
🔊To listen to this news in Tamil, Please select the text.
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இதையொட்டி நடத்தப்படும் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.
அமேதியில் தோல்வியடைந்த நிலையில், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
2024 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றி பெற்றார்.
வயநாடு எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில், காங்கிரஸ் சார்பில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர் சத்யன் மோக்கேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால், அத் தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.