
🔊To listen to this news in Tamil, Please select the text.
நக்கீரன்
கோலாலம்பூர், ஜூன் 05:
பதினேழு வயதான அம்சராஜ் என்னும் இளம் மாணவர், எதிர்பாராமல் மரணமடைய நேர்ந்தாலும் தன்னுடை சிறுநீரகம், நுரையீரல் ஆகிய உடற்பாகங்களை கொடையளித்து இரு உயிர்களை வாழவைத்துள்ளதுடன் சமூகத்தில் உடல் உறுப்பு தானத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறார்.
கல்வியில் நடுத்தர மாணவராக இருந்தாலும் அண்டை அயலாருக்கு உதவி புரிவதிலும் அருகில் உள்ள ஆலயத்தில் பெரும்பாலான ஓய்வு நேரத்தை செலவிட்டு சம்பந்தப்பட்ட ஆலயத்தின் வளர்ச்சிப் பணி குறித்து அங்குள்ளவர்களுடன் இணைந்து செயல்படுவதிலும் தன்னை ஈடுபடுத்தி வந்த அம்சராஜ், இரு மாதங்களுக்குமுன் மோட்டார் சைக்கில் வாகனத்தில் பயணம் செய்தபோது எதிர்பாராமல் விபத்தில் சிக்கி இருக்கிறார்.
தலையில் கடுமையாக அடிபட்டதால், மூளை இயக்கம் முற்றாக செயல் இழந்துவிட்டது; ஏறக்குறைய இருமாதங்களாக சுங்கை பூலோ மாவட்ட மருத்துவமனை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் அம்சராஜிற்கு ஒருகட்டத்தில் மூளைச்சாவு என்ற நிலை ஏற்பட்டது.
சுங்கைபூலோ, பண்டார் கோல் ஃபீல்ட்ஸ் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த அம்சராஜின் பெற்றோரிடம் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் நிலைமையை விளக்கி சொன்னதுடன் சிறுநீரக பாதிப்பினாலும் நுரையீரல் சிக்கலினாலும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து உயிருக்குப் போராடிவந்த இரு இளம் உயிர்களுக்கு அம்சராஜின் சிறுநீரகத்தையும் நுரையீரலையும் கொடை அளிப்பது குறித்து அம்சராஜின் பெற்றோர்தம் சம்மதத்தைப் பெற்றனர்.
சின்னஞ்சிறு வயதில் தங்களின் ஒரே மகன், அதுவும் கடைக்குட்டிப் பிள்ளை அகாலமாக மறைய நேரிட்டாலும், அந்தப் பெருந்துயரைத் தாங்கிக் கொண்டு, தங்கள் மகனின் இரு அவயங்கள் மூலம் வேறு இரு உயிர்களை வாழவைத்துள்ள முன்மாதிரிப் பெற்றோராக அம்சராஜின் தாயும்-தந்தையும் திகழ்கின்றனர்.
எதோவொரு வகையில் தன்னை அறியாமல் இரு உயிர்களை இந்த உலகில் நடமாடவைத்துள்ள அம்சராஜின் பெயர் மலேசிய மருத்துவ உலகில் நிலைத்திருக்கும் என்பது மட்டும் திண்ணம்.
அம்சராஜிற்கு நான்கு மூத்த சகோதரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
