
நாட்டில் பெரிய பெரிய நிறுவனங்கள் 5 விழுக்காடும், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் 95 விழுக்காடும் இருக்கையில், 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெரிய நிறுவனங்கள் கொள்ளை லாபமடைய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மொத்தம் 9,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அது பெரிய பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, அவற்றை மேலும் மேலும் லாபமடைய வைப்பதே அரசின் திட்டமாகும்.
அந்தப் பெரிய நிறுவனங்கள் அம்னோ அரசியல் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான வையாகும். நிறுவனங்கள் கோடி கோடியாய் சம்பாதிக்கும் வேளையில், அரசியல் தலைவர்களும் அதன் மூலம் பலனடைய முடியும்.
இந்நிலையில், நாட்டில் 95 விழுக்காட்டுத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி, வருமான வரியைக் கோடிக் கணக்கில் செலுத்தும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக சைஃபுடின் சுட்டிக்காட்டினார்.
இம்மாதிரியான போக்கு சிறு, நடுத்தர நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் பெரிதும் பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார்.
