24.7 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

தேர்தலைத் தவிர தலைவர்களுக்கு வேறெதுவும் தெரியவில்லை: தேர்தல் ஆணையம் ஜாஹிட் ஹமிடியின் கைப்பாவையா? அரசியல் ஆய்வாளர்கள் எனப்படுவோர் உண்மையில் யார்?

-நக்கீரன்

கோலாலம்பூர், செப்.24:
நாட்டில் உள்ள தலைவர்கள் அனைவருக்கும் அடுத்தப் பொதுத் தேர்தலைப் பற்றி பேசுவதைத் தவிர வேறொன்றும் இல்லை அல்லது தெரியவில்லை என்று மக்கள் கருதும் நிலை நாட்டில் நிலவுகிறது.

இதில், அரசியல் ஆய்வாளர்கள் என்ற பெயரில் கண்டவர்களும் கண்டபடி கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்கள், நாட்டின் ஜனநாயக கட்டமைப்பையும் நாடாளுமன்ற மாண்பையும் மதிக்கத் தெரியாதவர்கள்.

தற்போதைய நாடாளுமன்றத்தின் தவணைக் காலம், அடுத்த ஆண்டு நடுப்பகுதிவரை இருக்கும் நிலையில் எதற்காக இப்பொழுது தேர்தல் நடத்த வேண்டும்? நடப்பது கொல்லைப்புற ஆட்சியின் 2-ஆவது அங்கமாக இருந்தாலும் ஏதோவொரு வகையில் ஆட்சி தொடர்கிறது. அதை, அந்தப் போக்கிலேயே அனுமதிப்படைவிட்டுவிட்டு, இடையில் நாடாளுமன்றக் கலைப்பதைப் பற்றி பேசுவபர்கள் உண்மையில் ஜனநாயகக் கொலையாளிகள்.

அரசியல் தலைவர்களும் அரசியல் ஆய்வாளர்கள் என்ற பெயரில் கண்டதையும் எழுதும் அரைகுறையாளர்களும் அடுத்தப் பொதுத் தேர்தலைப் பற்றி பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொண்டு, அவரவர் தத்தம் வேலையில் கவனம் செலுத்தினால், அது மக்களுக்கு நன்மையாக அமையும்.

குறிப்பாக, தலைவர்கள் என்பவர்கள், மக்களைக் கிள்ளுக்கீரையாக இனியும் எண்ணாமல், அவர்களுக்கு தாங்கள் ஆற்ற வேண்டிய கடமை- சேவை குறித்து இனியாவது அக்கறை காட்ட வேண்டும்.

யார் என்ன சொன்னாலும், எவர் தலைகீழாக நின்றாலும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முடிந்தவரை பிரதமர் பதவியில் தொடரவே விரும்புவார். அவர் தம் வாழ்நாளில் நினைத்துபாராத ‘நல்வாய்ப்பு’ பிரதமர் என்னும் உருவத்தில் கிடைத்துள்ளது.

இனியொரு முறை மலேசிய அரசியலில் அவர் பிரதமர் ஆவது உறுதியில்லை. அப்படியே அவருக்கு பிரதமர் வாய்ப்பு கிடைத்தாலும் அதைக் கெடுப்பது அம்னோவாகத்தான் இருக்கும்.

நாட்டின் ஒதுக்குப்புற மாநிலமாக இருந்தாலும், மேற்குப் பகுதியைச் சேர்ந்த பகாங் மாநிலம் நல்வாய்ப்புமிக்க மாநிலம்; அதனால்தான் அந்த மாநிலத்தின் சார்பில் மூன்றாமவர் இப்பொழுது பிரதமராக இருக்கிறார்.

இவை யெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நாடாளுமன்றத் தவணைக் காலம் முடியும் முன்பே அதனைக் களைப்பது பற்றியும் உரிய காலத்திற்கு முன்பே அடுத்தப் பொதுத் தேர்தலைப் பற்றி பேசுவதும் 2012 முதல் நடைமுறையில் இருக்கிறது.

தேசிய அரசியலில் நிலையற்றத் தன்மையையும் மலேசிய வர்த்தகத்தில் ஒரு தேக்க நிலையையையும் அந்நிய முதலீட்டில் ஓர் ஐயப்பாட்டையும் ஏற்படுத்தக் கூடிய இத்தகைய ஆபத்தான நிலைக்கு அச்சாரம் போட்டவர் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்.

ஹிண்ட்ராஃப் எழுச்சியின் விளைவாக, 12-ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கடுமையான பின்னடைவை எதிர்கொண்டாலும் அது, நஜீப்பிற்கு சாதகமாக அமைந்தது. அமைதியான தலைவரான துன் அப்துல்லா அகமட் படாவியை பதவியில் இருந்து விலகும்படி கட்டாயப்படுத்திய நஜீப்-முகைதீன் கூட்டணி, அடுத்த 13-ஆவது பொதுத் தேர்தலில் எப்படியாவது நல்ல பெரும்பான்மையில் வெற்றிபெற வேண்டும் என்ற தந்திரத்தில் ‘பிரிம்’ உதவித் தொகையை அறிமுகப்படுத்தி 2012-யிலேயே 13-ஆவது பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டது.

ஆனாலும், தெளிவும் துணிவும் இல்லாத நஜீப், தயங்கிக் கொண்டே இருந்ததால், 2013-ஆம் ஆண்டும் தொடங்கிவிட்டது. அதற்குள் பிரிம் உதவித் தொகையை மக்கள் மறந்து விட்டதால், அடுத்தக்கட்ட நிதிக்கு ஏற்பாடு செய்தார்.

இப்படி ஆரம்பித்த வழக்கம்தான் இன்றளவும் தொடர்கிறது; பிரிம் உதவித் தொகை(Bantuan Rakyat 1 Malaysia) நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் ‘பிஎஸ்எச்’(Bantuan Sara Hidup) -ஆக உருமாறி, இப்பொழுது இஸ்மாயில் ஆட்சியில் பிகேஎம்-( Bantuan Keluarga Malaysia) என மறு உருவம் கொண்டுள்ளது.

15-ஆவது பொதுத் தேர்தல் முடிவு எப்படியோ அமையட்டும்; அதுவரை நாம் பிரதமர் பதவியில் தொடர்வோம் என்பதில் இஸ்மாயில் சாப்ரி கண்ணும் இருப்பதைப் புரியாத விட்டில் பூச்சிகளைப் போன்ற அரசியல் ஆய்வாளர்கள், தாங்கள் விரும்பும் தலைவருக்கு ஏற்றபடி எழுதி வருகின்றனர்.

14-ஆவது பொதுத் தேர்தல் முடிவு வெளியான நாள் முதல் தூக்கத்தை தொலைத்து வாடிவந்த டத்தோஸ்ரீ அகமட் ஹாஜிட் ஹமிடி, ஊழல்-பண மோசடி குறித்த 40-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டுள்ளதால், நேற்று நிம்மதியாக உறங்க சென்றிருப்பார்.

ஆனால், கடந்த நான்கறை ஆண்டுகளில் தன்னுடைய வழக்கு பற்றி மட்டுமே பேசிவந்த அவர், மக்கள் எதிர்கொண்ட கொரோனா கால பாதிப்பு, மக்கள் சந்தித்த வேலை-வருமான பாதிப்பு, மாணவர்களின் கல்வித் தடை, பொருள் விலையேற்றம் உள்ளிட்ட எதைப்பற்றியும் அக்கறைப் படாமல் இருந்தார்.

மலாக்கா, ஜோகூர் மாநிலத் தேர்தல்களில் தேசிய முன்னணி வெற்றி பெற்றதும் நாடாளுமன்றத்தை களைக்க வேண்டும் எனவும் உடனே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கூக்குரல் எழுப்பி வந்தார் ஜாஹிட்.

தேர்தல் ஆணையம் என்ன, ஜாஹிட் ஹமிடியின் கைப்பாவையா? அல்லது நாடாளுமன்றம்தான் அவரின் சொந்த வர்த்தக நிறுவனமா?

காரணமின்றி ஏன் நாடாளுமன்றம் களைக்கப்பட வேண்டும்? எதற்காக இப்போது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஹமிடியைப் பார்த்துக் கேட்க ஒரேவோர் அரசியல் ஆய்வாளருக்குக்கூட துப்பில்லை.

அம்னோவும் அதன் தலைவர் ஜாஹிட் ஹமிடியும்தான் உள்நோக்கத்துடன் பொதுத்தேர்தலை வலியுறுத்துகின்றனர் என்றால், மற்ற தலைவர்களும் நாட்டில் வேறு வேலைவெட்டி எதுவும் இல்லாமல் பொதுத் தேர்தலைப் பற்றியும் நாடாளுமன்ற களைப்பைப் பற்றியுமே பேசிவருவது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் என்னும் ஜனநாயக-அரசியல் சாசன நடைமுறையை மதிக்காதத் தன்மையைக் காட்டுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles