
-நக்கீரன்
கோலாலம்பூர், செப்.21:
மலேசிய இந்து சங்கத்தின் 45-ஆவது ஆண்டுக் கூட்டம் 2022 ஜூலை 24-இல் நடைபெற்றது.
அதில் 13 ஆண்டுகளாக தலைவராக நீடித்த டத்தோ மோகன் ஷானுக்கு எதிராக, ‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசன் தலைமையில் ‘மாறுவோம்; மாற்றுவோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து மத்திய செயலவைக்கு போட்டியிட்ட 10 பேரும் ஏறக்குறைய ஆயிரம் வாக்குகள் பெற்று அடித்து நொறுக்கும் விதமாக பட்டையைக் கிளப்பி வெற்றிக் கொடியை நாட்டினர்.
1-ஆம் எண்ணில் போட்டியிட்ட ஏ.கோபி 974 வாக்குகளையும் 2-ஆம் எண்ணில் போட்டியிட்ட ஆதிமூலம் 947 வாக்குகளையும் 4-ஆம் எண் வேட்பாளர் ‘ஸ்ரீ அர்ஜுனா’ எம்.பாலகிருஷ்ணன் 939 வாக்குகளையும் 5-ஆம் எண்ணில் களம்கண்ட கணேஷ்பாபு 951 வாக்குகளையும் ‘மாறுவோம்-மாற்றுவோம்’ அணித் தலைவரும் 6-ஆம் எண்வழி அடித்து களமாடியவருமான தங்க.கணேசன் 967 வாக்குகளையும் 8-ஆம் எண் போட்டியாளர் டாக்டர் எஸ்.கலைவாணி 952 வாக்குகளையும் 12-ஆம் எண் வேட்பாளர் எம்.முனியாண்டி 931 வாக்குகளையும் 13-ஆம் எண்வழி களமிறங்கிய இரா. பெருமாள் 918 வாக்குகளையும் 19-ஆம் எண் போட்டியாளர் ‘விவேகநாயகி’ கே.சுந்தரி 917 வாக்குகளையும் 20-ஆம் எண் வேட்பாளர் பி.வேலாயுதம் 916 வாக்குகளையும் பெற்று மாபெறும் வெற்றி பெற்றனர்.
மோகன்ஷான் தரப்பில் போட்டியிட்ட 10 பேரில் ஒருவர் அதிகபட்சமாக 464 வாக்குகளையும் இன்னொருவர் குறைந்தபட்சம் 405 வாக்குகளைப் பெற்ற வேளையில், மற்ற எண்மரும் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட அளவில் வாக்குகளைப் பெற்று படுதோல்வி அடைந்தனர்.
அன்றையக் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களித்த இந்து சங்க உறுப்பினர்கள் 1443 பேர்.
மத்திய செயலவைக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், அன்றைய ஆண்டுக் கூட்டத்திலேயே கூடிய முதல் மத்திய செயலவைக் கூட்டத்தில் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றபோது மொத்தமுள்ள 27 பேரில் தங்க கணேசன் 16 பேரின் ஆதரவைப் பெற்று இந்து சங்கத்தின் புதிய தேசியத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், 11 பேரின் ஆதரவை மட்டும் பெற்ற மோகன் ஷான், 13 ஆண்டுகால தலைவர் பதவியில் இருந்து மட்டும் விலகவில்லை;
மத்திய செயலவையில் இருந்தும் விலகுவதாக அந்தக் கூட்டத்தில் அறிவித்துவிட்டு வெளியேறியபோது, கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றதை நாடேப் பார்த்தது. அந்தக் காணொளிக் காட்சி ஏகமாக பரவியது அந்த நாளில்.
பதவி விலகிய மோகன்ஷான், போகிறபோக்கில் புழுதிவாரி இறைக்கும் விதமாக, இனி இந்த மத்திய செயலவை, மத்திய செயலவையாக இருக்காது; அதனால், இங்கிருந்து தான் வம்படிக்க விரும்பாமல், தலைவர் பதவியுடன் மத்திய செயலவை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
இதை யெல்லாம் உடனிருந்து கண்காணித்து வழிநடத்தியவர், இந்து சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன். இந்து சங்கத்தின் 45-ஆவது ஆண்டுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் மோகன்ஷான்.
இப்படிப்பட்ட நிலையில், அடுத்த 2 நாள் கழித்து, இதே ராஜேஷ், தேசியத் தலைவர் தேர்தலில், 2020 ஜூலை மாதத்தில் செய்த சட்டத்திருத்தத்தின்படி மாநிலத் தலைவர்களும் வாக்களித்து புதியத் தலைவரை தேர்ந்தெடுக்காததால், 24-07-2022இல் நடைபெற்ற ஆண்டுக்கூட்டமும் செல்லாது; தங்க. கணேசன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது; அதனால், எங்களைப் பொறுத்தவரை நீங்கள்தான் இன்னமும் இந்து சங்கத் தலைவர் என்று மோகன் ஷானுக்கு 26-07-2022-ஆம் தேதியிட்டு அவர் அனுப்பிய கடித்தை கையில் வைத்துக் கொண்டு, நாட்டில் நடைபெறும் கொல்லைப்புற ஆட்சியைப் போல மோகன்ஷானும் இந்து சங்கத்தின் கொல்லைப்புற தலைவராக செயல்பட முனைந்தார்.
இந்த இரு தரப்பினரும் செயல்படுவதைப் பார்த்தால், “நான் அடிப்பதைப் போல அடிப்பேன்; நீ அழுவதைப் போல நடி” என்று பேசி வைத்துக் கொண்டு செயல்படுவதைப் போலத் தெரிகிறது; இதை, கோலாலம்பூர் நீதிமன்றம் கவனத்தில் கொண்டதா என்பதேத் தெரியவில்லை.
ஒருவேளை, மோகன்ஷான் மீண்டும் வெற்றி பெற்றிருந்தால் எந்தச் சட்டத் திருத்தமும் கவனத்திற்கு வந்திருக்காது. காதும் காதும் வைத்தாற்போல எல்லாம் கடந்து போயிருக்கும். ஒரு வாதத்திற்கு அதை சரியென ஒப்புக் கொண்டாலும் 13 ஆண்டுகள் தலைவராக இருந்த மோகன்ஷானுக்கு சட்டத்திருத்தத்தின்படி ஏன் கூட்டம் நடத்தத் தெரியவில்லை?; அப்படி யென்றால் இனியும் அவர் மத்திய செயலவையிலோ வேறு எந்தப் பொறுப்பிலுமோ தொடர தகுதி இருக்கிறதா?
தவிர, இந்தக் கூட்டத்தை உடனிருந்து கண்காணித்து வழிநடத்திய வழக்கறிஞர் நிறுவனம், அப்போதே அதை சுட்டிக்காட்டி முறையாக வழிநடத்தத் தவறியது ஏன்?
2 நாட்கள் கழித்து அதைச் செய்த வழக்கறிஞர் நிறுவனத்திற்கு, மலேசிய இந்து சங்கத்திற்கு இனியும் சட்ட ஆலோசகராக செயல்பட தார்மிக தகுதி இருக்கிறதா?
ஆக, இந்து சங்க தலைவர் பிரச்சினை, இப்படி புதிய சிக்கலில் தொடர்ந்ததால், கடைசியில் நீதிமன்றபடிக்கட்டுகளை எட்டியது.
ஆகஸ்ட் 9-ஆம் நாள் இந்தப் பிரச்சினை கோலாலம்பூர், உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, செப்டம்பர் 28-ஆம் நாள் மறு விசாரணைக்கு வரும்வரை, இந்து சங்கத்திற்கு தேசியப் பொறுப்பாளர் என எவரும் இல்லை; அடிப்படை-அத்யாவசிய அலுவல்கள் தொடர்வதற்கு ஏதுவாக மத்திய செயலவையின் 27 உறுப்பினர்களும் செயல்படலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை வழங்குவதற்குமுன், சம்பவம் நடைபெற்ற 24-07-2022இல் மோகன்ஷானும் அவரின் ஆதரவாளர்களான விலாயா பாலகிருஷ்ணன் உட்பட இன்னும் சிலரும் பதவி விலகிய காணொளிக் காட்சியை நீதிமன்றம் கவனத்தில் கொண்டதா என்பதும் தெரியவில்லை.
ஆனாலும், இடைப்பட்ட காலத்தில் மலேசிய இந்து சங்கத்தின் தலைமைத்துவ சிக்கல் அமைதியாக தொடர்ந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் இது நீதிமன்றத்தில் எதிரொலிக்க இருக்கின்ற நேரத்தில், ஜூலை 24-இல் தோல்வி அடைந்து கூட்டம் முடிவதற்குள் பாதியில் வெளியேறிய் மோகன்ஷான், பெரும்பாலான நாட்களில் மலேசிய இந்து சங்க தலைமையக அலுவலகத்தை விடுதியைப் போல பயன்படுத்தி அங்கேயே தங்கிக் கொண்டு, மாநில-வட்டாரப் பேரவைத் தலைவர்களின் ஆதரவைப் பெற அலுவலக தொலைபேசியை ஒருசார்பாக பயன்படுத்தி வந்தார்.
இது, நீதிமன்ற உத்தரவை மீறிய செயலா அல்லவா என்பதை உயர்நீதிமன்றம்தான் உறுதிசெய்ய வேண்டும்.
இந்த நிலையில், மோகன்ஷான், இப்பொழுது ஒரு குரல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்து சங்கத் தலைவராக தாங்கள் வெற்றிபெற்றதாக சிலர் சொல்லிக் கொள்கிறார்கள்; அப்படி யெல்லாம் எவரும் வெற்றிபெறவில்லை. 2024 வரை தான் தலைவராக இருப்பேன். பின் விலகுவேன் என்கிறார்.
கெடாவில் இருந்து 14 ஆண்டுகள் இந்து சங்கத்தை கட்டி ஆண்டது போதாமல், இன்னும் 2 ஆண்டுகள் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பும் மோகன்ஷானுக்கு பதவிப் பித்து இன்னும் அகலவில்லையா?
இத்தனை ஆண்டுகள் தலைவராக இருந்தும், இந்து சங்கத்தை இன்னும் கடனில் வைத்துள்ளது மோகன்ஷானின் சாதனைதான்;
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள், இந்து சங்க தலைமையக அலுவலகத்திற்குள் நுழையும் அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றதும் மோகன்ஷானின் தலைமைத்துவத்திற்கு சாதனை-பெருமைதான்;
இந்து சங்கத்திற்கு அரசத் தரப்பில் வழங்கப்பட்ட மானியத்தில் நிதி முறைகேடு நடைபெற்றது குறித்து விளக்கம் கேட்டால், “பத்து பேர் இருக்கும் இடத்தில் இப்படியெல்லாம் நடப்பது சகஜம்தான்; அரசாங்க அதிகாரிகள் திருடவில்லையா? அமைச்சர்கள் ஊழல் செய்யவில்லையா? என்று பத்திரிகையாளர்களிடம் எதிர்க் கேள்வி கேட்டதும் உண்மையில் மோகன் ஷானுக்கு சாதனைதான்;
அதே நிதி முறைகேடு பற்றி, இந்த ஆண்டில் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் என்ன கொலையா செய்தோம்?” என்று மீண்டும் கேள்வி கேட்டதும் மோகன் ஷானின் சாதனைதான்.
ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் இந்து சங்கத்தைச் சேர்ந்த மற்ற பொறுப்பாளர்களைக் கைதுசெய்தார்களேத் தவிர, இறைவனின் கருணையால் என்னைக் கைது செய்யவில்லை என்று சொன்ன மோகன் ஷானிடம் நல்ல தலைமைத்துவ பண்பு(?) வெளிப்பட்டது.
இத்தகைய நிலைமை இன்னும் தொடர்வதற்காகத்தான், 60 வயதை எட்டிய மோகன்ஷான், 14 ஆண்டுகள் தலைவராக இருந்தபின் இன்னமும் பதவியில் நீடிக்க விரும்புகிறாரோ?
காலம் இப்படியே கரையாது; அக்கிரம-அடாவடிக்காரர்கள் முட்டிமோதி தட்டித் தடுமாறும் ஒரு புள்ளி உருவாகும்!
மலேசிய இந்து சங்கத்திற்கு இது திருமுறைப் பருவம். நாடு முழுவதிலும் உள்ள மாநிலப் பேரவைகளும் வட்டாரப் பேரவைகளும் நடத்தும் திருமுறை விழாக்களில் கலந்து சிறப்பிக்க தேசியத் தலைவரை அழைப்பது ஒரு மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், நிகழும் 2022-ஆம் ஆண்டு திருமுறை விழாக்களில் கலந்து சிறப்பிக்க மாநிலத் தலைவர்களும் வட்டாரப் பேரவை பொறுப்பாளர்களும் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசனைத்தான் அழைக்கின்றனர். இதைக் கண்டு மோகன் ஷானால் பொறுக்க முடியாமல், தேசியப் பேரவை இல்லாவிட்டால், மாநிலப் பேரவைகளும் இல்லை; வட்டாரப் பேரவைகளும் இல்லை என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் குரல் பதிவு வெளியிட்டுள்ளார்.
ஆனால், மாநில-வட்டாரப் பேரவைகளின் பொறுப்பாளர்கள் மிகவும் தெளிவாக உள்ளனர்.
இந்து சங்க உறுப்பினர்கள் இல்லாவிட்டால், மத்தியப் பேரவையே இல்லை; மத்தியப் பேரவை இல்லாமல் தேசியத் தலைவரும் இல்லை. இந்தத் தெளிவு மோகன் ஷானுக்கு இல்லாததால்தான், இப்படி மருட்டல் விடுக்கிறார்.
கடந்த 13 ஆண்டுகளில் இந்து சங்க தேசிய துணைத் தலைவர், தேசியச் செயலாளர், பொருளாளர், மாநிலத் தலைவர்கள் யார் யார் என்று எவருக்குமேத் தெரியாது. எல்லா வேளையிலும் எல்லாமுமாக மோகன்ஷான்தான் தென்படுவார். அந்த அளவுக்கு ‘தான் மட்டுமே’ என்ற ஆணவப்போக்கு கொண்டவர்.
இல்லாவிட்டால், நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் இருக்கின்ற இந்த வேளையிலும் அடக்கம் இல்லாமல் குரல்பதிவு வெளியிட்டு, இந்து சங்க மாநில-வட்டாரப் பேரவைகளின் பொறுப்பாளர்களை மிரட்டத் துணிவாரா?
நீதிமன்றமும் காலமும் எல்லாவற்றுக்கும் விடை காணும்!
