
இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக மடானி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வெறும் தேர்தல் வாக்குறுதிகளாக இல்லாமல், கணிசமான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் செயல்திட்டங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் கெஅடிலான் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி தெரிவித்தனர்.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்கள், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு, 2023ஆம் ஆண்டு முதல் இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், மொழி, கலாசாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக 597.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தனர்.
அதில், மித்ரா (MITRA) வழியாக கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூக–பொருளாதார மேம்பாட்டிற்காக 450 மில்லியன் ரிங்கிட், இந்திய கல்வி நிறுவனங்களுக்காக எம்ஐஇடி (MIED) அமைப்பிற்கு 101 மில்லியன் ரிங்கிட், நாடு முழுவதும் உள்ள 344 இந்து ஆலயங்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மூலம் 46.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்திய சமூகத்தின் கல்வியை வலுப்படுத்துவதற்காக மட்டும் 182 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆறு தமிழ்ப்பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் அமைப்பதற்காக 30 மில்லியன் ரிங்கிட், 2023 முதல் 2026ஆம் ஆண்டு வரையிலான தமிழ்ப்பள்ளி பராமரிப்பிற்காக 130 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், டேப் கல்லூரிக்கு (Tafe College) 2026ஆம் ஆண்டில் 22 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகவும், 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 2 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் இது பத்து மடங்குக்கும் அதிகமான உயர்வாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சமூகக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மின் தகன மேடைகள் அமைப்பதற்காக 20 மில்லியன் ரிங்கிட், இந்திய சமூகத் தமிழ் மாநாடு, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மற்றும் பள்ளிகளுக்கான தமிழ்மொழி கற்றல்–கற்பித்தல் உபகரணங்களுக்கு 5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்திய சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நிதித் திட்டங்கள் மூலம் 555.6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
இதில் அமனா இக்தியார் மலேசியா (AIM) பெண்கள் தொழில்முனைவு திட்டத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட், TEKUN SPUMI திட்டத்திற்கு 271.6 மில்லியன் ரிங்கிட், Bank Rakyat Prihatin-i திட்டத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட், SME Bank-க்கு 50 மில்லியன் ரிங்கிட் மற்றும் Program MADANI Bestari திட்டத்திற்கு 34 மில்லியன் ரிங்கிட் அடங்குவதாக தெரிவித்தனர்.
597.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சமூக மேம்பாட்டு நிதியுடன், 555.6 மில்லியன் ரிங்கிட் பொருளாதார மேம்பாட்டு நிதியையும் சேர்த்தால், இந்திய சமூகத்திற்கு மடானி அரசு வழங்கியுள்ள மொத்த நன்மைகளின் மதிப்பு 1.1531 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தத் தொகையில் Sumbangan Tunai Rahmah (STR), Sumbangan Asas Rahmah (SARA), BUDI MADANI, குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பள்ளி உதவித்தொகைகள் மற்றும் அனைத்து இன மக்களுக்கும் வழங்கப்படும் பிற நலத்திட்டங்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தால் இந்திய சமூகமும் பயனடைந்துள்ளதாகக் கூறிய அவர்கள், ரிங்கிட்டின் மதிப்பு வலுப்பெற்றுள்ளதுடன், வேலையின்மை விகிதம் 2023ஆம் ஆண்டின் 3.4 விழுக்காட்டிலிருந்து 2025ஆம் ஆண்டு 2.9 விழுக்காடாக குறைந்துள்ளதாக தெரிவித்தனர்.
அதேவேளை, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 3.6 விழுக்காட்டிலிருந்து 5.2 விழுக்காடாக உயர்ந்துள்ளதுடன், நாட்டின் முதலீட்டு மதிப்பு 2023ஆம் ஆண்டின் 329.5 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 2025ஆம் ஆண்டு 426.7 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்ததோடு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் வலுப்பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வாக்களிக்கவுள்ள நெகிரி செம்பிலான் மக்கள், குறிப்பாக இந்தியர்கள், அரசியல் பேச்சுகளின் அடிப்படையில் அல்லாமல் அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைப் பதிவுகளின் அடிப்படையில் தங்களது முடிவை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும், மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தலைமையிலான நெகிரி செம்பிலான் மடானி அரசுக்கும் நம்பிக்கை கூட்டணிக்கும் மீண்டும் ஆதரவு வழங்குமாறு வலியுறுத்திய அவர்கள், அதன் மூலம் இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமூக மேம்பாடு, மொழி மற்றும் கலாசாரப் பாதுகாப்பிற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டனர்.



