
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
சென்னை, செப்.29:
தமிழ்நாட்டு இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் சனாதன கொள்கைக்கு ஆதரவாகவும் இன்று செப்டம்பர் 29,வெள்ளிக்கிழமை பேரணி நடத்தி கோலாலம்பூர் இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பக் கடிதத்தை வழங்கத் திட்டமிருந்த மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா, கடைசி நேரத்தில் அந்த முயற்சியைக் கைவிட்டதற்கு திராவிட முன்னேற்றக் கழகம்-திமுக சார்பில் நன்றி தெரிவிப்பதாக அதன் அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி கூறியுள்ளார்.
இதன்தொடர்பில் கடந்த வாரம் செப்டம்பர் 22, வெள்ளிக்கிழமை மஇகா அறிவிப்பு செய்திருந்தது. இதுகுறித்த தகவல் அறிந்து மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கு கடந்த புதன்கிழமை கடிதம் அனுப்பியதாகவும் அதில் திமுக நிலைகுறித்தும் அமைச்சர் உதயநிதி வெளிப்படுத்திய கருத்து பற்றியும் விரிவாக விளக்கம் அளித்ததாகவும் மேநாள் ராஜ்யசபை எம்பியுமான ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திமுக-வின் இறைக் கொள்கை என்பதை, திமுக உருவான நேரத்திலேயே பேரறிஞ பெருந்தகை அண்ணா அறிவித்தார். அந்தக் கொள்கையில் இருந்து சிறிதும் வழுவாமல் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான இன்றைய திமுக அரசும் செயல்பட்டு வருகிறது.
திமுக, இந்து சமயத்திற்கு எந்நாளும் எதிரானதல்ல; மாறாக, சைவம்-வைணவம்-சாக்தம்-கணபதியம்-கௌமாரம்-சௌரம் ஆகிய ஆறு சமயக் கொள்கைகளைக் கொண்ட இந்து சமய வளர்ச்சிக்காக இந்து சமய அறநிலையத் துறை அரிய-பெரிய பணிகளை ஆற்றிவரும் அரசு, திமுக அரசு.
குறிப்பாக, அமைச்சர் சேகர் பாபு தலைமையில், இந்து சமயம் பேரளவில் சமய மறுமலர்ச்சியையும் ஆன்மிக மேம்பாட்டையும் கண்டு வருகிறது. அனைத்து ஆலயங்களிலும் ஆலய மறுசீரமைப்பு, நிதி மேலான்மை, ஆலய சொத்து மீட்பு, குடமுழுக்கு விழா என்றெல்லாம் திருப்பணிகள் நாளும் தொடர்கின்றன.
இந்தச் சூழலில் தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம், இதேத் திங்கள் 2-ஆம் நாள் சென்னையில் ஏற்பாடு செய்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றுவதற்காக அமைச்சர் உதயநிதியை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு சார்பில் அதன் தலைவரும் சங்கத்தின் துணைத் தலைவருமான நடிகை ரோகினி அழைத்ததன் அடிப்படையில், அவரும் கலந்துகொண்டு பேசினார்.

அதில் பேசிய அமைச்சர் உதயநிதி, மனிதர்களிடையே பிறப்பின் அடிப்படையில் குறிப்பாக தமிழ்ச் சமூகத்தில் சாதி பேதம், பெண்களை இழிவுபடுத்துதல், மூடநம்பிக்கை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் சனாதானக் கொள்கைக்கு எதிராகத்தான் பேசினார் என்பதை யெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு கடந்த புதன்கிழமை செப்டம்பர் 27-ஆம் நாள் அனுப்பப்பட்ட கடிதத்தை ஏற்றுக்கொண்ட மஇகா, அதற்கு அடுத்த நாளே சம்பந்தப்பட்ட அமைதிப் பேரணியை ரத்து செய்ததற்கு திமுக சார்பிலும் முதல்வர் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆலந்தூர் பாரதி தெரிவித்தார்.
காலமும் சூழலும் அறிந்து, தக்க நேரத்தில் நல்ல முடிவை எடுத்ததற்காக, மஇகா-விற்கும் அதனை சிறப்பாக வழிநடத்தும் தலைவர் விக்னேஸ்வரனுக்கும் மீண்டும் நன்றி தெரிவிப்பதாக நேற்று மாலை திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஆலந்தூர் பாரதி மேலும் பேசினார்.
