
முன்னாள் DAP தலைவரும், முன்னாள் DAP உறுப்பினருமான டாக்டர் ஓங் கியான் மிங், நாட்டின் அரசியல் நிலவரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டால், டத்தோஸ்ரீ அகமட் ஜாஹித் ஹமிடி நாட்டின் 11-வது பிரதமராக மாறுவார் என்றும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் (PH) பல தொகுதிகளை இழக்கும் எனவும், செலாங்கூர் கைநழுவும் எனவும் கணிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ்.
“அரசியல் கணிப்புகளில் அவசரப்படாதீர்கள், மக்களின் கொள்கையை மதியுங்கள்” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில், “கட்சியிலும் அரசாங்கத்திலும் முக்கியப் பொறுப்புகளை வகித்த முன்னாள் DAP தலைவராக, டாக்டர் ஓங்கிற்கு நிச்சயமாக அவரது சொந்த அனுபவமும் அரசியல் பார்வையும் இருக்கும். ஆனால் இதுபோன்ற அறிக்கைகள் பொறுப்புணர்வுடனும், உண்மைத் தகவல்களின் அடிப்படையிலும் வெளியிடப்பட வேண்டும் என நான் நம்புகிறேன்” என்று குணராஜ் தெரிவித்துள்ளார்.
முக்கியக் கருத்து: 16-வது பொதுத் தேர்தலுக்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்றும், அரசாங்கத்தின் எதிர்காலம் வாக்குப் பெட்டி மூலம் மக்களின் முழுமையான உரிமை என்றும் அவர் நினைவூட்டினார். “இதுபோன்ற கணிப்புகளை எந்தத் தரப்பினரும் வெளியிடுவது பொருத்தமல்ல” என்று அவர் வலியுறுத்தினார்.
முந்தைய DAP தலைவருக்கு நேரடி கேள்வி: “மேலும், ஒரு காலத்தில் DAP போராட்டத்திலும் தலைமையிலும் பங்கு வகித்த ஒருவர், இப்போது இதுபோன்ற கணிப்புகளை வெளியிடும்போது, மக்களுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் உண்மைத் தகவல்களையும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது” என்று குணராஜ் குறிப்பிட்டார்.
“மக்கள்தான் முடிவெடுப்பார்கள்”: “இறுதியில், யாரை நம்புவது, யாருக்கு நாடு மற்றும் மாநிலத்தை நிர்வகிக்கும் ஆணையை வழங்குவது என்பதை மக்களே முடிவு செய்வார்கள். டாக்டர் ஓங் கியான் மிங் அல்ல. நான் அல்ல. எந்த அரசியல் ஆய்வாளரும் அல்ல. மக்களே முடிவெடுப்பார்கள்” என்று அவர் தெரிவித்தார்!



