24.7 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

‘பணத்தை மிச்சப்படுத்தவே இந்து சங்க அலுவலகத்தில் தங்குகிறேன்: இனி என்னப்பற்றி எழுதினால்’-டத்தோ மோகன்ஷானின் விளக்கமும் மிரட்டலும்

-நக்கீரன்

கோலாலம்பூர், செப்.21:
“கையில் பேனா இருக்கிறது என்பதற்காக எதையும் எழுதக்கூடாது; உண்மை நிலவரத்தை தெரிந்துகொண்டு அதன்பின் எழுத வேண்டும். நான் என்ன இப்பொழுது மட்டும்தான் இந்து சங்க அலுவலகத்தில் தங்குகிறேனா? கடந்த 13 ஆண்டுகளாக இதே அலுவலகத்தில்தான் தங்கி வருகிறேன். போயும் போயும் இதைப்பற்றி எழுதும்படி உங்களை யார் தூண்டி விட்டது? இந்தத் தகவல் எல்லாம் எப்படி உங்களுக்குக் கிடைக்கிறது? எனக்கு வீடு கெடா மாநிலத்தில் இருக்கிறது. கோலாலம்பூருக்கு வரும்பொழுதெல்லாம் எனக்கும் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்குவதற்குத் தெரியும்; இருந்தாலும், பணத்தை மிச்சப்படுத்தவே இந்து சங்க கட்டடத்தில் தங்கி வருகிறேன். அண்மைக் காலமாக இதையும் தவிர்த்துவிட்டேன்” என்று மலேசிய இந்து சங்க 45-ஆவது ஆண்டுக் கூட்டத்தின்போது தேசியத் தலைவருக்கான தேர்தலில் சிவநெறிச் செல்வர் தங்க. கணேசனிடம் தோற்று மத்திய செயலவையில் இருந்தும் விலகுவதாக ஆயிரக் கணக்கான இந்து சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவித்து, அவர்களின் கைத்தட்டலுடன் அரங்கத்தில் இருந்து வெளியேறிய டத்தோ மோகன்ஷான் விளக்கம் அளித்துள்ளார்.

“நான் மட்டும் இங்கு தங்குவதில்லை. ஜோகூர் இராமகிருஷ்ணன், நெகிரி மாநில கந்தசாமி உள்ளிட்ட எத்தனையோ பேர் தங்கி இருக்கிறார்கள்; அதைப் பற்றியும் எழுத வேண்டியதுதானே என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் மோகன்ஷான்.

“நாம் இருவரும் இந்து சங்கத்தில் இருந்து வந்தவர்கள்தான்; நான் கெடா மாநிலத் தலைவராக இருந்தபொழுது, நீங்கள் இந்து சங்கத் தலைமையகத்தில் ஊழியராக இருந்தீர்கள். நாம் இருவரும் எவ்வளவு நட்பு பாராட்டி இருக்கிறோம். அப்படி இருக்கும்பொழுது என்னைவிட்டுவிட்டு, அவருக்கு(தங்க. கணேசனுக்கு) ஆதரவாக எழுதுவது என்ன நியாயம் என்றெல்லாம் கேட்டு, நட்பை நிலைநிறுத்தி சமாதானக் கொடியை பறக்கவிட்டார் மோகன்ஷான்.

அடுத்து மிரட்டல் விடுத்து, போர் முரசம் பறைசாற்றவும் அவர் தவறவில்லை.

“இந்து சங்கத் தலைமையகத்தில் நிருவாக அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் அடையாள அட்டை சிக்கலை எதிர்கொண்டதெல்லாம் எனக்கு நன்கு தெரியும். நானும் உங்களுக்கு உதவி இருக்கிறேன். இதை யெல்லாம் மறந்துவிட்டு இப்போது எனக்கு எதிராக எழுதலாமா என்று கேட்ட மோகன்ஷான், இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் எனக்கும் எழுத ஆள் இருக்கிறது; நானும் ஆள்வைத்து ஜேபிஎன்-என்னும் தேசிய பதிவு அலுவலகத்திற்கு எழுதுவேன் என்றெல்லாம் மோகன்ஷான் மிரட்டினார்.

அவர்(தங்க. கணேசன்) சொல்வது மட்டும்தான் உங்களுக்குத் தெரியுமா? என்னிடம் எவ்வளவு சங்கதி இருக்கிறது தெரியுமா? மலேசிய இந்து சங்க சிலாங்கூர் மாநிலப் பேரவையின் அந்நாளையத் தலைவர் கண்ணனத்து எப்படி இறந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த விவரத்தை யெல்லாம் நான் வெளியிடவா என்றெல்லாம் தொடர்பில்லாத விவரங்களை என்னிடம் கொட்டித் தீர்த்த மோகன்ஷான், தன்னை ஏதோவொரு துப்பறியும் அதிகாரியைப் போல காட்டிக் கொண்டார்.

“நான் இன்னும் 2 வருஷத்துக்கு பதவியில் இருப்பேன்; அதுவரை எனக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது. அதைப்போல என்னைப்பற்றி இனிமேல் எதுவும் எழுதக் கூடாது; அவரின்(தங்க.கணேசனின்) பேச்சைக் கேட்டுக் கொண்டு இனியும் ஆடக்கூடாது. இந்த ‘Advice’-ஐக் கொடுக்கத்தான் காலையில் 4 தடவை அடிச்சேன்; நீங்க ஃபோன எடுக்கல; இப்ப சாயுங்காலம்கூட நான் அடிச்சபோது நீங்க எடுக்கல; அப்புறம் நீங்களா அடிச்சீங்க; அதன்பிறகு நான் பேசுகிறேன். இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். என்னைப்பற்றி இனிமேல் எதுவும் எழுதக்கூடாது” என்று சற்று கடுமையான தொனியில் மோகன்ஷான் மிரட்டினார்.

அவரை(‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசனை) யாருக்குமேத் தெரியாது. துணைச் செயலாளராக இருந்த அவரை, நான்தான் பொதுச் செயலாளராக ஆக்கினேன். ஆனால், அவருக்கு ஒழுங்காக இருக்க முடியவில்லை; உட்காரவும் முடியவில்லை; இடுப்பை வலிக்கிறது; காலில் வலிக்கிறது; அங்கு வலிக்கிறது-இங்கு வலிக்கிறது என்று போனால் அதற்கு நான் என்ன செய்வது?

என்றெல்லாம் கேட்ட மோகன் ஷான், இதே நாள் காலையில் நான் வெளியிட்ட செய்திக்கான விளக்கமென எதையும் தெரிவிக்கவில்லை; 13 ஆண்டு காலம் இந்த நாட்டின் பாரம்பரியமிக்க ஒரு சமய அமைப்பை வழிநடத்தியவர் என்பதற்கான முத்திரையோ, மலேசியாவில் வாழ்கின்ற இந்து மக்களின் மேன்மை-அவர்களின் சமய வளர்ச்சி குறித்த வெளிப்பாடு-மதிப்பீடு-எதிர்காலத் திட்டம் என எதுவும் அவரிடம் வெளிப்படவில்லை. தனி மனித தாக்குதல் மட்டுமே வெளிப்பட்டது.

எல்லாவற்றுக்கும் நாளைய உலகம் பதில் சொல்லும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles