
எம்.முருகன்
சிவகங்கை: தமிழ்நாட்டில் திடீரென உயர்ந்த மின் கட்டணத்தால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேதமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதற்கு முன்பு குறைவாக இருந்த மின் கட்டணம், இந்த மாதம் ₹8,500-க்கும் அதிகமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் பெற பல்வேறு அலுவலகங்களை அணுகியபோதும், “அங்கு செல்லுங்கள், இங்கு செல்லுங்கள்” என அலைக்கழிக்கப்படுவதாகவும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தனது குடும்பம் மிகுந்த சிரமத்தையும் வேதனையையும் அனுபவித்து வருவதாகவும், இனி என்ன செய்வது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். இல்லையெனில், எனது உரிமையைப் பாதுகாக்க சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்வேன்,” என்று வேதமாணிக்கம் எச்சரித்தார்.
மின் கட்டண உயர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்களுக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் அவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



