26.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

மின்னல் பண்பலை வானொலி அரச நிறுவனமா? கிருஷ்ணமூர்த்தியின் சொந்த அமைப்பா?? வேண்டியவர்-வேண்டாதவர் பேதம் தொடர்கிறது!

🔥 Views : 29
👁 Reading Now : 49

-நக்கீரன்

கோலாலம்பூர், செப்.24:
மலேசிய அரச நிறுவனமான மின்னல் பண்பலை வானொலியின் நிருவாகி-யாக கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்ட நாள் முதல், வேண்டியவர்-வேண்டாதாவர் என பாகுபாட்டுடன் செயல்படுவதால், அந்தப் பொறுப்புக்கு அவர் தகுதியானவரா என்பதை மலேசியத் தகவல் பல்லூடக அமைச்சு, தக்காரைக் கொண்டு, தக்க முறையில் விசாரித்து, தக்க முடிவு எடுக்க வேண்டும்.

மின்னல் பண்பலை வானொலியின் நிகழ்ச்சிகளில் மிகுந்த உயிரோட்டத்து-டன் படைக்கப்படும் நிகழ்ச்சி காலைக்கதிர்; கலகலப்பு-சமுதாய நோக்கம்-புதுத் தகவல்-அன்றன்றைக்கு நிலவும் பிரச்சினை உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி படைக்கப்படும் அந்த நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்களாக இருந்தவர்களில் இருவரை எடுத்த எடுப்பிலேயே விரட்டி அடித்தார் கிருஷ்ணமூர்த்தி.

வசந்த வாசலில் நின்று கொண்டிருந்த அவ்விரு இளைஞர்களும் தற்காலிகப் பணியாளர்கள் என்பதால், அவர்களை எளிதாகப் பந்தாடிய கிருஷ்ணமூர்த்திக்கு உள்நோக்கம் இருந்தது.

இபிஎஃப் என்னும் ஊழியர் நல நிதி, பணியிட பாதுகாப்பிற்குரிய சொக்சோ உள்ளிட்ட அணுகூலம் இல்லாத நிலையிலும், அதிக நேரம் அறிவிப்பாளராகப் பணியாற்றினால் சற்று அதிகமான ஊதியம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஓடியாடி பணியாற்றிய சம்பந்தப்பட்ட இளைஞர்கள் திருமணம் ஆகாதவர்கள்.

அவ்விருவரும் எவ்வளவோ மன்றாடியும் அரக்க மனதுடன் விரட்டியடித்த கிருஷ்ணமூர்த்திக்கு, தனக்கு வேண்டிய பழையக் கூட்டாளிப் பெண்கள் இருவரை காலைக் கதிரில் சேர்ககும் எண்ணம் இருந்தது.

காலைக் கதிர் என்றால் புவனம்; புவனம் என்றால் காலைக்கதிர் என்று சொல்லுமளவிற்கு அந்த நிகழ்ச்சியில் சொல்லி அடித்து, ஆனமட்டும் அதிரடி படைத்துவிட்டு ‘போதுமடி தாலாட்டு’ என்ற சளிப்புடன் வேறு இடத்திற்குச் சென்ற பெண் அறிவிப்பாளரை, தனக்கு வேண்டியவர் என்பதால் அவரை மீண்டும் கொண்டு வருவதற்கும் எங்கோ இருந்த இன்னொரு மீனமான பேரிளம்பெண்ணை அழைத்து வருவதற்கும் இந்த இரு இளைஞர்களையும் பலிகடா ஆக்கியவர் கிருஷ்ணமூர்த்தி.

காலைக்கதிர் நிகழ்ச்சியில்தான் இப்படி என்றால், விளையாட்டுச் செய்திப் பிரிவிலும் அப்படியே நடந்து கொண்டவர் இந்த நிருவாகி.

அதைப்போல, ஞாயிறுதோறும் காலை வேளையில் ஒலியேறும் அமுதே தமிழே நிகழ்ச்சியிலும் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே கிருஷ்ணமூர்த்தி வாய்ப்பளிக்கிறார்.

கேட்ட குரலையே வாரந்தோறும் கேட்க வேண்டியிருக்கிறது; மின்னல் வானொலி நிலையம் தகவல் அமைச்சின் கீழ் இருக்கும் அரச நிறுவனமா அல்லது கிருஷ்ணமூர்த்தியின் குடும்ப நிறுவனமா என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

உண்மையில், ‘அமுதே தமிழே’ நிகழ்ச்சி, ஓர் இலக்கிய நிகழ்ச்சி என்னும் இலக்கணத்தை இழந்து, ஒரு சமயத்தை மட்டும் சார்ந்து நிற்கும் ஆன்மிக நிகழ்ச்சி என்னும் கட்டத்தை எட்டி எத்தனையோ காலம் ஆகிவிட்டது. தமிழ் மொழியில் இலக்கியக் கருத்திற்கா பஞ்சம்? ஆனால், அதை வழிநடத்து-வோரின் உள்ளத்தில் பஞ்சம் நிலவுவதால் இந்த அவலநிலை ஏற்பட்டு விட்டது!

இப்பொழுதுகூட, ஞாயிறுதோறும் கிருஷ்ணமூர்த்திக்கு வேண்டியவர்களின் குரலையே அமுதேத் தமிழே நிகழ்ச்சியில் நாமும் கேட்டுத்தொலைக்க வேண்டியுள்ளது.

இதை யெல்லாம் மனம் கூசாமல் செய்யும் கிருஷ்ணமூர்த்தி, மின்னல் பண்பலை நேயர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகவே இப்படி யெல்லாம் செய்வதாக சப்பைக்கட்டு வேலையையும் தப்பாமல் செய்கிறார்.

இவற்றை யெல்லாம்விட, இன்னொரு முக்கியமான தகவலை, மலேசியத் தமிழ் மக்களுக்கு-இந்திய சமுதாயத்திற்கு சொல்ல வேண்டும்.

இரவு-பகல் பாராமல், வெய்யிலோ மழையோ இடியோ மின்னலோ என அனைத்தையும் எதிர்கொண்டு அறிவிப்புப் பணியை மேற்கொள்ளும் மின்னல் பண்பலை ஊழியர்களில், இபிஎஃப்-சொக்சோ அணுகூலங்கள் இல்லாமல் பல்லாண்டு கணக்கில் பணிபுரியும் ஆண்-பெண் அறிவிப்பாளர்கள் இன்னமும் உள்ளனர்.

ஊருக்கெல்லாம் நியாயம் பேசும் இந்த அறிவிப்பாளர்களின் இந்த நிலைக்குக் காரணம், அவர்கள் தற்காலிகப் பணியாளர்கள். இந்த முறைக்கு, தகவல்-பல்லூடக அமைச்சில் ‘Piece Meal Scheme’ என்று பெயராம்.

இதைப் பற்றி அறிந்தவுடன், மின்னல் வானொலியின் மேனாள் தலைவர்களான திரு.பி.பார்த்தசாரதி, திருமதி சுமதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டபொழுது, இந்த முறை தகவல் அமைச்சகத்தில் இன்றளவும் இருப்பது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டதுடன், இந்த நடைமுறையை இந்தக் காலத்திலும் தொடர்வது பொருத்தமாக இல்லை என்றும், பணிக்கு ஆள் தேவை என்றுதானே நியமனம் செய்யப்படுகிறார்கள். அவ்வாறானால், நிரந்தப் பணியாளர்களாக எடுக்கலாமே என்றெல்லாம் கரிசனத்துடன் தங்களின் கருத்தைத் தெரிவித்தனர்.

அதன்பிறகு, கிருஷ்ணமூர்த்தியிடம் இதைப்பற்றி கேட்டதும், எதிரியைப் போல என்னிடம் சண்டைக்கு வந்துவிட்டார்.
இதுகுறித்தெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசி தீர்வு கண்டாகிவிட்டது. இப்போது புதிதாக பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. உங்களுக்கு வேறு வேலை இல்லையா என்றெல்லம் கேட்டு என்னிடம் மல்லுக்குநின்ற கிருஷ்ணமூர்த்தி, தற்காலிக அறிவிப்பாளர்களையும் முடிந்தமட்டும் தாழ்வாகப் பேசினார்.

வேலை வேண்டும் என்பதற்காக எல்லாவற்றுக்கு தலையசைத்துவிட்டு உள்ளே நுழைந்துவிடுகிறார்கள்; அதன்பிறகு உரிமைப்பற்றி பேசுகிறார்கள். இபிஎஃப், சொக்சோ இல்லாமல் வேலைசெய்ய ஒத்துக் கொண்டவர்கள், பின்னர் அதைப்பற்றி பேசலாமா என்று என்னிடம் எதிர்க்கேள்வி கேட்டார்.

அறிவிப்பாளர்களாக வருகிறவர்கள், தங்களை மேம்படுத்திக் கொள்வதில்லை; இருந்த நிலையில் அப்படியேத் தொடரும் இவர்கள், மேல் கல்வி குறித்தோ அல்லது தங்களை உயர்த்திக் கொள்வது பற்றியோ சிந்திப்பதில்லை; ஒரு நேர்காணலில் எப்படி கலந்துகொள்வது என்பதுகூட தெரியவில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு நல்ல வாய்ப்பு எங்கிருந்து கிடைக்கும். அதைவிட, நிரந்தரப் பணியாளர்களைக் காட்டிலும் இவர்கள் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்று ஓர் ஆண் அறிவிப்பாளரின் பெயரையும் சொன்னார்.

இப்படி, தன்கீழ் பணிபுரிபவர்களின் எதிர்காலம் குறித்தோ, அவர்களுக்கும் இபிஎஃப்-சொக்சோ பாதுகாப்பு வேண்டுமே என்பதைப் பற்றியோ சிறிதும் அக்கறைப்படாத கிருஷ்ணமூர்த்திக்கு தலைமைப் பண்பும் சமுதாய அக்கறையும் இருக்கிறதா என்பதே கேள்விக்குரியது.

இந்த லட்சணத்தில் அவர் சொன்ன இன்னொன்றுதான் எனக்கு இன்னமும் வியப்பாக இருக்கிறது. சமுதாயத்திற்கு தொண்டு செய்வதற்காகவே எங்களுக்கு குழந்தையே வேண்டாம் என்று மகப்பேற்றுச் செல்வத்தை நாங்கள் விலக்கி வைத்துவிட்டோம்; இதற்கு தன் மனைவியும் சம்மதம் தெரிவித்தார் என்று கிருஷ்ணமூர்த்தி சொன்னது, போலித்தனமானதோ என்று நான் எண்ணிப் பார்க்கிறேன்.

காலமகள் எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளட்டும்.

எனக்கு இருக்கும் ஒரேக் கவலை, அடுத்துவரும் அமுதே தமிழே நிகழ்ச்சியில் புதிய குரல்களை கேட்க வாய்ப்பிருக்குமா என்பதே!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles