
வங்காளதேசத்தை சேர்ந்த முதலாவது அந்நிய தொழிலாளர் குழு இன்று மலேசியா வந்தடைந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி, மலேசியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான வங்காளதேச பிரஜைகளைப் பணியமர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இங்கு வந்துள்ளதாக மனிதவள அமைச்சர், டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்தார். 2026-ஆம் ஆண்டு வரைக்குமான ஐந்து ஆண்டுகால ஒப்பந்தத்தில் தாமும் வங்காளதேச புலம்பெயர்ந்தோர் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், இம்ரான் அஹ்மட்டும் கையெழுத்திட்டதாக அவர் கூறினார். இன்று தொடங்கி கட்டம் கட்டமான மலேசியாவிற்கு வரும் வங்காளதேசப் பிரஜைகள் உற்பத்தி துறையில் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சரவணன் குறிப்பிட்டார். சுமார் 6,000 வங்காளதேச பிரஜைகளை பணியமர்த்துவதற்காக உள்நாட்டைச் சேர்ந்த 80 முதலாளிகள் செய்த விண்ணப்பத்திற்கு கடந்த வாரம் மலேசியாவிற்கான வங்காளதேச தூதரகம் ஒப்புதல் அளித்தது.
