
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் ஆசாம் பாக்கி, இலட்சக் கணக்கில் பங்கு பரிவர்த்தனை செய்திருப்பதன் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டு, விமர்சனங்களுக்கு இதுவரை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக, அவரைத் தற்காக்கவே விரும்புவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். காரணம், அஸாம் பாக்கி மேநாள் பிரதமர் டான்ஸ்ரீ மஹியாடின் யாசினால் நியமிக்கப்பட்டவர். தவிர, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் சிவராசா எம்பி-யின் முன்னாள் பணியாளர், முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக், புலனாய்வு பத்திரிகையாளர் லலிதா குணரத்னம் மீதெல்லாம் சளைக்காமல் ஊழல் தடுப்பு ஆணையம் ஏவிவிடப்படுகிறது. அஸாம் பாக்கியை இஸ்மாயில் தற்காத்தால், அதற்கு பிரதிபலனாக இஸ்மாயில் பிரதமர் பதவியில் தொடர பெர்சத்துக் கட்சி ஆதரவு அளிக்கும் என்ற இருதரப்பு புரிந்துணர்வின் அடிப்படையில் காரியங்கள் நடப்பதாக புத்ராஜெயா அரசியல் வட்டத்தில் கருத்து பரிமாறப்படுகிறது.
