
🔊To listen to this news in Tamil, Please select the text.
இவ்வாண்டு மத்தியில் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்ற தேர்தலில் கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களை ஒற்றுமை அரசாங்கம் வென்றால் அந்த மூன்று மாநிலங்களின் அரசாங்கத்திற்கு தேசிய முன்னணி தலைமையேற்கும்.
மேலும், அம்மூன்று மாநிலங்களிலும் தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவதற்கு பக்காத்தான் ஹராப்பான் அனுமதிக்கும் என்று அமானா கட்சின் தொடர்புப் பிரிவு இயக்குனர் காலிட் சமாட் தெரிவித்தார்.
மந்திரி பெசார் வேட்பாளர் யார் என்பது பக்கத்தான் ஹராப்பான் கட்சிகளின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என அவர் கூறியதாக மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.
அதே சமயம் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் மந்திரி பெசார் பதவிகளும் பினாங்கில் முதலமைச்சர் பதவியும் ஹராப்பான் கூட்டணியின் வசமே இருப்பதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மாநிலங்களில் பாரிசான் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடையாது. ஆகவே இந்த உண்மையை அவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
இருந்த போதிலும் மற்ற மூன்று மாநிலங்களிலும் நிலைமை பாரிசானுக்கு சாதகமாகவே உள்ளது. இது குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதிக்கவுள்ளோம் என்றார் அவர்.



