
ஷா ஆலம், செப்.15:
-நக்கீரன்
படம்: முருகன்
அதிகாரமோ பதவியோ இல்லாவிட்டாலும்கூட, மலேசிய இந்திய சமுதாயத்தின் நலம் நாடுகின்ற ஒரே அரசியல் இயக்கம் ம.இ.கா. என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மஇகா-வின் 78-ஆவது தேசியப் பேராளர் மாநாடு இன்று செப்டம்பர் ல்15, ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம் ஐடிசிசி அரங்கத்தில் நடைபெற்றபோது, தலைமை உரை ஆற்றிய அவர், மலேசிய இந்திய சமுதாயத்தின் நலனுக்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கும் இந்த மாபெரும் இயக்கம், நாட்டின் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப ஒற்றுமை அரசுடன் ஒருங்கிணைந்து பயணிக்கிறது என்றார்.
தொடர்ந்து அம்னோ தலைவரும் தேசிய முன்னணி தலைவரும் மடானி அரசின் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
மிகவும் நட்பாகவும் கலகலப்பாகவும் அதேவேளை பொருள்பொதிந்த கருத்துக்களை உள்ளடக்கியும் பேசிய ஹமிடியை மஇகா பேராளர்கள் அடிக்கடி கரவொலி எழுப்பி அவரை மேலும் உற்சாகப் படுத்தினர்.
உணவகங்களுக்கான ஹலால் சான்றிதழ் குறித்துப் பேசிய துணைப் பிரதமர், அது அரச நிலைப்பாடாக இருந்தாலும் யாரையும் கட்டாயப் படுத்துவதாக அமையக்கூடாதென்றார்.
குறிப்பாக, சமய நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் மலேசியாவில் ஒவ்வொருவரும் தத்தம் மதத்தைப் போற்றும் அதேவேளை, மற்றவரின் சமயத்தையும் மதிக்கும் பண்பைக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
காலை நிகழ்ச்சியில் ‘விஸ்மா எம்ஐசி’-க்கான தொடக்க விழா முறையாக அதேவேளை மஇகா தேசியப் பேராளர்களின் ஒருமித்த எழுச்சியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
