30.1 C
Kuala Lumpur
Friday, July 10, 2026

Vetri

ஒற்றுமை அரசின் சமூக பொருளாதார மறுமலர்ச்சித் திட்டங்கள்: ஜோகூர் தேர்தலில் இந்தியர்கள் பிரதமரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்!

🔥 Views : 4,192
👁 Reading Now : 60

மடாணி முழக்கத்துடன் ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்துகின்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சமூக-பொருளாதார மறுமலர்ச்சித் திட்டங்களை தொட்ர்ந்து அறிவித்து வருகிறார். இந்த நிலை தொடரவும் நாட்டின் அரசியல் நிலைத்தன்மை நீடிக்கவும் வேண்டுமென்றால், வரும் சனிக்கிழமை ஜூலைத் திங்கள் 11-ஆம் நாள் நடைபெற இருக்கின்ற ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் தங்களின் ஆதரவை சிந்தாமல் சிதறாமல் நம்பிக்கைக் கூட்டணிக்கு அளிக்க வேண்டும் என்று மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர் இந்திய தலைவர்களில் ஒருவரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜி.குணராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய சமுதாயம் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள் என்பதை நாடு அறியும். எதையும் தேசிய கண்ணோட்டத்துடனும் ஒருமைப்பாட்டு உணர்வோடும அணுகக் கூடியவர்கள் இந்தியர்கள்.

கடந்த 14-ஆவது நாடாளுமன்றம் மூன்று பிரதமர்களைக் கண்டதுடன், மலேசியாவில் நிலவிவந்த அரசியல் நிலைத்தன்மைக்கு ஊறு விளைவித்த அரசியல் முன்னெடுப்புகளும் அப்போது இடம்பெற்றன.

ஆனால், 2022 நவம்பர் 25-ஆம் நாள் அன்வார் பிரதமர் பொறுப்பை ஏற்றதுமுதல், நாட்டில் அரசியல் நிலைத்தன்மை மீண்டும் நிலைநாட்டப்பட்டு, வலுப்பெற்றும் வருகிறது. மலேசிய நாணயம் ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருவதே இதற்கு தக்க சான்றாகும் என்று குணராஜ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அன்வார், ஜப்பான், ரஷ்யா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அண்மையில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணங்களின் மூலம், நாட்டிற்கு பல்வேறு நன்மைகள் விளைந்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் 8 முதல் 10-ஆம் நாள் வரை மேற்கொண்ட மூன்று நாள் ஜப்பானிய பயணம், மலேசியாவின் 5வது பெரிய வர்த்தகக் கூட்டாளி நாட்டுடன் பல்வேறு இருதரப்பு அணுகூலங்களுக்கு வித்திட்டது; குறிப்பாக, பிரதமர் சனே தகாயிசியுடனான சந்திப்பு, வெ.150 பில்லியனுக்கு மேற்பட்ட வர்த்தக வாய்ப்பிற்கும் முதலிட்டிற்கும் வாய்ப்பேற்படுத்தியது. தவிர பாதுகாப்பு, சுகாதாரம், ஆற்றல் மாற்றம், சுற்றுச்சூழல், கல்வி மறுமலர்ச்சிக்கும் அது உதவியது.

அடுத்து மேற்கொண்ட ரஷ்யப் பயணம், மலேசிய-ரஷ்ய உறவை புதிய உச்சத்திற்கு கொண்டுசென்றது. குறிப்பாக, 20 ஆண்டுகளாக நீடிக்கும் எண்ணெய் வழங்கல் ஒப்பந்தம் புதிய பரிமாணத்தை எட்டுவதற்கு இப்பயணம் துணைபுரிந்தது.

பெட்ரோல், டீசல் பொது விநியோகம் சீராக நடைபெறவும் ‘Budi Madani’ போன்ற சலுகைத் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றவும் ரஷ்யப் பயணம் அடிகோலியது. அத்துடன், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டிற்கும் அதுவகுத்தது.

தொடர்ந்து பிரதமர் துர்க்மெனிஸ்தான் நாட்டிற்கு மேற்கொண்ட பயணம், உலகின் மிகப்பெரிய எரிவாயு புலங்களில் ஒன்றான Petronas-ஐ தொடர்ந்து இயக்குவதற்கான அடுத்தக்கட்ட நகர்விற்கு வாய்ப்பேற்படுத்தியது. மேலும், மலேசியாவின் உலகளாவிய ஆற்றல் துறையின் நிலையை உயர்த்தவும் உயர் திறன் கொண்ட பணியாளர் பயிற்சி, தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கும் துர்க்மெனிஸ்தான் பயணம் துணை புரிந்தது.

ஜூலை 1-ஆம் நாள் முதல் ஏடிஎம் பணப்பட்டுவாடா இயந்திரங்களில் மேற்கொள்ளப்படும் பணபரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணம் 1.00 வெள்ளி அகற்றப்பட்டதை மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.

அதைப்போல 94 பாதுகாப்பு அம்சங்கள்-பயண அணுகூலத்துடன் அறிமுகப்படுத்துள்ள புதிய கடப்பிதழ், அதுவும் வெ.350 கட்டணத்தில் 10 ஆண்டுகளுக்கான கடப்பிதழ் வழங்கல், மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டது;

புதிய BUDI Diesel திட்டத்தின்மூலம், டீசல் விலை ஒரு லிட்டர் வெ.2.10 என நிர்ணயம் செய்யப்பட்டது, சிறு-நடுத்தர-கனரக வாகன நடத்துவோருக்கு பெரும் அணுகூலமாக அமைந்துள்ளது.

அதைப்போல், மடாணிஅரசு புதிதாக மேற்கொண்டுள்ள UMP திட்டத்தின் மூலம், தகுதியான நோயாளிகளுக்கு மருந்துகள் இலவசமாக அவரவர் வீட்டிற்கே அனுப்பப்படுவதை சமூகம் பெரிதும் வரவேற்கிறது.

புதிய இலகு ரயில் திட்டம் எல்.ஆர்.டி.-3 (Shah Alam Line) அறிமுகம் ஆனதன் தொடர்பில், ஜூன் 29 முதல் ஜூலை 31 வரை, LRT3 மற்றும் Rapid KL பேருந்து பயணம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது; தவிர, LRT3 வழித்தடத்தில் உள்ள 6 நிறுத்துமிடங்களில் இலவச வாகன நிறுத்துமிட வசதியும் வழங்கப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மலேசிய ஒற்றுமை அரசு, தொழில்துறை வளர்ச்சியை இலக்காகக் கொண்டு நிகழும் 2026-ஆம் ஆண்டில் சிறு-குறு- நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சிக்காக வெ.15 பில்லியன் மதிப்பிலான திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் நிதி உதவி, வாடகைச் செலவு குறைப்பு, டிஜிட்டல் மாற்றம், மற்றும் பசுமை முதலீட்டு ஆகியவை அடங்கும்.

ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி சலுகையையும் ஒற்றுமை அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொதுமக்களின் நன்மைகருதி, கோலாலம்பூர்-பினாங்கு போன்ற இடங்களில் வர்த்தக கலாச்சார விழாக்களையும் மடானி அரசு நடத்தி வருகிறது.

இத்தகைய சமூக-பொருளாதார-வர்த்தக மறுமலர்ச்சித் திட்டங்கள் நாட்டு மக்களுக்காக தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றால், ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவளித்து பிரதமரின் கரங்களை இந்திய வாக்காளர்கள் வலுப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ஜி.குணராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles