
சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராமில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக (Child Sexual Abuse) உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அவற்றை உடனடியாக நீக்குமாறு மெட்டா (Meta) நிறுவனத்திற்கு இந்திய அரசு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இந்த விவகாரம் தொடர்பாக 7 நாட்களுக்குள் விரிவான விளக்க அறிக்கையையும் மெட்டா நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் கொண்ட அனைத்து கட்டண விளம்பரங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தளங்கள் நாட்டின் சட்டங்களையும் அரசின் விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றி, பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.



