
அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் இந்திய தொழில் துறைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் விண்ணப்பங்களும் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய அனுமதி வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், அந்நியத் தொழிலாளர் ஒதுக்கீட்டுக்கான அனைத்து விண்ணப்பங்களும் இனி Foreign Workers Centralised Management System (FWCMS)-இன் eQuota தளத்தின் மூலம் செயல்படுத்தப்படும் என்றார்.
இன்று முதல் அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் முதலாளிகள் மற்றும் நிறுவனங்கள் எந்த இடைத்தரகரின் உதவியும் இன்றி, நேரடியாக இணையவழி மூலம் விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களும் இதே நடைமுறையின் கீழ் எந்தவித தடையும் இன்றி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும், அவை அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு தேவையான அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதிலாக, புதிய நடைமுறையைப் பின்பற்றி சரியான முறையில் விண்ணப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், உண்மையில் தேவைப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை மட்டுமே விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“சிலர் ஆயிரம் தொழிலாளர்கள் தேவை என விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்கு 10 பேர் மட்டுமே தேவைப்படும். இதுபோன்ற தவறான தகவல்கள் கண்டறியப்பட்டால், அதன் பாதிப்பு முதலாளிகளுக்கே ஏற்படும்,” என்று டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் எச்சரித்தார்.


