
10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட செல்லுபடியாகும் காலத்துடன் கடப்பிதழ்களை வழங்குவதற்கு எந்தவொரு நாட்டையும் தடுக்கும் அனைத்துலக அல்லது உள்நாட்டுச் சட்டங்கள் இல்லை என்று மலேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
நீண்டகால செல்லுபடியாகும் கடப்பிதழை வைத்திருப்பதால் ஒருவர் அனைத்துலக இடங்களுக்கு விமானத்தில் பயணம் செய்வதில் எந்தத் தடையும் ஏற்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின்போது, நீண்டகால செல்லுபடியாகும் கடப்பிதழ்களால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தையும் அவர் மறுத்தார்.
“ஒரு கடப்பிதழ் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கப்பட்டிருந்தாலும், எல்லைக் கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று ஜக்காரியா தெரிவித்தார்.
இருப்பினும், சில விமான நிறுவனங்களின் விமானப் பயணச்சீட்டு முன்பதிவு முறைகளில் நீண்டகால கடப்பிதழ்களின் காலாவதி தேதியைப் பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக குடிநுழைவுத் துறைக்கு பல புகார்கள் கிடைத்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்துலக விமான நிறுவனங்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில் மலேசிய கடப்பிதழ்களின் செல்லுபடியாகும் காலத்தை அதிகபட்சம் 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கும் முடிவை மலேசியா இறுதி செய்துள்ளதாக ஜக்காரியா தெரிவித்தார்.



