29.7 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

முருகு சுப்பிரமணியனுக்கு ‘இலக்கிய வேந்தர்’ சரவணன் புகழ்ச்சரம்

-நக்கீரன்

நேதாஜி அரங்கம், அக்.24:
நாடு விடுதலை அடைந்த காலக்கட்டத்தில் இம்மலையக பத்திரிகைப் பயணத்தில், புதுப்பாதை சமைத்தவர் முருகு சுப்பிரமணியன் என்று அந்தத் எழுத்தாள ஆளுமைக்கு புகழ்ச்சரம் சூட்டினார் மலேசியத் தமிழிலக்கிய வேந்தரும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணை வேந்தருமான டத்தோஸ்ரீ டாக்டர் மு.சரவணன்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு தமிழ் அச்சு-இணைய ஊடகத்தாரை விருந்தோம்பலுடன் மஇகா தலைமையக நேதாஜி அரங்கத்தில் நேற்று(அக்டோபர் 23) சந்தித்த அவர், குற்றுரை ஆற்றியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு விடுதலை அடைவதற்குமுன், சாலை வசதிகூட இல்லாத அந்நாட்களில் தமிழ் நேசன் நாளிதழ்வழி, தேசிய உணர்வையும் சுதந்திர வேட்கையையும் தன்னுடைய எழுத்துப் படைப்புகளின்வழி ஏற்படுத்தியவர் முருகு சுப்பிரமணியன்.

குறிப்பாக, தோட்டப்புறத்து பாட்டாளித் தமிழ்க் குடும்பங்களில் இருந்து எண்ணற்ற இளைஞர்கள், எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் உருவாவதற்கு முருகு சுப்பிரமணியன் முன்னேர் உழவராக இருந்துள்ளார்.

அவர்தம் கைவண்ணமும் மைவண்ணமும் இணைந்து வெளிவந்த தமிழ் நேசன் ஞாயிறு மலர் ஒவ்வொன்றும் இலக்கியப் பெட்டகமாக மலரும். சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பவுன்பரிசுத் திட்டத்தை அவர் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

பாவேந்தர்பால் ஈடுபாடும் பற்றும் கொண்டிருந்த முருகு சுப்பிரமணியனுக்கு திராவிடத் தாக்கமும் இருந்தது; 1950ஆம் ஆண்டுகளில் திராவிடக் கொள்கை பட்டிதொட்டியெங்கும் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. 1953இல் தமிழகத்தில் இருந்து இம்மலையகத்திற்கு வந்த அவர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தொடக்ககாலத் தலைவராகவும் பாடாற்றி இருக்கிறார்.

அப்படிப்பட்ட அவருக்கு, தொடக்கத்தில் தமிழ் நேசனுடனான ஒட்டும் உறவும் பட்டும்படாமல் இருந்திருக்கிறது. இதனால், சிங்கை தமிழ் முரசு நாளேட்டில் இணைந்து பணியாற்றி, பின்னர் மீண்டும் தமிழ் நேசனுக்கு வந்த அந்த தேசிய நாளிதழை வழிநடத்தி இருக்கிறார் முருகு.

அத்தகைய இலக்கிய ஆளுமைக்கு மலேசியத் தமிழ் எழுந்தாளர் சங்கமும் முருகு சுப்பிரமணியனின் குடும்பத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த நூற்றாண்டு விழாவிற்கு, மலேசியத் தமிழ் ஊடகத்தினர் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வராமல் போனது டத்தோஸ்ரீ சரவணனுக்கு வருத்தமாக இருந்திருக்கக் கூடும்.

அதை வெளிப்படுத்த முனைந்த சரவணன், தீபாவளி விருந்தோம்பலுக்காக அனைவரையும் அழைத்துவிட்டு அவர்களை இடித்துரைப்பது பொருத்தமாக இருக்காதென்று கருதி, ‘கொண்டபின் குலம் பேசுதல்’ தகுமோ என்னும் பண்பு நலனை கருத்தில் கொண்டு, அப்படியே விட்டுவிட்டார் போலும்.

முருகு சுப்பிரமணியனை இதற்குமுன் அந்த அளவிற்கு அறிந்ததில்லை என்றும் அவரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டபோது, அவரைப்பற்றி அதிகமாக தெரிந்து கொண்டேன் என்றும் கூறிய சரவணன், முத்த பத்திரிகையாளர்கள் எத்தனையோ பேர் இங்கு வந்துள்ளனர் என்று ஒருசிலரின் பெயரையும் குறிப்பிட்டார்.

அந்தமட்டில் நில்லாமல், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட என்னை அழைத்து எவ்வளவு காலமாக பத்திரிகைத் துறையில் இருக்கிறீர்கள் என்று சரவணன் மேடையில் இருந்து கேட்டபொழுது, கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக இருப்பதாக நான் பெருமைமிகக் குறிப்பிட்டேன். அந்த மட்டில் நிறுத்திக்கொண்ட சரவணன் வேறு கருத்திற்குச் சென்றார்.

பிறகுதான் உணர்ந்தேன்; கால் நூற்றாண்டு காலமாக பத்திரிகைத் துறையில் இருக்கும் நீங்கள், முருகு சுப்பிரமணியனுக்கான நூற்றாண்டு இலக்கிய விழாவில் கலந்துகொள்ளும் எண்ணம் வரவில்லையா என்று சரவணன் கேட்காவிட்டாலும், அந்தக் கேள்விக்கான தாக்கம் அந்த இடத்தில் தொக்கி நிற்கிறது.

அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் அரசியல் தலைவர்கள், தமிழிலக்கியப் பெருமக்கள், அறிவியல் மேதையர் உட்பட சான்றோர் பெருமக்களைப்பற்றி அன்றாடாம் எழுதிவந்த நான், தமிழ் நேசன் நாளிதழில் முருகு சுப்பிரமணியனைப் பற்றியும் ஓர் அக்டோபர் 5-இல் எழுதி இருக்கிறேன்.

முருகு சுப்பிரமணியனைப் பற்றிய தகவலைத் திரட்டுவதற்காக, மலாயாப் பல்கலைக்கழக தமிழாய்வியல் பிரிவின் அப்போதைய பொறுப்பாளர்கள், தமிழ் நேசன் மேநாள் ஆசிரியர் விவேகானந்தன், முருகு சுப்பிரமணியனின் மகன் செல்வம் ஆகியோரிடம் பேசி கருத்தைத் திரட்டினேன். மின்னல் பண்பலை வானொலி நிருவாகி பார்த்தசாரதிதான் செல்வத்தின் தொடர் எண்ணைத் தந்து உதவினார். செல்வத்தின் மனைவியிடமும் அவரின் மாமனாரைப் பற்றி உசாவியதாக நினைவு.

இந்த நிலையில், முருகு சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள முழு ஈடுபாட்டுடன் எண்ணியிருந்த எனக்கு, அந்த நேரத்தில் கலந்துகொள்ள முடியாமல்போனது; அந்த வருத்தம் இன்னமும் தொடர்கிறது.

உரையாற்ற மேடையேறுமுன், அரங்கத்த்தில் மேசையைச் சுற்றி தன்னுடன் அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சரவணன், முருகு சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழாவில் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் அதிகமாக கலந்து கொள்ளாததைப் பற்றி சரவணன் கருத்து பரிமாரியது பின்னர் தெரியவந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles