிக்க முடியாதவை என்பதி-லாவது பொருளுண்டா என்றால் அதுவும் இல்லை; இவர்கள் குறிப்பிடும் சமயம்தான் தமிழை வீதியில் நிறுத்திவிட்டு, சமற்கிருதத்திற்கு மட்டும் சிவப்புக் கம்பளம் விரித்து வெண்சாமரம் வீசுகிறது.
இத்துணைக் கருத்தாடலுக்கும் அடிப்படையாக அமைந்தது மலேசிய மாந்தநேய திராவிடர்க் கழகத்தின் சார்பில் அதன் தேசியத் தலைவர் நாக.பஞ்சு வெளியிட்ட அறிக்கையா என்றால், நிச்சயமாக இல்லை.
தமிழ்ப் பள்ளிகளில் சரசுவதி பூசையை முன்னிட்டு, ஆலயங்களில் அல்லது வழிபாட்டு இடங்களில் செய்வதைப்போல ஒன்பது நாட்களுக்கு கொளுவைத்து குருக்களை வரவழைத்து பாடநேரத்தில் நீண்ட நேரம் பூசை செய்யலாமா? அதுவும் தமிழ்ப் பள்ளியில் சமஸ்கிருத மந்திரம் ஓதலாமா என்று கேட்டுத்தான் நாக. பஞ்சு அறிக்கை வெளியிட்டார்.
இந்த ஆண்டு மட்டுமல்ல: கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறார்.
அப்பொழுதெல்லாம், சமயத் தலைவர்களோ அல்லது மதவாத அரிதாரம் பூசிக்கொண்ட அரசியல் தலைவர்களோ அல்லது கல்வி அமைச்சக பொறுப்பாளர்களோ இதுகுறித்து அறிக்கை வெளியிடவும் இல்லை; விளக்கம் சொல்லவும் இல்லை.
இப்பொழுது ஒருசில அதிகாரிகள் சொல்வதைப் போல, தமிழ்ப் பள்ளியில் நீண்ட நேரம் பூசை நடைபெறுவதில்லை; சமற்கிருத மந்திரமும் ஓதப்படுவதில்லை; மாறாக திருமுறைப் பாடல்கள்தான் பாடப்படுகின்றன என்றெல்லாம் கடந்த மூன்று ஆண்டுகளாக எவரும் சொல்லவில்லை. உண்மையை உரக்கச் சொல்ல வேண்டுமென்றால், இதுகுறித்து அனைவரும் கடந்துபோகவே விரும்பினர். விளக்கம் சொல்லவும் அவர்களிடம் சாரம் இல்லை.
ஆனால், நாக. பஞ்சுவின் அறிக்கையை, ஏதோவொரு மதவாத திருட்டுக் கும்பல், திரித்து, தமிழ்ப் பள்ளிகளில் சரஸ்வதியை பூசையைத் தடைசெய்ய வேண்டும் என்று கேட்டு, நாக பஞ்சு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று சமூக வலைத்தளத்தில் கள்ளத்தனம் புரிந்துள்ளது.

நாக பஞ்சு கல்வி அமைச்சுக்கு அப்படிப்பட்ட கடித்தத்தை அனுப்பினாரா என்று தெரிந்துகொள்ளாமல், அமைச்சர் முதல் அடியாள்வரை யார் வேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் பேசட்டும்.
ஒரு நீண்டகால பத்திரிகையாளர்கூட, ‘கடவுள் இல்லை என்னும் கோஷ்டி’ என்று கடுமையாக திராவிட இயக்கத்தை விமர்சித்துள்ளார்.
இந்தக் கடவுல் இல்லை யென்னும் கோஷ்டி, எந்த ஆலயத்தின் நிதியிலாவது கையாடல் செய்துள்ளதா அல்லது எந்தக் கோயிலிலாவது சிற்பங்களை உடைத்துவிட்டு பின்பு மனநிலை பாதிக்கப்பட்டவன் என்றுகூறி பித்தலாட்டம் செய்துள்ளதா அல்லது எவரையாவது சாமி கும்பிடாதீர்கள், கோயிலுக்குப் போகாதீர்கள் என்று தடுத்திருருக்கிறதா அல்லது சாமி சிலைகளைத் திருடியும் பின்னர் கடத்தியும் இலாபம் பார்த்துள்ளதா என்பதற்கு இந்தப் பத்திரிகையாரிடம் இருந்து விளக்கம் வருமா என்றால் நிச்சயமாக வராது.
தமிழர்கள் யாவரும் சாதிபேதமற்று சம மக்களாக வாழவேண்டும் என்று விரும்பிய பெரியாருக்கு, சாதியக் கட்டமைப்பிற்கு மதமே ஆதாரமாக இருக்கிறதென்றும் அந்த மததத்திற்கு வேதம் பாதுகாப்பு அளிக்கிறது என்றும் அந்த வேதம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது என்றும் அதன்வழி கடவுள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுவதைக் கண்டு வெகுண்டெழுந்த தந்தை பெரியார், கடவுளே இல்லையென்று ஒருமுறை சொன்னது உண்மைதான்.
மற்ற பொழுதெல்லாம், தமிழர்தம் இறைநேயப் பயணத்திற்கு துணையாகத்தானே இருந்தார்;
தமிழர்கள் கட்டிய கோயிலில் தமிழரும் அர்ச்சகராக இருக்கலாம் என்ற பெரியாரின் கருத்தை ஏற்று, கலைஞர் மு.கருணாநிதி சட்டம் இயற்றியது இவருக்குத் தெரியாது போலும்; இந்தச் சட்டத்தை எதிர்த்து பிராமணர்கள் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது; இன்னும் ஆயிரம் சொல்லலாம்; எல்லாவற்றையும்விட, ‘பொத்திக்கொண்டு இருக்க வேண்டும்’ என்று இவர் தன்னுடைய பருவ இதழில் குறிப்பிட்டிடுப்பது அநாகரிகத்தின் உச்சம்.
இந்த நாட்டில், தமிழ் மக்களின்-இந்துக்களின் வழிபாட்டு முறைக்கு என்ன தடை இருக்கிறது?
இஸ்லாமியர்களுக்கான பெரு-சிறு பள்ளிவாசல்களைவிட, கிறித்துவர்களுக்கான தேவாலயங்களைவிட, இந்துக்களுக்குத்தான் மிக அதிக்மான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இவற்றில் அன்றாடம் இடம்பெறும் ஆன்மிக வழிமுறைக்கோ பக்தி மார்க்கத்திற்கோ திராவிட இயக்கம் என்றாவது தடை சொன்னதா?
சமுதாயத்தோடு சமுதாயமாக கைகோத்து நல்லிணக்கத்துடந்தானே பயணிக்கிறது. தமிழ்ப் பள்ளியில் பாடநேரத்தில் கொலுவைத்து சமஸ்கிருதத்தில் வழிபாடு செய்யலாமா என்பதுதான் கேள்வி.
ஒரு பகுத்தறிவு இயக்கம் இதைக்கூட குறிப்பிடாவிட்டால் எப்படி என்பதை, ஒரு பத்திர்கையாளர் உணராவிட்டால் எப்படி?
வேண்டுமெனில் அப்படித்தான் நடந்து கொள்வோம் என்று சொல்லுங்கள்; அதைவிடுத்து கோஷ்டி என்பதும் பொத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் நனிசிறந்த் நாகரிகப் போக்காக அமையாது.
இந்தியர்களுக்கு, சமூக-கல்வி-பொருளாதார தளங்களின்வழி தொண்டாற்ற வேண்டிய அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளும், சமூகத்தில் ஏதோ ஒரு முறுகல் நிலை ஏற்பட்டால் அதைத் தணிக்க முயல வேண்டுமே அல்லாமல், எரிகின்ற நெருப்பில் எண்ணைய்யை ஊற்றுவதைப் போல அறிக்கை விடுவதும், இது உண்மையான தகவலா பொய்ச்செய்தியா என்றுகூட ஊகிக்காமல் அறிக்கை விடுவதும் சமுதாயத்திற்கு நன்மை அளிக்காது.
தலைவர்கள் எனப்படுவோர், எப்போதும் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்; இப்படிப்பட்ட தலைவர்களை சுட்டிக்காட்ட, பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் கடைசி கவர்னர் ஜெனரல் மௌண்ட் பேட்டன் பிரபுவும் தந்தை பெரியாரும் சம்பந்தப்பட்ட ஒரு வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்தியா விடுதலை அடைந்து, பாகிஸ்தானும் பிரிந்து, அமைதி நிலவிய அந்த நேரத்தில், உலகையே உலுக்கிய மாபெரும் அவலம் நேர்ந்தது; இந்தியா விடுதலை பெறப்போவது உறுதியானதும், ‘இந்து-இந்தி-இந்தியா’ என்னும் முக்கூட்டு உணர்வில் இந்து ராஷ்டிராவை அமைக்க, சனாதன ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் இந்து மகா சபையும் கமுக்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்தன.
இந்து சமயத்தின் அடிப்படையில் இந்தியாவைக் கட்டமைத்து, இதை இணைக்கும் கயிறாக இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களின் குயுக்தி.
ஆனால், இந்து ராஷ்டிராவுக்கு அண்ணல் காந்தி அடியோடு மறுப்பு தெரிவித்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட முடிவுசெய்த சனாதன ஆர்.எஸ்.எஸ். இயக்கம், இதற்காக தயார்ப்படுத்தப்பட்ட நாதுராம் விநாயக கோட்சே என்ற பிராமணனை துப்பாக்கியுடன் ஏவிவிட்டது.
1948 ஜனவரி 30-ஆம் நாள், காந்தி சுடப்பட்ட அடுத்தப் பொழுதே கோட்சேவை வளைத்த போலீசார், அவன் கைகளில் விலங்கிட்டபோது, கையில் முஸ்லிம் என்று பச்சை குத்தப்பட்டிருப்பதைப் பார்த்து, ஒருவேளை, இவன் இஸ்லாமியரோ என்ற ஐயத்தில் போலீசார் விசாரித்த மறுகணம், காந்தியை சுட்டது ஒரு முஸ்லிம் என மின்னல் வேகத்தில் செய்தி பரவியது.
இதை அறிந்து அதிர்ந்த மௌண்ட் பேட்டன், அப்படி யெல்லாம் இருக்காது என்று உடனிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, கைதுசெய்யப்பட்ட கோட்சே வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு விரைந்தார்.

அதற்குள் காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்னும் பொய்ச்செய்திக்கு இறக்கை முளைக்க ஆரம்பித்துவிட்டது; கோட்சேவோ உள்ளூர மகிழ்ந்தான்; காந்தியைக் கொல்ல வேண்டும்; அதேவேளை இந்து-முஸ்லிம் கலவரம் மீண்டும் ஏற்பட வேண்டும் என்று அவன் வகுத்தத் திட்டம் ஈடேறத் தொடங்கியதால் இந்த மகிழ்ச்சி அவனுக்கு.
ஆனால், உண்மையை உடனே ஊகித்த மௌண்ட பேட்டன், நாடு இன்னொரு மதக் கலவரத்தைத் தாங்காது என்றும் இதை உடனேத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், உடனே தென் கோடி முனையில் இருந்த பெரியாரைத் தொடர்பு கொண்டார்.
அப்போதைய சென்னை மாகாணம் என்பது, இன்றைய கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடக மாநிலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பெருநிலப்பரப்பாக இருந்தது. மௌண்ட் பேட்டன் பிரபுவின் கருத்தை அறிந்த பெரியார், உடனே வானொலி நிலையத்திற்கு விரைந்து காந்தியைக் கொன்றது முஸ்லிம் அல்லர் என்றும் நாட்டு மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப; மீண்டும் மீண்டும் பேசி நாட்டில் அமைதி நிலவ வழிவகுத்தார்.

அவர் நினைத்திருந்தால், காந்தியைக் கொன்றது ஒரு பிராமணன் என்று வானொலியில் தெரிவித்திருக்கலாம்; அதுபோன்ற எண்ணமெல்லாம் பெரியாரிடம் இருந்தது கிடையாது; அவர் பிராமண மேலாதிக்கத்தைத்தான் எதிர்த்தாரேத் தவிர, தனிப்பட்ட முறையில் அந்த மக்கள்மீது பெய்ர்யாருக்கு எந்த விரோதமும் இல்லை.அ
தகவல் தொழில்நுட்ப வசதி இல்லாத அந்தக் காலத்திலேயே தலைவர்கள், பொய்த் தகவலை அறிந்து, நாட்டுக்கு உரைத்து மக்களைக் காப்பாற்றினர்;
இந்த மண்ணில் இந்தக் காலத் தலைவர்களோ, இவ்வளவு நவீன தகவல் தொடர்பு வசதியைக் கைக்கொண்டிருந்தும், பொய்ச் செய்திக்கு இரையாகி, சமூக வீதியிலும் ஊடகத்திலும் மேலும் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.

வாழ்க இத்தகையோர்; வெல்க பொய்ச்செய்தி பரப்புவோர்; வீழ்க சமுதாயம்;
வேறென்ன சொல்ல.. .!