
கிள்ளான்: போர்ட் கிள்ளான் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் வழங்கியுள்ள நோட்டீஸ் தொடர்பாக பக்தர்கள் மற்றும் கிள்ளான் வட்டார சமூகத்தினரிடையே கவலை ஏற்பட்டுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
அரசு நிலத்தில் ஆலயம் அமைந்துள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து நேரடியாக விளக்கம் பெறுவதற்காக ஆலயத் தலைவர் மற்றும் நிர்வாகத்தினரை தாம் சந்தித்ததாக அவர் கூறினார்.
“இந்த நோட்டீஸ் பக்தர்கள் மற்றும் கிள்ளான் வட்டார சமூகத்தினரிடையே இயல்பாகவே கவலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, நிலவரத்தை நேரடியாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் கோயில் தலைவர் மற்றும் நிர்வாகத்தினரை சந்தித்தேன்,” என்று அவர் தெரிவித்தார்.
அவரிடம் ஆலய நிர்வாகம் வழங்கிய விளக்கத்தின்படி, இவ்விவகாரம் தற்போது நடைபெற்று வரும் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (ECRL) திட்டத்துடனும், குறிப்பாக நோர்த்போர்ட் (Northport), வெஸ்ட்போர்ட்ஸ் (Westports) ஆகியவற்றை இணைக்கும் சரக்கு ரயில் சேவைகளுக்கான ரயில் உள்கட்டமைப்பு அமைக்கும் திட்டத்துடனும் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் இடதுபுறத்தில் மூன்று தூண்கள் (piers) அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், உயர்த்தப்பட்ட ரயில் பாதையின் ஒரு பகுதி தற்போது உள்ள சில கோயில் கட்டமைப்புகளுக்கு மேலாகச் செல்லும் வகையில் அமையக்கூடும் என்றும் தமக்கு விளக்கப்பட்டதாக டாக்டர் குணராஜ் கூறினார்.
எனினும், தற்போதைய நிலையில் தமக்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆலயத்தின் முக்கியக் கட்டமைப்புகள் பாதிக்கப்படவோ அல்லது இடிக்கப்படவோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்மொழியப்பட்ட தூண்களின் துல்லியமான இடம் மற்றும் கட்டமைப்பு தொடர்பான விவரங்கள் அதிகாரப்பூர்வ தொழில்நுட்பத் திட்டங்களின் மூலம் இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆலய நிர்வாகம் போக்குவரத்து அமைச்சு மற்றும் தொடர்புடைய ரயில்வே சொத்து அதிகாரிகளுடன் நெருக்கமாக தொடர்பில் இருப்பதாகவும், முன்மொழியப்பட்ட கட்டமைப்புகளின் விரிவான வழித்தடம் மற்றும் துல்லியமான இடம் தொடர்பான விவரங்கள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் அடுத்த கூட்டத்திற்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து மேலதிக தகவல்கள் மற்றும் விளக்கங்களை நேரடியாகப் பெறுவதற்காக கிள்ளான் மாவட்ட அதிகாரியையும் சந்திக்கவுள்ளதாக டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
“எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், இந்த அறிவிப்பு மற்றும் முன்மொழியப்பட்ட ECRL உள்கட்டமைப்பு தொடர்பான தாக்கங்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தை பொறுப்புடன் கையாளும் வகையில், கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் உட்பட அனைத்து தொடர்புடைய அரசு அமைப்புகளுடனும் ஆலய நிர்வாகம் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தொழில்நுட்பத் திட்டங்களும் உண்மைகளும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் வரை, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பதற்றமடையவோ அல்லது அவசர முடிவுகளை எடுக்கவோ வேண்டாம் என்று டாக்டர் குணராஜ் கேட்டுக்கொண்டார்.
“ECRL என்பது மக்களுக்கு பயனளிப்பதையும், நாட்டின் போக்குவரத்து மற்றும் சரக்குக் கையாளும் கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டமாகும். அதேவேளையில், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் நலன்களும் முறையாகக் கருத்தில் கொள்ளப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
சமூகத்தினருக்கு தெளிவான, துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இந்த விவகாரத்தை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன், ஆலய நிர்வாகம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன் என்றும் டாக்டர் குணராஜ் கூறினார்.
“மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதேவேளையில், நமது வழிபாட்டுத் தலங்கள், பாரம்பரியம் மற்றும் உள்ளூர் சமூகத்தின் நலன்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் அப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.


