
கேரளாவில் விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட எல்லையான கேரள மாநிலம் பாறசாலை மூரியங்கரையைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ், 23. திங்கள்சந்தை அருகே நெய்யூரில் தனியார் கல்லுாரியில், ‘ரேடியாலஜி’ இறுதியாண்டு படித்து வந்தார். கல்லுாரிக்கு பஸ்சில் வந்து சென்ற போது, களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறையைச் சேர்ந்த கிரீஷ்மா, 22, என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதற்கு கிரீஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், பிப்ரவரியில் ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனால் கிரீஷ்மா, தன் காதலன் ஷாரோனுடன் தொடர்பை குறைத்தார். ஆனால், ஷாரோன் தொடர்ந்து அவருடன் பேச முயற்சித்தார். இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் ஷாரோனிடம் இருந்ததால், அவரை வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.
வாந்தி எடுத்த அந்த வாலிபர், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். பாறசாலை போலீசார் கிரீஷ்மாவை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் கிரீஷ்மாவுடன் சேர்த்து அவரது தாய் சிந்து, மாமா நிர்மலாகுமரன் நாயர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.