
மலேசிய இந்தியர் வர்த்தக சங்கத் தேர்தலில் போட்டியிடும் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு பிரபல தொழிலதிபரும், கட்டுமானத் துறையில் 13 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவருமான பிரபாகரன் கோவிந்தன் உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், மலேசிய இந்தியர் வர்த்தக சங்கத்தில் பல ஆண்டுகளாக தாம் உறுப்பினராக இருந்து வருவதாகவும், தன்னுடைய அணியினருடன் இணைந்து வணிகர்களுக்காக பல்வேறு சேவைகள் மற்றும் உதவித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். சங்க உறுப்பினர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று, மேலும் சிறப்பான சேவைகளை வழங்கும் நோக்கில் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக அவர் கூறினார்.
“எங்கள் அணிக்கு உறுப்பினர்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், நடுத்தர மற்றும் சிறு வியாபாரிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுப்போம். வணிகம், தொழில்துறை வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டிற்குத் தேவையான உதவிகளை வழங்க உறுதியாக உள்ளோம். இந்திய வணிகர்கள் வெற்றிப் பாதையில் முன்னேறுவதற்கு நாங்கள் ஒரு பாலமாகச் செயல்படுவோம்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மலேசிய இந்தியர் வர்த்தக சங்கத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை தோட்ட மாளிகையில் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்து, தங்களது அணிக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்ட அவர், “எங்கள் அணி வெற்றிக்கான அணி; உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி நிச்சயம்,” என்றார்.



