
மாநிலத்தில் உள்ள இந்திய சமூகம் தனது தேவைகளையும் கருத்துகளையும் எதிர்பார்ப்புகளையும் முன் வைக்க சிலாங்கூர் மாநில இந்தியர் ஆலோசனை மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. கிள்ளான் அண்டாலாஸ் விளையாட்டு அரங்கத்தில் அம்மன்றம் தோற்றுவிக்கப்பட்டதை மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். இந்த மன்றத்தின் மூலம் மநில அரசும் மக்களும் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ளவும் இந்த மன்றத்தைப் பயன்படுத்தி மாநில மக்கள் தங்களின் குறைகளையும் எதிர்பார்ப்புகளையும் முன்வைக்க முடியும். இந்த மன்றத்தில் கல்விமான்கள், அரசின் முன்னாள் மூத்த அதிகாரிகள், தொழில் முனைவோர், சமூகத் தலைவர்கள், இயக்க உறுப்பினர்கள் உறுப்பியம் பெற்றுள்ளனர். இதில் முக்கியமாக கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத் தலைவர் நிவாஸ் ராகவன், சன்வே பல்கலைக்கழகத்தின் சாந்தா வைத்தியலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலாங்கூர் மாநில எம்பிக்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் சந்தியாகோ , செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி பேஸாரின் சிறப்பு அதிகாரியுமான மாண்புமிகு டாக்டர் குணராஜ் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
