33.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

தலைவர்களும், அரசியல்வாதிகளும் துன் சாமிவேலுவுடனான நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்

மலேசிய அரசியல் வரலாற்றில் ஒப்பற்றத் தலைவராக திகழ்ந்த துன் சாமிவேலுவின் மறைவிற்கு, பேரரசர் , பிரதமர் இஸ்மாயில் சப்ரி, மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன், அரசியலில் அவருடன் பழகியவர்கள் , எதிர்கட்சியினர், மாற்று கருத்தினைக் கொண்டவர்கள் மற்றும் இந்திய பிரதமர் நநேந்திர மோடி உட்பட பலர் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்திருக்கின்றனர் . அவ்வகையில், பேரரசர் தம்பதியர் , துன் சாமிவேலுவின் மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பாகுமென தங்களது இரங்கலில் தெரிவித்தனர். 23 -வது வயதில் தமது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவரான துன் சாமிவேலு, நாட்டிற்கும், சமுகத்திற்கும் சிறந்ததொரு பங்கினை ஆற்றியிருப்பதாக பேரரசர் தம்பதியர் குறிப்பிட்டனர்.

இதனிடையே, துன் சாமிவேலுவின் மறைவினால் நாடு ஒப்பற்றத் தலைவரை இழந்துவிட்டது என பிரதமர் இஸ்மாயில் சப்ரி தமது அனுதாப செய்தியில் தெரிவித்தார்.

ம.இ. காவின் தேசிய தலைவராக சாமிவேலு இருந்த காலத்தில் மலேசியாவில் இந்திய சமூகத்தினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார் ; மலேசிய இந்திய சமூகத்தின் ஒற்றுமை தந்தையாகவும் அவர் இருந்துள்ளார் என இஸ்மாயில் சப்ரி வர்ணித்தார்.

முன்னதாக, துன் சாமிவேலுவின் நல்லுடலுக்கு பிரதமர் நேரடியாக சென்று அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தியதோடு , அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வேளையில், இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்த துன் சாமிவேலுவின் மறைவை, கனத்த இதயத்தோடு ஏற்றுக்கொண்டிருப்பதாக ம இகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அரசியலில் எனது குருவாக இருந்து எங்களுக்கு எல்லாம் தந்தையைப்போல் வழிகாட்டியவர் அவர்.

கட்சி, சமூகம், தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் உட்பட இந்திய சமூகத்திற்கும் மேம்பாட்டிற்கும் நாட்டிற்கும் அவர் அளப்பரிய பங்கை ஆற்றியிருக்கிறார் என இந்தியா மற்றும் தென்காசிய நாடுகளின் சிறப்புத் தூதருமான விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

துன் சாமிவேலுவை அறிந்தவர்கள் எவரும் அவரை மறந்துவிட முடியாது. அவர் எப்போதும் வாழும் சகாப்தமாக இருந்து வருவார்.

துன் சாமிவேலுவை இழந்து துயருறும் அவரது துணைவியார் தோ புவான் இந்திராணி, அவரது புதல்வர் வேள்பாரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ம.இ.கா சார்பிலும் தமது சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

துன் சாமிவேலுவுடனான தமது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்ட முன்னாள் துணைப்பிரமரான மூசா ஹீத்தாம் , அமைச்சரவையில் இருந்தவரை இந்திய சமூகத்தின் உரிமைக்காக துணிச்சலோடு குரல் எழுப்ப தயங்காத தலைவராக சாமிவேலு விளங்கினர் என வருணித்தார்.

நான் கல்வி அமைச்சராக இருந்தபோது எனக்கும் அவருக்கும் நிறைய தகராறு நடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் பட்டியைலை எடுத்துக்கொண்டு போதுமான இடங்கள் வழங்கவில்லை என சாமிவேலு என்னிடம் சண்டை போடுவார். எனக்கு தெரிந்து சாமிவேலுவைவிட அமைச்சரவையில் இந்திய சமூகத்திற்காக அதிகம் குரல் எழுப்பியவர்கள் யாரும் இல்லையென மூசா ஹீத்தாம் தெரிவித்தார்.

இதற்கிடையில், அரசியல் வேறுபாடு இன்றி அனைத்து கட்சியின் தலைவர்களும், துன் சாமிவேலுவின் மறைவுக்கு தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டனர்.
துன் சாமிவேலுவின் சேவை என்றும் நிலைத்திருக்கும் என பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி.ராமசாமி புகழாரம் சூட்டினார்.

இந்தியர்களின் உரிமைக்காக துணிச்சலாக குரல் கொடுத்த தலைவராகவும் தேசிய முன்னணி தலைவர்களால் மதிக்கப்பட்டவராகவும் அவர் விளங்கினார் என ராமசாமி வருணித்தார்.

அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து செயல்பட்டாலும் துன் சாமிவேலு நல்ல நண்பராக விளங்கினார்.
அது மட்டும் அல்ல. அவர் நல்ல போராட்டவாதியாக இருந்துள்ளார் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டார்.

இவர்களுடன் , பத்து காவான் எம்.பி கஸ்துரி பட்டுவும் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
சுங்கை சிப்புட்டில் எனது தந்தை பட்டு இருமுறை போட்டியிட்டு குறைந்த வாக்குளில் சாமிவேலுவிடம் தோல்வி கண்டார். 1995-ஆம் ஆண்டு அவர் இறந்தபோது எங்கள் வீட்டிற்கு வந்த சாமிவேலு அஞ்சலி செலுத்தினார். இன்று நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என அவர் கவலையோடு தெரிவித்தார்.

இவர்களுடன் , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார். மலேசியாவின் முன்னாள் அமைச்சரும் முதலாவது பரவாசி பாரதீய சம்மன் விருது பெற்றவருமான துன் டாக்டர் சாமிவேலுவின் மறைவை அடுத்து, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார். – Thanks Vanakkam Malaysia

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles