
கட்சி தாவிய துரோகிகளான தனது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்காக நாடு தழுவிய நிலையில் பி.கே.ஆர் பெரிய அளவிலான கூட்டங்களை நடத்தவிருக்கிறது. குறிப்பாக கோம்பாக் மற்றும் அம்பாங் போன்ற தொகுதிகளில் மாநிலம் மற்றும் டிவிசன் நிலையில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் என பி.கே.ஆர் தகவல் பிரிவின் தலைவர் பாமி பாட்ஷீல் ( Fahmi Fadzil ) தெரிவித்திருக்கிறார். கோம்பாக் மற்றும் அம்பாங்கிலிருந்து இந்த மாபெரும் கூட்டம் தொடங்கும். முதல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி நள்ளிரவுவரை கோம்பாக் தொகுதியில் தாமான் மெலாவத்தி ரமடான் சந்தை பகுதியில் நடைபெறும். பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் அஸ்மின் அலி கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார். கட்சிக்கு துரோகம் புரிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற தொகுதிகளில் நாங்கள் கவனம் செலுத்துவோம். என்றும் அவர் கூறினார்.
