25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சமய நல்லிணக்கத்தை முன்னெடுத்த துணைப் பிரதமருக்கு நன்றி!

🔥 Views : 8
👁 Reading Now : 65

9 நாட்கள் நாட்டில் பதற்றத்தை உண்டாக்கிய அமைச்சர்
மன்னிப்பு கேட்கவேண்டும் – -பொன்.வேதமூர்த்தி

கோலாலம்பூர், செப்.19:
நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களைப் பாதிக்கும் ஹலால் சர்ச்சை தொடர்பில் அம்னோ கட்சித் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி எடுத்துள்ள தைரியமான அதேவேளை சரியான நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதாக மலேசிய முன்னேற்றக் கட்சி தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மற்ற சமயங்கள் உன்னுடைய சமயத்தை மதிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறாயோ அதைப்போல நீயும் மற்ற சமயங்களை மதிக்க வேண்டும் என்பதைத்தான் இஸ்லாம் கற்பிக்கிறது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கும் தேசிய முன்னணித் தலைவருமான ஹமிடி, பொருத்தமான நேரத்தில் சமய நல்லிணக்கக் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

முஸ்லிம் அல்லாத உணவகங்கள் அனைத்தும் ஹலால் சான்றிதழைப் பெற வேண்டும் என்பதை அமைச்சரவை கட்டாயமாக்கவில்லை என்று துணைப் பிரதமர் அளித்துள்ள உறுதிமொழி, பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஹலால் சான்றிதழ் குறித்து இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ முகமட் நைம் மொக்தார் செப்டம்பர் 5-இல் அறிக்கை வெளியிட்டதில் இருந்தே முஸ்லிம் அல்லாதவர்கள் கலக்கத்திற்கும் குழப்பத்திற்கும் ஆளாகியிருந்தனர்; இந்த நிலையில் செப்டம்பர் 14-இல் இதுகுறித்துப் பேசிய அதே அமைச்சர், ஹலால் சான்றிதழ் குறித்து அமைச்சரவை விவாதிக்கவும் இல்லை; முடிவெடுக்கவும் இல்லை; மாறாக, இது தான் எடுத்த தன்னிச்சையான முடிவு என்றும் குறிப்பிட்டார்; ஆக 9 நாட்களுக்கு நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் மொக்தார் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.

சைவ உணவகங்களை நடத்துகின்ற இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர் உள்ளிட்ட அனைத்து முஸ்லீம் அல்லாத மக்களின் தேவைகள் மற்றும் அவர்களின் உள் உணர்வுகளைப் புரிந்து-கொள்வதில் அரசமட்டத்தில் பெரும் இடைவெளி இருப்பதாகத் தெரிகிறது. மொழி-பண்பாடு-கலாச்சாரம்-சமயம் உட்பட பன்முகத் தன்மை கொண்ட நாட்டில் தலைவர்களாக இருப்பவர்கள் இவற்றை யெல்லாம் ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்பதை நினைக்கும்-பொழுது மிகுந்த வேதனையாகவும் இருக்கிறது.

முன்னாள் தலைவர்கள் கட்டியமைத்த ஒருமைப்பாட்டு பாதையை, சுயநலப் போக்குகொண்ட ஒருசில தரப்பினர் மெல்ல அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்;

எது, எவ்வாறாயினும் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து பேசும்படி துணைப் பிரதமரை கேட்டுக் கொள்வதாகவும் ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி, தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles