
தற்போது எஸ்ஆர்சி வழக்கின் தண்டனையை அனுபவித்து வரும் நஜிப் ரசாக் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வயிற்றுப் புண்ணுக்கு (அல்சர்) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
அவரின் 1எம்டிபி வழக்கு சீராக நடைபெறாமல் நஜிப்பிற்கு சிகிச்சை என்ற பெயரில் தடைபட்டு வருகிறது.
முதலில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு, அவர் காஜாங் சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டார். எனினும், அவரின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்ற பிரதமர், அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டார்.
நஜிப்பைப் பற்றிக் கூறும்போது ஷாபி அப்துல்லா, அவர் அல்சர் நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, 5 லிட்டர் ரத்தம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் நடமாடும் வெடி குண்டு என்றும் வர்ணித்துள்ளார்.
கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன் வழக்கறிஞர்கள் அதனைத் தடுக்க ஆடிய நாடகம் போல, நஜிப்பிற்கு சிகிச்சை என்ற பெயரில் மருத்துவமனையில் வைத்து, பொதுத்தேர்தல் வரை இழுந்து, வழக்கை முடிக்க அவர்கள் திட்டம் போடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
