34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

முஸ்லிம் அல்லாதவர்களை ஹலால் சட்டத்திற்கு உட்படுத்துவதுஅரசியல் சாசனத்திற்கு முரணானது

🔊To listen to this news in Tamil, Please select the text.

பன்றி இறைச்சி மற்றும் மது பானங்களை விற்பனை செய்யாத மற்ற உணவகங்கள் அனைத்தும் ஹலால் சான்றிதழைப் பெற வேண்டும் என்று தன்னிசையாக முடிவெடுக்கும் இஸ்லாமிய நலத் துறை அமைச்சர் குறித்து ஜசெகவும் ஜசெக-பிகேஆர் கட்சிகளைச் சேர்ந்த இந்திய மக்கள் பிரதிநிதிகளும் கேள்வி எழுப்ப முடியுமா? அல்லது அமைச்சரவைக் கூட்டத்திற்கு இதைக் கொண்டுசெல்ல துணிவிருக்கிறதா? குறைந்தபட்சம், இஸ்லாமிய விவகார அமைச்சரின் இந்த முன்னெடுப்பு அரசியல் சாசனப்படி சரியா என்றாவது விவாதிக்க முடியுமா என்றெல்லாம் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி வினாக் கணைகளை தொடுத்துள்ளார்.

முஸ்லிம் அல்லாதவர்களைப் பாதிக்கும் சட்டங்களை முன்னெடுப்பதன் மூலம், இஸ்லாமிய விவகார அமைச்சர் வரம்புமீறி செயல்படுவதாகத் தெரிகிறது. தவிர, மலாய் முஸ்லிம் ஆதரவு பிரதமரும் இதைக் கண்டும் காணாமல் கடந்துசெல்வதாகத் தெரிகிறது. நடுநிலை இஸ்லாமியக் கட்சியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் அமானா கட்சியோ இந்த விவகாரத்தில் ஒட்டத் தைக்கப்பட்ட வாயுடன் ஒதுங்கி நிற்கிறது.

பிரதமரின் பிகேஆர் மற்றும் அமானா கட்சிகள், தேர்தல் களத்தில் இந்திய சமுதாயத்திற்கு எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளிவீசித்தான் அதிகமான நாடாளுமன்ற-சட்டமன்றத் தொகுதிகளை வென்றன; இப்பொழுது தங்களுக்கு ஆதரவளித்த வாக்காளர்களை அடியோடு புறக்கணித்து, தங்களின் கடமையிலிருந்து தவறுகின்றனர். இந்திய சமுதாயத்தின்மீதான இத்தகைய துரோகம் கடந்த 16 ஆண்டுகளாகத் தொடர்கிறது.

இந்த நிலையில் கைரி ஜமாலுடீனின் கருத்து, எரிகின்ற நெருப்பில் நெய்யை ஊற்றிய விதமாக அமைந்துள்ளது. இஸ்லாமிய விவகார அமைச்சரின் ஆலோசனை, நன்மையானது; சுகாதாரத்தைப் பேணக்கூடியது என்பதுடன் நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கைரி தன் பங்கிற்கு கொக்கரித்துள்ளார். இது, முஸ்லிம் அல்லாதவர்களை நேரடியாக அவமானப்படுத்துவதும் சிறுமைப்படுத்துவதும் ஆகாதா? தவிர, முஸ்லிம் அல்லாதவர்களின் உணவகங்கள் தூய்மையற்றவை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதுடன் சுகாதார அமைச்சும் முஸ்லிம் அல்லாதவர்களின் தரமற்ற உணவகங்களில் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் வெளிப்படுத்துகிறது. கைரி ஒரு முற்போக்கான முஸ்லிம் எனக் கருதுபவர்கள், அவரின் இலட்சணம் இதுதான் என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.

கிளந்தான் முப்தியோ, இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசத் தேவையில்லை யென்றும் யார் யாருக்கு அதிருப்தி இருக்கிறதோ அவர்களெல்லாம் முஸ்லிம் மேம்பாட்டு வாரியமான ஜாக்கிமிடம் விளக்கம் பெற்றுக் கொள்ளட்டடும் என்று அதிமேதாவித்தனமாக தெரிவித்துள்ளார். முஸ்லிம் அல்லாதவர்கள் எதற்காக முஸ்லிம் நல வாரியத்தை நாட வேண்டும் என்ற கேள்வி இங்கே எழுகிறது.

அரசியல் சாசனத்திற்கு இசைவான எந்த இஸ்லாமிய சட்டம் குறித்தும் கேள்வி எழுப்புவதில்லை என்பதில் இஸ்லாம் அல்லாதவர்கள் தெளிவாக உள்ளனர். ஆனால், இஸ்லாம் தொடர்பான எந்தச் சட்டத்தையும் இஸ்லாம் அல்லாதவர்கள்மீது திணிப்பதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது. அனைவரும் அவரவர் இடத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் பொதுவான விதி.

இப்படி யெல்லாம் கருத்து தெரிவிக்கும் தலைவர்கள் நாட்டு மக்களிடையே நிலவும் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதில் சிறிதும் அக்கறை இல்லாதவர்கள். இவர்களின் இத்தகைய போக்கை பார்க்கும்பொழுது, அடுத்த பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு, மற்ற மலாய்க் கட்சிகளை விஞ்சுவதற்காக இப்படி இஸ்லாமியவாதம் புரிவதை அவதாணிக்க முடிகிறது. இவர்களுக்கு தேசத்தை மேலும் கட்டமைப்பதிலோ, மலேசியக் கூட்டு சமுதாயத்தில் நிலவும் அமைதி மற்றும் சகவாழ்வை இன்னும் வலுப்படுத்து-வதிலோ சிறிதும் நாட்டமில்லை என்று முன்னாள் அமைச்சரும் ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles