31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

மக்கோத்தா தொகுதி இடைத்தேர்தல்: மஇகா தேசியத் தலைவர் தேர்தல் பணிக்குழுவை நியமித்தார்

🔥 Views : 9
👁 Reading Now : 23

குளுவாங், செப்.12:
ஜொகூர் மாநிலம், குளுவாங் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதியான மக்கோத்தாவில்(எண் 29) செப்டம்பர் 28ஆம் நாள் இடைத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தேர்தல் பணிக்குழுவை குளுவாங் நகரில் நேற்று புதன்கிழமை மாலையில் முறையாக அறிவித்து, பணிக்குழு நடவடிக்கையையும் தொடக்கிவைத்தார் என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் தேசியத் தலைவரின் ஊடகச் செயலருமான சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

நாட்டில் தேசிய அளவில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்திருப்பதைப்போல ஜோகூர் மாநிலத்திலும் ஒற்றுமை அரசு அமைந்துள்ளது. அந்த வகையில், தேசிய முன்னணியும் நம்பிக்க்கைக் கூட்டணியும் இணைந்து இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில், தேசிய முன்னணியின் அம்னோ வேட்பாளர் குளுவாங் தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் உசேன் சைட் அப்துல்லா வெற்றி பெறுவது உறுதி என்றாலும் மக்கோத்தா தொகுதி-யில் உள்ள 5,144 இந்திய வாக்காளர்களின் ஆதரவையும் ஒருமுகமாகத் திரட்டி, தேசிய முன்னணி வேட்பாளர் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெறுவதற்கான களப்பணியை துரிதப் படுத்தும் நோக்கில் இந்த மஇகா பணிக்குழுவை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணனுடன் இணைந்து தேசியத் தலைவர் தொடக்கி வைத்தார்.

முன்னதாக, அவர் குளுவாங் நகரை வந்தடைந்தபோது, மாநில மஇகா சார்பில், குறிப்பாக குளுவாங் தொகுதி மஇகாவினர் அதிக அளவில் திரண்டு வரவேற்பு நல்கினர்.

மாநிலத் தலைவர் டத்தோ அசோகன், குளுவாங் தொகுதித் தலைவர் ஜி.இராமன், துணைத் தலைவர் சி.சரசுவதி உள்ளிட்ட மாநில-தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேசுவரன், இந்திய சமுதாயம் எதிர்கொண்டுள்ள பொருளாதார-சமூக-கல்வி தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப் படுவதற்கு, குறிப்பாக ம்ககோத்தா தொகுதி இந்தியர்கள் எதிர்கொள்ளும் இடுகாட்டு நிலச் சிக்கல் தீர்க்கப்படுவதற்கு தேசிய முன்னணி வெற்றி துணையாக அமையும் என்றார்.

பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்திய சமுதாயத்தின் நண்பனாகத் திகழும் ஒரே அரசியல் இயக்கம் மஇகா-தான் என்பதை இந்திய சமுதாயம் தற்பொழுது நன்கு உணர்ந்துள்ளது. இருந்தாலும், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களின் ஆதரவை நாட வேண்டியது நம் கடமை; அதைப்போல, தேசிய முன்னணி வேட்பாளரை வெற்றிபெற வைத்து, அதன்வழி மஇகா கரங்களை வலுப்படுத்துவது இந்திய வாக்காளர்களின் கடமை என்பதை இந்திய சமுதாயத்திற்கு உணர்த்த வேண்டியது கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் தேசியத் தலைவர் குறிப்பிட்டார் என்று சிவசுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles