24.7 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

“முட்டாள்தனமாக நடக்காதீர்” இந்து சங்க மாநில-வட்டாரத் தலைவர்களை மிரட்டும் அருண் துரைசாமி உண்மையில் யார்?

-நக்கீரன்

கோலாலம்பூர், ஆக.15
மலேசிய இந்து சங்க மாநில வட்டாரத் தலைவர்களைப் பார்த்து “முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்” என்று அவர்களை கண்ணியக் குறைவான வார்த்தைகளால் திட்டவும் விமர்சிக்கவும் முனைந்துள்ள அருண் துரைசாமி, இந்து சங்க தலைமைத்துவ சிக்கலில் தன்மூப்பாகத் தலையிட்டுள்ளார்.

இந்து சங்கத்தின் மத்தியப் பேரவையிலோ, எந்த மாநிலப் பேரவையிலோ அல்லது வட்டாரப் பேரவையிலோ எவ்விதப் பொறுப்பும் வகிக்காத இவர், இந்து சங்க தலைமைத்துவ சிக்கல் நீதிமன்றத்தில் இருக்கின்ற இந்த வேளையில், மாநில மற்றும் வட்டாரத் தலைவர்களை இப்படி மூர்க்கத்தனமாகவும் தன்மூப்பாகவும் மிரட்டுவதற்கு என்ன தகுதியும் அதிகாரமும் இருக்கிறது என்றக் கேள்வி எழுந்துள்ளது.

இதன் தொடர்பில் அருண் துரைசாமி ஆகஸ்ட் 12-ஆம் நாளில் வெளியிட்ட காணொளிக் காட்சி மூலம் இத்தகைய சண்டித்தனத்தைப் புரிந்துள்ளதாகத் தெரிகிறது.

மலேசிய இந்து சங்கத்தில் மோகன் ஷாணுக்கு எதிரான போக்கும் மனநிலையும் இந்து சங்க உறுப்பினர்கள் மற்றும் இந்து சமயத்தினர் மத்தியில் முன்பைவிட இப்பொழுது இன்னும் உச்சத்தில் இருக்கிறது. இதன் பிரதிபலிப்பாக, கடந்த 45-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் புதிய தலைவராக தேர்வு பெற்ற ‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசனுக்கு ஆதரவு அளிக்கும்படியும் அதன் உறுதிப்பாட்டை உடனடியாக வெளியிடும்படியும் பினாங்கு மாநில இந்து சங்கத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பேரவைகளும் ஒன்றிணைந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதை பினாங்கு பட்டர்வோர்த் வட்டார கோ.சண்முகநாதன் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

இதைப் போலவே நாட்டின் தென்புலத்தில் உள்ள ஜோகூர் மாநிலப் பேரவைத் தலைவர் ‘சங்கரத்னா’ ஆர். இராமகிருஷ்ணனும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன் உச்சக்கட்டமாக, ஜோகூர் இந்து சங்க அலுவலகக் கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த மோகன்ஷானின் படத்தையும் வட்டாரப் பேரவைத் தலைவர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்களின் முன்னிலையில் அகற்றிவிட்டனர்.

இத்தகையப் போக்கு நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கிறது. இதைக் கண்டு பொறுக்கமுடியாத மோகன்ஷான் தரப்பு, அருண் துரைசாமியை ஏவி விட்டுள்ளதாகத் தெரிகிறது.

மோகன்ஷான், தன்னை இன்னமும் ஆதரிக்கும் கெடா, பெர்லிஸ், கிளந்தான், திரங்கானு, சபா மாநிலத் தலைவர்களின் ஆதரவை தொடர்ந்து தக்கவைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகின்ற வேளையில், அதைப்பற்றி ஒன்றும் சொல்லாத அருண், தங்க. கணேசனை ஆதரிக்கும் மாநிலத் தலைவர்களைப் பார்த்து “சும்மாவிட மாட்டேன்”; “அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன்”; “நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துவேன்; “முட்டாள்தனமாக செயல்படாதீர்கள்” என்றெல்லாம் மிரட்டவும் முரட்டுத்தனம் காட்டவும் முனைந்துள்ளார்.

இந்து சங்க மாநிலப் பேரவைகளின் நிருவாகம் குறித்தோ நடைமுறைக் குறித்தோ நீதிமன்றம் எதுவும் தெரிவிக்காத நிலையில், நீதிமன்றத்தின் பெயரைச் சொல்லி காலங்காலமாக சமய-சமூகத் தொண்டாற்றும் மாநில, வட்டாரத் தலைவர்களைப் பற்றி “குட்டையைக் குழப்புகின்றனர்” என்று மட்டம் தட்டுவதும் மிரட்டும் தொனியில் பேசுவதும் முறையா? யார் இவருக்கு இந்த மிரட்டும் உரிமையை அளித்தது யார்? இதன் பின்னனியில் இருந்து செயல்படுவது யார்?

மலேசிய இந்து சங்க உறுப்பினர்களும் சங்கத்தின் மத்தியப் பேரவையினரும் 45-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு மதிப்பளித்து பதவி விலகிய டத்தோ மோகன் ஷாணை, மதிமயக்கி அக்கப்போரான முடிவுகளை எடுக்கும்படி ஓரிரு தரப்பினர் அவரை தூண்டிவிடுவதாகத் தெரிகிறது.

இதனால், பதவி விலகிச் சென்ற மோகன்ஷான், மீண்டும் தலைமைத்துவ போராட்டத்தில் ஈடுபட்டதால், இந்தப் பிரச்சினை இப்பொழுது நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. இதன் விளைவாக, மலேசிய இந்து சங்கத்தினரும் இந்துக்களும் கடுமையாக விமர்சிக்கும் நிலைக்கு ஆளான மோகன்ஷான், இந்து சங்க மாநிலத் தலைவர்களையும் வட்டாரப் பேரவைப் பொறுப்பாளர்களையும் நேரடியாகச் சந்திக்கும் திராணி இல்லாமல் அருண் துரைசாமியை தூண்டிவிட்டு அவரின் பின்னால் பதுங்கிக் கொள்கிறாரோ என்று இந்து சங்க மாநில-வாட்டாரப் பேரவையினர் கருதுகின்றனர்.

நீதிமன்றத் தீர்ப்பு எதுவாயினும் அது அடுத்த மாதம் 28-ஆம் நாளில் தெரியவரும். இடைப்பட்ட இந்த நேரத்தில் அருண் துரைசாமி மாநிலத் தலைவர்களை மிரட்டுவதும் மரியாதைக் குறைவாக விமர்சிப்பதும் எந்த வகையில் சரியென இந்து சங்கத்தினர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மொத்தத்தில், இந்து சங்க தலைமைத்துவ சிக்கலில் முனைப்பு காட்டவும் தலையிடவும் அருண் துரைசாமி யார் எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இனியும் இது போன்று காணொளி வெளியிடுவதையும் மேனாள் தலைவருக்கு மறைமுக துதிபாடுவதையும் அருண் துரைசாமி உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில், அவர்மேல் போலீசில் புகார் செய்வதுடன் மேல் நடவடிக்கை குறித்தும் முடிவெடுக்கப்படும் என மாநில-வட்டாரப் பேரவை நிருவாகத்தினர் எச்சரித்துள்ளனர் எனவும் தெரிகிறது.

அருண் துரைசாமியின் இத்தகையப் போக்கு தொடர்ந்தால் மோகன் சண்முகத்திற்கு சங்கத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவும் எதிராகத் திரும்பும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles