
நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஊடுருவதைத் தடுக்கும் வகையில் தற்காப்பு அமைச்சும் உள்துறை அமைச்சும் இணைந்து ஆக்கப்பூர்வமான திட்டம் ஒன்றை உருவாக்கவுள்ளன.
எல்லை பாதுகாப்பு மற்றும் நாட்டின் தற்காப்பு குறித்த விவகாரங்கள் ஒரு அமைச்சிடம் மட்டுமே ஒப்படைக்கக்கூடிய ஒன்றல்ல என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் கூறுகின்றார்.
”நாட்டின் மிகப் பெரிய எல்லை பகுதிகளை நாம் பாதுகாக்க முற்படும்போது அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதனால்தான், நாங்கள் ஓர் ஆக்கப்பூர்வமான திட்டத்தை உருவாக்கி வருகிறோம்,” என்றார் அவர்.
கோலாலம்பூர், அனைத்துலக மலேசிய வாணிபம் மற்றும் கண்காட்சி மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆசிய தற்காப்பு சேவை கண்காட்சிக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேனுடன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஹம்சா சைனுடின் கலந்து கொண்டார்.
இதனிடையே, அவ்விரு அமைச்சுகளும் இணைந்து மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களும் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் தலைமையில் உள்ள தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் தெரிவிக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.
