
-நக்கீரன்
பத்துமலை, செப்.18:
மலேசியாவில் வாழ்கின்ற இந்துக்கள் அனைவரும் மலேசிய இந்து சங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்; அதில் உறுப்பினராக இணைந்து, அதன்மூலம் சமயத்திற்கும் சமூகத்திற்கும் தொண்டாற்ற வேண்டும். இந்த நிலை உருவானால், மலேசிய இந்து சங்கம் வலிமைபெறும்; மலேசியாவில் இந்து சமயம் இன்னும் எழுச்சிபெறும் என்று மஇகா முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ சுப்ரா தெரிவித்தார்.
மலேசிய இந்து சங்கத்தின் 46-ஆவது தேசிய திருமுறை விழா, கடந்த 15-ஆம் நாள் பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்றபோது, தமிழ்ப்பள்ளி வளாகம் முழுவதும் திருநெறியத் தமிழ்க்கோலம் பூண்டிருந்தது.
மலேசிய இந்து சங்கத்தின் இறைநேசத் திருவிழாக்களில் முதல்நிலை விழா, திருமுறை விழாவாகும். அந்த வகையில் வட்டார-மாநிலப் பேரவைகளின் திருமுறை விழாக்கள் நிறைவடைந்து, தேசியத் திருமுறை விழா நடைபெற்றபோது, வகுப்பறைகள் முழுவதும் தமிழ் மணக்கும் விதமாக திருமுறைப் பாடல்கள் ஓதப்பட்டன.
நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சைவர்கள் பாரம்பரிய உடையில் திரண்டது, இந்த நாட்டில் சைவ நெறிமுறையை நிலைநாட்டும் விதமாக அமைந்தது.
காலையில் தொடங்கிய முதல் அங்கத்தில், ஆறு நிலைகளுக்கான போட்டி இடம்பெற்றது; பகல் உணவுக்குப் பின் தொடங்கிய பிற்பகல் அங்கத்தை தொடங்கி வைக்குமுன் சிறப்புரை ஆற்றிய மருத்துவர் ச.சுப்பிரமணியன், மலேசிய இந்து சங்கம் இல்லை என்றால், திருமுறை குறித்தோ சைவ சமயம் குறித்தோ இன்றைய தலைமுறைக்கு தெரியாமலே போகும்.

இத்தகையப் பணிகளை மலேசிய இந்து சங்கம் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்றால், மலேசிய இந்துக்கள் அனைவரும் மலேசிய இந்து சங்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மலேசிய இந்து மக்களைக் கேட்டுக் கொண்டார்.
மலேசிய இந்து சங்கத்திற்கு சமூக அக்கறையும் உண்டு என்பதை, அதன் தொடர் நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. அண்மையில்கூட, ஹலால் சான்றிதழ் குறித்து அரசாங்கத்திற்கு இந்து சங்கம் வெளியிட்ட கோரிக்கை சாத்வீகமாகவும் சிந்திக்கத்தக்கதாகவும் இருந்தது என்றெல்லாம் இந்து சங்கத்தைப் பாராட்டிய சுப்ரா, பெரியவர் முதல் சிறுவர் வரை திருமுறையில் ஆர்வம் காட்டிவரும் சைவநெறியாளர்களையும் பாராட்டினார்.

முன்னதாக பேசிய இந்து சங்கத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன், “வானம் வானுலாவும் சிறு-பெறுங்கோள்கள், அதைப்போல இந்தப் பூவுலகம், பூவுலகே உலாவும் உயிர்கள் என விண்ணையும் மண்ணையும் ஆட்கொண்டுள்ள சக்தி வடிவான அன்னை உமையவள்-உமையொருபாகனான பரமனின் துணையுடன் மலேசிய இந்து சங்கத்தின் தலைமை விழாவான தேசியத் திருமுறை விழா, 46-ஆவது தடவையாக இந்தத் திருமுருக சன்னிதான தமிழ்ப் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்படுகின்ற இந்த வேளையில் உங்களை யெல்லாம் சந்திக்கும் நற்பேறு வாய்த்தமைக்காக சிவனடி போற்றுகின்றேன்” என்று குறிப்பிட்டார்
தொண்டறத்தைப் போற்றுவதையும் அடியார்க்கடியாரைப் பேணுவதையும் இரு கண்களாகக் கொண்ட ஒரே சமயநெறி சிவநெறியாகும். ‘அம்மையே-அப்பா’ என்று உமையொரு பாகனாம் சிவபெருமானை மாசுமறுவற்ற மனதில் நிலைநிறுத்தினாலே போதும், அவனருள் நம்மைவந்து சேரும்.
தமிழை வளர்த்து தானும் வளர்ந்த சைவ நெறியின் வழிபாட்டு நாயகனாம் சிவனை இடையறாதுத் துதித்ததுடன் அல்லாமல் அவனருளை நாடிய நால்வர் பெருமக்கள் உள்ளிட்ட ஆழ்வார்களும் நாயன்மாரும் உள்ளம் உருகப் பாடி, பதிவுசெய்த பல்லாயிரக் கணக்கானப் பாடல்களை, மலேசியாவில் வாழ்கின்ற இந்து மக்களிடம், குறிப்பாக புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் விதமாக ஆண்டுதோறும் திருமுறை விழாக்களை மலேசிய இந்து சங்கம் நடத்திவருகிறது.
திருமுறை ஓதுவதன் மூலம், தமிழ் அறியாதவர்களையும் தமிழ்க் கற்கவைக்கும் அரும் பணியையும் மலேசிய இந்து சங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் பல லட்சக் கணக்கானவர்களை தமிழ்க் கற்க வைத்துள்ளது மலேசிய இந்து சங்கம்.
வட்டார, மாநில அளவில் திருமுறை ஓதும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள், அவர்களுக்கு திருமுறைப் பயிற்சி அளிக்கும் ஓதுவார்கள், ஓதுவார்களுக்கான பயிற்றுநர்கள், திருமுறைப் போட்டியார்களை தரப்படுத்து-வதற்கான நடுவர்களை உருவாக்குதல், நடுவர் பயிற்சிக்கான மாநில-தேசிய பொறுப்பாளர்கள் என்றெல்லாம் ஆண்டு முழுவதும் திருநெறியத் தமிழ் உணர்வை இந்து சமய மக்களிடம் ஏற்படுத்திவரும் மலேசிய இந்து சங்கம், சைவத்துடன் தமிழையும் வளர்க்கும் பணியை அயராது மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்பில், ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான வெள்ளியை மலேசிய இந்து சங்கம், வட்டார-மாநில-தேசியப் பேரவைகளின்மூலம் செலவழித்து வருகிறது.

ருக்குன் நெகாரா கோட்பாட்டின் முதல்கொள்கையான இறைவன்மீது நம்பிக்கை வைத்தல் என்பதை, இளம்பருவத்திலிருந்தே ஊட்டி, இறைநம்பிக்கையுடன் நன்னெறியையும் கற்பித்து நாட்டில் நல்ல குடிமக்களை உருவாக்கிவரும் மலேசிய இந்து சங்கத்திற்கு சமுதாயமும் அரசாங்கமும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் திருமுறைப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களையும் சிலாங்கூர் மாநிலப் பேரவை வென்றது. கவியேஷ் வாசு, ஹெமித்ரா ரவிச்சந்திரன், ஷிவாயினி லெட்சுமணன் ஆகியோர் திருமுறை தங்கப் பதக்க வெற்றியாளர்கள்; பதிகப் பாராயாணத்தை பினாங்கு மாநிலம் வென்றது-வெற்றியாளர் தேசிகன் கணேசன்; பஞ்ச புராண தங்கப் பதக்கத்தை பேராக் மாநிலம் தட்டிச் சென்றது-வெற்றியாளர் ஷரண்யா வாசு; பேச்சுப் போட்டிக்கான பதக்கத்தையும் பேராக் மாநிலப் பேரவையே வென்றது-வெற்றியாளர் சுபநாகஸ்ரீ நாகராஜன்.
மொத்தத்தில் திருமுறை அடைவுநிலையில், சிலாங்கூர், பினாங்கு, கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் ஆகியவை முதல் மூன்று மாநிலங்களாகத் தேர்வு பெற்றன என்றும் அறிவிக்கப்பட்டன.
