
இந்துப் பெருமக்களின் பாரம்பரிய சமய விழாவான தீபாவளித் திருநாள் நெருங்கி வருவதால், சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் சிறு-நடுத்தர வணிகர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக சிலாங்கூர் மாநில அரசு சிறப்புக் கடனுதவித் திட்டத்தை அறிவித்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியும் செந்தோசா சட்டமன்ற மக்கள் பிரதிநிதியுமான டாக்டர் ஜி.குணராஜ் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகால நடமாட்ட கட்டுப்பாடு, கடந்த ஏப்ரல் முதல் நீக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக சமூகம் எதிர்கொண்டிருந்த பல்வேறு சிக்கல்களில் இருந்து மீள்வதற்காக போராடிவருவதை உணர்ந்துள்ள மாநில அரசாங்கம், மாநிலத்தில் உள்ள இந்திய வர்த்தக சமூகத்திற்கு உதவும் நோக்கில் இந்த வர்த்தக அணுகூல நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தீபாவளி சந்தை வியாபாரிகளும் வீட்டிலிருந்தே வர்த்தகம் புரிகிறவர்களூம் தங்களின் வியாபாரத்தை முன்னெடுப்பதற்காக 1,000 வெள்ளி முதல் 20,000 வெள்ளிவரை கடனுதவி வழங்க சிலாங்கூர் அரசு முன்வந்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியர்களும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிலாங்கூரில் வசிப்பவர்களும் இதற்காக விண்ணப்பம் செய்யலாம். அக்டோபர் 14-ஆம் நாளுக்குள் தகுந்த பத்திரங்களுடன் விண்ணப்பம் செய்து பயனடையலாம். இந்த 6 மாத கால நிதியுதவித் திட்டத்தின்மூலம் கடன் பெறுபவர்கள் வாராந்திர முறையில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
ஆர்வமுள்ள வணிகப் பெருமக்கள் சிலாங்கூர் மாநில வீட்டுவசதி, நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அலுவலகத்தை நாடலாம். கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த வியாபாரிகள், ஜாலான் சுங்கை ஜாத்தியில் உள்ள செந்தோசா சட்டமன்றத் தொகுதி மக்கள் சேவை மையத்தையும் நாடலாம் என்று இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் பிகேஆர் கோத்தா ராஜா தொகுதி பொறுப்பாளருமான குணராஜ் தெரிவித்துள்ளார்.
