புதிய ‘லிட்டில் இந்தியா’ உதயம்:
தொழில்முனைவர் டத்தோ நாகேந்திரன் நிலம் வழங்கினார்

🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
பகாவ், ஜூன் 05:
ஆயத்த ஆடைகள்-பட்டு சேலைகள் உள்ளிட்ட ஜவுளித் தொழில், சில்வர் பாத்திரங்கள், ஆன்மிகம் மற்றும் வழிபாடு தொடர்பான பொருட்களுக்கு மொத்த சந்தை மையமாக அண்மைக் காலத்தில் உருவெடுத்துள்ள பகாவ் நகருக்கு இன்னொரு வர்த்தகச் சிறப்பு சேர்ந்துள்ளது.
நெகிரி செம்பிலான் பகாவ் நகரில், தாமான் ஜெயா குடியிருப்புப் பகுதியில் தெகூ புரோப்பர்ட்டீஸ் சென். பெர்.(Teguh Properties Sdn Bhd) என்னும் வர்த்தக மையத்திற்கு சொந்தமான நிலத்தில் ‘லிட்டில் இந்தியா’ என்ற பெயரில் புதிய வர்த்தக தளம் அறிமுகம் கண்டுள்ளது.
பகாவ் நகரில் எல்லா மக்களுக்கும் நன்கு அறிமுகமான சமூக ஆர்வலரும் வர்த்தகப் பிரமுகருமான டத்தோ நாகேந்திரன் அரிகிருஷ்ணனுக்கு சொந்தமான இந்த நிலத்தில், வட்டார மக்களின் வர்த்தக நடவடிக்கையை மேம்படுத்தவும் பகாவ் நகர இந்தியர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் நிலம் வழங்கப்படுதாக இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்திய மற்றொரு பிரமுகர் டத்தோ சஞ்சீவன் தெரிவித்தார்.
ஜெம்போல் மாவட்டத்தின் முக்கிய பட்டணமான பகாவ் நகரில், தாமான் ஜெயா குடியிருப்புப் பகுதியில் ஜூன் 2 வெள்ளிக்கிழமை இரவில் பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் ஒன்றுகூடிய இந்த ‘லிட்டில் இந்தியா’ அறிமுக நிகழ்ச்சியில், ஜெம்புல் மாவட்ட காவல்துறையினர் முழுமையாக பங்களிப்பு செய்தனர்.
ஏராளமான அங்காடிக் கடைகள் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பகுதியில், குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை திரண்டிருந்தனர். நவம்பர் மாதம் 12-ஆம் நாள் கொண்டாடப்பட இருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக முனையம் திறப்பதற்கான ஏற்பாடு விரைவில் தொடங்கப்படும் என்றும் சஞ்சீவன் அறிவித்தார்.

டத்தோ ஹஜி முகமட் நஸாரி பின் ஹஜி முகமட் நோர் பங்குதாரராகவும் இயக்குநராகவும் இருக்கும் தெகூ புரோப்பர்ட்டீஸ் சென். பெர். நிறுவனத்தின் இன்னொரு பங்குதாரர் டத்தோ நாகேந்திரன் அரிகிருஷ்ணனின் தாயார் திருமதி சரோஜா முனியப்பன் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இடத்தை, லிட்டல் இந்தியா வணிகத் தளத்திற்கு முறைப்படி கையளித்த நிகழ்ச்சி இடம்பெற்றதுபோது பொதுமக்கள் பெரும் ஆரவாரத்துடன் இதை வரவேற்றனர்.
ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்த விழாவில், கவர்ச்சிகரமான பரிசுகளை உள்ளடக்கிய குலுக்கள் பரிசளிப்பு அங்கமும் இடம்பெற்றது. ஆயிரக் கணக்கானோர் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசு டிக்கெட்டுகளை வாங்கி ஆதரவு அளித்தது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை உற்சாகப்படுத்தியது.
தலைமையுரையைத் தொடர்ந்து காவல்துறை உயர்நிலை போலீஸ் அதிகாரி விக்னேஸ்வரன் மாரிமுத்து இந்திய இளைஞர்கள் குறித்து, குறிப்பாக வன்முறை குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

பகாவ் வட்டார இந்திய சமூகத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது; தவிர, வர்த்தகத் துறையில் ஈடுபட விரும்பும் இந்திய இளைஞர்களுக்கும் தொழில் முனைவோராக உருவாகும் அனைவருக்கும் பகாவ் புதிய லிட்டில் இந்தியா வளாககத்தில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்த டத்தோ நாகேந்திரன் அரிகிருஷ்ணன், ரத்தின சுறுக்கமாகப் பேசினார்.
