
இந்திய சமூகம் மாற்றத்தைக் காண 60 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் எதிர்பார்த்த ‘மாற்றம்’ (Maatram) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டதாக, பிகேஆர் மத்திய தலைமைக் குழு உறுப்பினரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் தெரிவித்துள்ளார்.
ஜொகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், கடந்த சுமார் மூன்று ஆண்டுகளில் மடானி அரசாங்கம் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களையும் சீர்திருத்தங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
“60 ஆண்டுகளும் மூன்று ஆண்டுகளும் முற்றிலும் வேறுபட்ட காலகட்டங்கள். மாற்றத்தைக் காண ஆறு தசாப்தங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. வெறும் மூன்று ஆண்டுகளில் இந்திய சமூகத்தின் கல்வி, மனிதவள மேம்பாடு, தொழில்முனைவு, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற தெளிவான அரசியல் உறுதியை பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளிப்படுத்தியுள்ளார்,” என்றார்.
இந்திய சமூகத்தின் தேவைகளை திட்டமிட்ட முறையில் அணுகும் பல்வேறு அரசுத் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், நாட்டின் வளர்ச்சியில் எந்த சமூகமும் பின்தங்கக் கூடாது என்பதே மடானி அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜொகூர் மாநிலத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் குணராஜ், இது மாநில அரசைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் மட்டுமல்ல, மடானி அரசாங்கம் முன்னெடுத்து வரும் சீர்திருத்த மற்றும் மறுமலர்ச்சி திட்டங்கள் தொடர வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கும் முக்கியமான தருணம் என்றும் கூறினார்.
“பக்கத்தான் ஹரப்பானுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமல்ல; தற்போது நடைபெற்று வரும் சீர்திருத்தப் பயணத்தைத் தொடர்வதற்கான மக்களின் ஆணையாகும். மாற்றம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. அது பாதியிலேயே நிற்கக் கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஜொகூர் மாநில இந்திய சமூகத்தினர் பக்கத்தான் ஹரப்பானுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் தொடங்கியுள்ள ‘மாற்றம்’ பயணத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், அதன் பலன்களை எதிர்கால தலைமுறைகளும் அனுபவிக்க வழிவகுக்க வேண்டும் என்றும் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் கேட்டுக்கொண்டார்.



