
15-ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், நடப்பு நாடாளுமன்றத்தை கலைப்பதன் தொடர்பில் அம்னோவின் உயர்மட்டத் தலைவர்களான தேசியத் தலைவர், துணைத் தலைவர், தான் உள்ளிட்ட மூன்று உதவித் தலைவர்கள் அடங்கிய ஐவர்க் குழு முடிவெடுக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
இந்த உயர்மட்டக் குழுவின் முடிவு, அம்னோவின் உச்சமன்ற பரிசீலனைக்கும் கொண்டு செல்லப்பட்ட பின், நிறைவாக நாடாளுமன்றத்தை பரிந்துரைக்கும் முடிவு மாட்சிமைக்குரிய மாமன்னரிடம் கொண்டு செல்லப்படும் என்று அம்னோ பொதுப் பேரவையில் நிறைவுரை ஆற்றிய இஸ்மாயில் பேசினார்.
பிரதமரின் முடிவை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைப்பது, மாமன்னரின் முடிவுக்கு உட்பட்டது; அதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அடுத்த 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.
எனவே, நிலைமை சாதகாக இருக்கும் இந்தத் தருணத்தைத் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அம்னோவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.
