
சொஸ்மா சட்டத்தில் ஒருவரைப் பிணையில் விடுவிக்காமல் இருப்பது அரசமைப்பு விதிகளுக்கு முரணானது அல்லவென கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதி வெர்னோன் ஓங் தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
ஆள் கடத்தல், அந்நியத் தொழிலாளர்கள் கடத்தல் சட்டம் சொஸ்மாவின் கீழ் வருவதால், ஒருவரின் உயிருக்கு ஆபத்து, அணுக்க மருத்துவக் கண்காணிப்பில் கவனிக்க வேண்டி இருந்தால் மட்டுமே பிணை வழங்க அனுமதிக்கப்படுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
சமாட் யாமின் (56) என்பவர் 2020 மே 17இல் இருந்து மே 20ஆம் தேதி வரை 30 அந்நிய நாட்டவர்களைக் கடத்தி வந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
தம்மை பிணையில் விடுவிக்க வேண்டுமென்ற அவரின் மனு உயர்நீதிமன்றத்திலும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்பட்டது.
அவரின் சார்பில் ஆஜரான ராம்கர்ப்பால் சிங் சொஸ்மா சட்டம், சட்ட விரோதமானது, அரசமைப்பு விதி 8க்கு முரணானது, அது பாகுபாடானது என்றும் அதில் 18 வயதுக்குக் குறைவானவர்கள், பெண்கள், நோயாளிகள், பலவீனமானவர்களுக்கு மட்டுமே பிணை வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
