29.2 C
Kuala Lumpur
Monday, July 6, 2026

Vetri

பெர்லிங் தொகுதியில் இந்தியர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் – டத்தோ அசோஜன்

🔥 Views : 4,580
👁 Reading Now : 65

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெர்லிங் தொகுதியில் இந்திய சமூகத்தின் வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும் என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ அசோஜன் தெரிவித்துள்ளார்.

வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

அதில் பெர்லிங் தொகுதி கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்ட அசோஜன், தேசிய முன்னணி வேட்பாளர் பன்னீர்செல்வம், தற்போது நம்பிக்கை கூட்டணியிடம் உள்ள அந்தத் தொகுதியை கைப்பற்றுவதற்காக தீவிரமாக பணியாற்றி வருவதாகக் கூறினார்.

தனது தலைமையிலான தேர்தல் இயந்திரம் பல்வேறு செயல்பாட்டு மண்டலங்களாக திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு குழுவும் வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவைப் பெறும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, இந்திய வாக்காளர்களிடையே தேசிய முன்னணிக்கு வலுவான ஆதரவைப் பெறுவதிலும், அதிகளவில் வாக்குப்பதிவை உறுதி செய்வதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

பெர்லிங் தொகுதியில் மலாய் மற்றும் சீன வாக்காளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய சமமாக இருப்பதுடன், இந்தியர்கள் சுமார் 14 விழுக்காடு வாக்காளர்களாக உள்ளனர். எனவே, இந்தக் கடும் போட்டி நிலவும் தொகுதியில் இந்தியர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

இதனால், இந்திய சமூகத்தினர் அனைவரும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி, திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என்று டத்தோ அசோஜன் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles