33.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

மலேசிய இந்து சங்க வரலாற்றில்
துன் சாமிவேலுவின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்

மலேசிய இந்திய சமுதாயத்திற்கும் இந்து சமயத்திற்கும் பெரும்பங்காற்றிய ‘நினைவில் வாழும்’ துன் சாமிவேலு அவர்களுக்கு மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் மரியாதையையும் தெரிவிப்பதாக தங்க. கணேசன் தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்து சங்கத்தின் புரவலராக செயல்பட்ட துன் சாமிவேலு, திருமுறை வளர்சிக்காக பெரிதும் துணைபுரிந்துள்ளார். குறிப்பாக, ஆண்டுதோறும் தேசிய திருமுறை விழாவிற்கு நிதி அளித்து சைவநெறி தழைக்க உதவியவர்.

ஆன்மிக நெறியில் தொண்டறத்தையும் நன்னெறியையும் உயிராகவும் ஒழுக்கமாகவும் கொண்ட சைவ சமய நெறி, தானும் வளர்ந்து தமிழையும் உயர்த்தியது. அத்தகைய சைவத்தின் மறை இலக்கியமான திருமுறைக்கு மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் தேசிய விழா எடுக்கும்பொழுதெல்லாம் அதில் துன் சாமிவேலு அரசியல் பணி நெருக்கடிக்கு மத்தியிலும் கலந்து கொண்டு இந்து சங்கத்திற்கு துணை நின்றவர்.

அதைப்போல, ஏறக்குறைய ஒரு தலைமுறைக் காலத்திற்கு மலேசிய இந்திய சமுதாயத்தை அவர் வழிநடத்தியபோது, ஏராளமான ஆலயங்களின் வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் வித்திட்ட தலைவர் துன். அதைவிட எண்ணற்ற ஆலயங்களை இடிபடுவதில் இருந்து காப்பாற்றியவர்.

குறிப்பாக, ஜோகூர்பாரு-பட்டர்வொர்த் இரட்டைத் தண்டவாள கட்டுமானத்-தின்போது பாதிப்புக்கு ஆளாகவிருந்த ஏராளமான ஆலயங்களையும் அதைப்போல நாட்டின் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூரிலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களால் பாதிப்புக்கு ஆளான ஆலயங்களை காப்பாற்றிக் கொடுத்து இந்து சமய காவலராக விளங்கியவர் துன் சாமிவேலு.

மலேசிய இந்து சங்கம் முன்னெடுக்கும் சமய-சமூக-கல்வி நடவடிக்கைக-ளுக்கு வற்றாத ஆதரவையும் குன்றாத ஒத்துழைப்பையும் வழங்கிய தலைவரான இவர், ஏராளமான திருக்குடமுழக்கு விழாக்களில் நாடு முழுவதிலும் கலந்து கொண்டவர்.

அப்படிப்பட்ட தலைவர் மறைந்தது, மலேசிய இந்திய சமுதாயத்திற்கு, குறிப்பாக இந்த நாட்டின் இந்துப் பெருமக்களுக்கும் பேரிழப்பாகும். மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் அதேவேளை, அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனின் திருப்பாதம் பணிவதாக மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் தங்க.கணேசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles