
நாட்டிற்குள் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்வோரைத் தடுக்க உடல்ரீதியிலான தண்டனையை நிறைவேற்ற உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு இயக்குநர் ஹஸானி கஸாலி ஆலோசனை வழங்கியுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைவதாக மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். ஹஸானி கஸாலி ஆலோசனை வழங்கியுள்ள தண்டனை முறையை ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் ஏற்றுக் கொண்டால், அந்த நாடுகளில் சட்டவிரோதமாக வாழும் ஆயிரக் கணக்கான மலேசியர்களும் இத்தகைய தண்டனையை எதிர்கொள்ள நாம் சம்மதம் தெரிவிப்போமா? காலனி ஆதிக்கக் காலத்தில் மலாயாவிலும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த பிற நாடுகளிலும் தொழிலாளர் சமூகத்தை அடக்கி ஆள்வதற்காக இந்த தண்டனையை பிரிட்டிஷ் எஜமானர்கள் பயன்படுத்தினர். தவிர, பிரம்படி என்பது ஒரு பழைமையான தண்டனை முறை. அதை இப்போது எண்ணிப்பார்ப்பது அதிகார மட்டத்தின் நாகரீகமற்ற நடத்தையாக கருதப்பட வேண்டும் என்று தேசிய ஒற்றுமைத் துறை முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.
