24.7 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

உணவு, குடிநீர், மின்சாரம் முற்றிலும் நிறுத்தம் காசாவை இஸ்ரேல் ராணுவம் முற்றுகை: நாடு புகுந்து ஹமாஸ் அமைப்பை வேட்டையாட முடிவு

🔊To listen to this news in Tamil, Please select the text.

இஸ்ரேலில் வரலாறு காணாத கொடூர தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி தரும் வகையில் காசா முனையை இஸ்ரேல் ராணுவம் முற்றிலும் முற்றுகையிட்டுள்ளது. அப்பகுதிக்கு உணவு, குடிநீர், மின்சார விநியோகத்தை நிறுத்தி உள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் காசாவிற்குள் தரைவழியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதால் போர் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை பிரித்து புதிய நாடாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டதில் இருந்தே இரு நாட்டிற்கும் எல்லை பிரச்னை நீடித்து வருகிறது.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆளும் ஹமாஸ் அமைப்பினர், எல்லை வேலிகளை தகர்த்து இஸ்ரேல் நாட்டிற்கு 24 இடங்களில் சட்டவிரோதமாக நுழைந்தனர். அங்கு பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியும், 5,000 ராக்கெட்களை ஏவியும் வரலாறு காணாத தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடி தர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா மீது உடனடியாக போர் தொடுப்பதாக அறிவித்தார்.3வது நாளாக நேற்றும் காசா மீது இஸ்ரேல் விமானப்படை பயங்கர தாக்குதல் நடத்தியது. காசாவை சுற்றி வளைத்து இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிய, எல்லையில் நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் காசாவில் நொடிக்கு நொடி பதற்றங்கள் மரண ஓலங்களும் அதிகரித்து வருகின்றன. பல கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அப்பாவி பொதுமக்கள் பலரும் இஸ்ரேலின் குண்டுகளுக்கு இரையாகி வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 800 பேர் பலியானதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. காசாவில் பலி எண்ணிக்கை 500ஐ தாண்டி உள்ளது. அங்கு 1000க்கும் மேற்பட்ட இலக்குகளை துவம்சம் செய்திருப்பதாகவும், 400க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினரை கொன்றுவிட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ள கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஹமாசை முழுமையாக அழிக்கும் வரை இப்போர் ஓயாது என பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ள நிலையில், தற்போது காசாவை இஸ்ரேல் ராணுவம் முழுமையாக முற்றுகையிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், ‘‘பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் உத்தரவின் பேரில், காசா எல்லைப் பகுதிகள் அனைத்தும் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. எல்லை நகரங்களில் இன்னும் சில ஆயுதம் தாங்கிய ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளனர். அவர்களை அழிக்க தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது’’ என்றார்.

காசாவிற்கான மின்சாரத்தை ஏற்கனவே இஸ்ரேல் நிறுத்திய நிலையில், தற்போது அப்பிராந்தியத்திற்குள் உணவு மற்றும் குடிநீர் செல்வதையும் தடுத்துள்ளது. இதனால், காசாவில் உயிரை கையில் பிடித்திருக்கும் மக்களின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. இதுமட்டுமின்றி, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ராணுவ பயிற்சி பெற்ற 3 லட்சம் பொதுமக்களுக்கும் போரில் பங்கேற்க இஸ்ரேல் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இவர்களைக் கொண்டு, ராணுவத்தின் சிறப்பு படையினர் அடுத்த சில மணி நேரங்களில் காசாவிற்குள் தரை மார்க்கமாக நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles