
-நக்கீரன்
கோலாலம்பூர், நவ.02:
மேதகு வே.பிரபாகரன் வெளியில் காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள் கலங்கிநின்ற நாட்களில், இன்றைய நவம்பர் இரண்டாம் நாளும் ஒன்று.
2007ஆம் ஆண்டு இன்றைய தினத்தில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் செயலராகவும் சமாதான தூதராகவும் மிகமிக நுட்பமாக பாடாற்றிவந்த சு.ப. தமிழ்ச்செல்வனை, சத்தம் வெளியில் வராத இரகசியக் குண்டுவீச்சு தாக்குதல் மூலம் பொழுது புலரும் தருணத்தில் கொன்றது சிங்கள இராணுவம்.
பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவராகவும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பன்னாட்டு முகமாகவும் விளங்கிய பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், இந்த நிலையை எட்டுவதற்குமுன், களப் போராளியாகவும் படைத் தளபதியாகவும் நீண்ட காலம் களமாடி இருக்கிறார்.
இருந்தபோதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நிலவிய பதவிப் போட்டி, பொறாமை குணம், கீழறுப்பு வேலை போன்றவற்றால் ஐந்து விடுதலைப் புலிகள் புடைசூழ கிளிநொச்சியில் தங்கியிருந்த இரகசிய மறைவிடம் குறித்த தகவலைப் பெற்ற இலங்கை இராணுவம், அனைவரையும் குறிதப்பாமல் வேட்டையாடியது.

தமிழ்ச்செல்வனுடன் லெப்டினண்ட் கர்னல் அன்புமணி முத்துக்குமார், மேஜர் கலையரசன், லெப்டினண்ட் ஆட்சிவேல் பஞ்சாட்சரம், மேஜர் முகுந்தன் தர்மராஜா, லெப்டினண்ட் மாவை குமரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இலங்கை விமானப்படை வீசிய குண்டு, காற்றுவெளியில் ஏற்படுத்திய அழுத்த மாற்றத்தின் விளைவாக காயம் ஏற்படாமல் இறந்தனர்.

துப்பறியும் நுட்பத்திலும் திட்டமிட்ட தாக்குதலிலும் பெயர்பெற்ற விடுதலைப் புலிகளிடம் இருந்து வெற்றிக்கோடு தள்ளி நின்றதுக்கும் ஈழ விடுதலைப் போர் முள்ளி வாய்க்காலில் நிலைகுத்தி நிற்பதற்கும் அந்த இயக்கத்தில் நிலவிய சகோதர சண்டையும் காட்டிக் கொடுத்த இழிகுணமும்தான் முதன்மைக் காரணம்.
சு.ப. தமிழ்ச் செல்வனின் ஈடுசெய்ய முடியாத இழப்பும் அந்த வகையில்தான் நேர்ந்தது.
வாழ்க ஈழத் தமிழ் மக்கள்; வெல்க தமிழீழ தாயகம்.